Blessed are those who are persecuted for righteousness' sake
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.
மத்தேயு 5 :10.
+++++++++++++++++++++++++எனக்கு அன்பானவர்களே!
பரலோக வாழ்வுக்கு நம்மை தகுதிபடுத்துபவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
சமீபத்தில் ஐக்கிய மாகாணங்களில் சர்ச் ஆஃப் கிரைஸ்ட் நடத்திய ஒரு சுற்றாய்வில் கேள்விக்கு பதிலளித்த 87 சதவீதத்தினர் மரித்தப் பின் பரலோகத்துக்குச் செல்லும் நம்பிக்கை இருப்பதாக கூறினர்.
கிறிஸ்தவர்களாக இல்லாத மற்றவர்களும் கூட மரணத்துக்குப்பின் பூமியை விட்டு மேம்பட்ட ஒரு இடத்துக்குச் செல்வதாக நம்புகின்றனர்.
உதாரணமாக, இஸ்லாமியர்களுக்கு பரலோக பரதீஸுக்குச் செல்லும் நம்பிக்கை இருக்கிறது. சீனாவிலும் ஜப்பானிலுமுள்ள புத்த சமயத்தின் ப்யூர்லேண்ட் பிரிவினர், எல்லையில்லாத ஒளியாகிய புத்தரின் பெயரை “அமிதாபா” என்று சதா ஓதிக் கொண்டிருந்தால் ப்யூர் லேண்டில் அல்லது மேற்கத்திய பரதீஸில் மறுபிறவி எடுத்து முடிவில்லாத ஆனந்தத்தில் திளைத்திருக்க முடியும் என்று நம்புகின்றனர்.
உலகில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு விநியோகிக்கப்பட்டிருக்கும் புனித நூலாகிய பைபிள் வித்தியாசமான ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது. ஏதோ வேறு இடத்திற்கு செல்வதற்கான படியாக இந்தப் பூமியை பைபிள் குறிப்பிடவில்லை.
ஆனால் அது இவ்வாறு சொல்கிறது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொண்டு என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” சங்கீதம் 37:29 என்று இயேசு சொன்ன பிரபலமான கூற்றையும் கூட பைபிளில் நாம் காணலாம்:
“சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.”—மத்தேயு 5:5.
ஆம், பிசாசு என்னும் வலுசர்ப்பம் முற்றிலுமாக அழிந்த பின் புதிய வானமும், புதிய பூமியும் தோன்றும்.
ஆனால் நாம் இப்போது இருக்கும் பூமியில் நாம் வாசம் செய்வது தற்காலிகமானது என்ற பிரபலமான கருத்துப்படி பார்த்தால் மரணம் என்பது இன்பமயமான மறுமைக்கு செல்லும் வாசல்.
அப்படியானால் மரணம் நிச்சயமாகவே ஒரு ஆசீர்வாதமே. ஆனால் மக்கள் பொதுவாக மரணத்தை ஆசீர்வாதமாக கருதுகிறார்களா? அல்லது ஆயுளை நீட்டிக்கவே முயற்சி செய்கிறார்களா? மக்கள் ஓரளவு சுகத்தோடும் பாதுகாப்போடும் வாழும் போது மரிக்க விரும்புவதில்லை என்பதே உண்மை.
இருந்தாலும், வாழ்க்கையில் துன்பமும் துயரமுமே நிறைந்திருப்பதால் உண்மையான அமைதியும் மகிழ்ச்சியும் வேண்டுமென்றால் அதற்கு ஒரே இடம் பரலோகமே என்றே கருதுகின்றனர்.
நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா கூறுவது தான் இன்று பலருடைய கருத்தாகவும் உள்ளது: “பரலோக மகிமையை மனிதன் அடைய வேண்டும் என்பதுதான் கடவுளின் நோக்கம். . . . இந்தப் பரலோக பேரின்பத்தை அடைவதில்தான் மனிதனின் மகிழ்ச்சியே இருக்கிறது”என்று விளக்குகிறது.
வேதத்தில் பார்ப்போம்,
இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
வெளி 7 :14.
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.
மத்தேயு 5 :3
நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18 :3.
பிரியமானவர்களே,
பரலோகம் என்பது இளைப்பாறும் இடம். பரிசுத்தமான ஆத்துமாக்கள் பூமியில் தங்கள் பிரயாசங்களை எல்லாம் முடித்து மரித்ததும் சென்று இளைப்பாறி ஓய்வெடுக்கும் ஸ்தலமே பரதீசு
கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான் என்றெழுது. அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள் வெளி. 14:13 என பார்க்கிறோம்.
பரலோகத்தில் செல்லுகிறவர்கள் பூமிக்குரிய சகல பாடுகளையும், வேதனைகளையும், சோகங்களையும், வருத்தங்களையும், சம்பவங்களையும், பாவத்தையும், நோய்களையும், கவலைகளையும் விட்டு இளைப்பாறும் இடமே பரலோகமாகும்.
அங்கே இளைப்பாறுகிறவர்கள் பாக்கியவான்கள் என அழைக்கப்படுகின்றனர். ஏனெனில் அதற்குள் பூமியில் வாழும் அனைத்து மனிதர்களும் போவதில்லை. பாக்கியம் பெற்றோர் மட்டுமே அதில் இளைப்பாறு கின்றனர். கிறிஸ்துவிடம் வருகிறவர்கள் அந்த பாக்கியத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோக இராஜ்யம் அவர்களுடையது.
மத்தேயு: 5:2,
நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், பரலோகம் இராஜ்யம் அவர்களுடையது
மத்தேயு:5:10, என்று ஆண்டவர் கூறிய படியால் பூமியில் ஆவியில் எளிமையோடு வாழ்ந்து, துன்பப்பட்டாலும் நீதியின்படி நடந்து கர்த்தருடைய பிள்ளைகளாய் உண்மையும் உத்தமுமாய் வாழ்கிறவர்களே பரலோகத்தில் இளைப்பாறுவார்கள்.
பரலோகம் என்பது மகிழ்ச்சி நிறைந்த இடம் :- உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு சங் 16:11.
உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொன்னேன்
யோவா. 15:11. என்று கூறுகிறார்.
பரலோகத்தில் தேவன் நம்முடைய கண்ணீர் யாவும் துடைப்பதால் அங்கு மகிழ்ச்சியும் நித்திய பேரின்பமும் நமக்கு உண்டு. இரட்சிக்கப்பட்டவர்களும் நீதிமான்களும் எஜமானின் சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கும்படி அங்கு அனுப்பப்படுவார்கள். மத். 25:21,23.
இந்தப் பரலோக சந்தோஷத்தின் ஒரு துளியைத் தான் பூமியில் இரட்சிக்கப்பட்ட பொழுது நாம் அனுபவித்துள்ளோம்.
இதன் பூரண சந்தோஷத்தை அதற்குள் செல்லும் போதே நம்மால் அனுபவிக்க முடியும். பரலோகம் அழியாத நிரந்தரமான இடம். இந்த பூமிக்குரிய கூடாரமானது நிலையில்லாதது. அது அழிந்து போகக் கூடியது.
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும் தேவனால் கட்டப்பட்ட கைவேலையில்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்
2 கொரி. 5:1.
இந்த பூமியின் வாழ்வு நிலையில்லாததும் நிரந்தரமற்றதுமாகும்.
நம்முடைய ஜீவியக் காலம் இவ்வளவு என்று நம்மால் உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் பரலோக வாழ்வோ நித்தியமானதும் நிலையானதுமான படியால் அதன் ஜீவிய காலம் முடிவற்றது என நம்மால் கூற முடியும்.
முடிவில்லாத அந்த வாழ்க்கையை நம்மால் இப்பொழுது புரிந்து கொள்ள முடியாதென்றாலும் அங்கு சென்ற பின்பு புரிந்து கொள்ள முடியும்.
ஆகவே நாம் அவ்விடத்திற்கு செல்லும் வழியாம் இயேசுவை பின்பற்றி வாழுவோம். ஏனெனில் இயேசுவே அதற்கு வழியாக இருக்கிறார் ” நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”.
யோவான் 14:6 என்று வேதம் கூறுகிறது.
மேலும்
“அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை”
அப்போஸ்தலர் 4:12 என்று வேதம் விளக்குகிறது.
ஆகவே நாம் கர்த்தரை சார்ந்து இருந்து, அவர் கட்டளைகளை கைக்கொண்டு அவர் வழியில் நடக்கும் போது அவரோடு கூட முடிவில்லா ராஜ்ஜியத்தை சுதந்தரிப்போம்.
இந்த நம்பிக்கையில் நாம் ஒவ்வொரு நாளும் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்