Cast your burden on the LORD, and he will sustain you

Cast your burden on the LORD, and he will sustain you

கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” சங்.55:22

=========================
எனக்கு அன்பானவர்களே!
நம்மை விசாரித்து வழிநடத்தி வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

நியூஹெப்ரைட்ஸ் தீவுகளில் ஊழியம் செய்து வந்த ஜான் பேட்டன் எனும் நற்செய்திப் பணியாளர் அந்நாட்டு மொழியில் யோவான் சுவிசேஷத்தை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.

அந்த மொழியில் “விசுவாசம்” என்ற சொல்லுக்கு சரியான வார்த்தையைத் தேடிக் கொண்டிருந்தார். ஆனால் கிடைக்காதபடியால் மொழிப்பெயர்ப்பில் தடங்கல் உண்டாயிற்று. சோர்ந்துபோய் சரியான வார்த்தை கிடைக்கும்படி ஜெபித்துக் கொண்டிருந்தார்.

ஒருநாள் ஒருவர் தொலைவிலிருந்து கரடுமுரடான பாதைகளைத் தாண்டி நடந்து வந்து டாக்டர் பேட்டனுடைய அலுவலகத்தில் மிகுந்த களைப்புடன் உட்கார்ந்தார். அவர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, எதிரேயுள்ள நாற்காலியை இழுத்து தன் இரண்டு கால்களையும் அதன்மேல் தூக்கி வைத்துக் கொண்டார்.

என் உடல்பாரம் (வலிகள்) முழுவதையும் இந்த இரு நாற்காலிகளில் வைத்துவிட்டேன் என்று சொன்னார். “என் பாரம் முழுவதையும் வைத்திருக்கிறேன்” என்பதற்கு அவர் ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினார். பேட்டனுக்கு ஒரே சந்தோஷம்! இதுதான் நான் எதிர்பார்த்த வார்த்தை எனத் துள்ளிக் குதித்தார்.
அதை பயன்படுத்தி யோவான் சுவிசேஷத்தை மொழிப்பெயர்த்து முடித்தார்.

ஆம், விசுவாசம் என்றால் நம் பாரம் முழுவதையும் தேவன் மேல் வைத்து விடுவது தான். அவர் மேல் நம்முடைய வாழ்க்கையின் பாரத்தை வைத்துவிட்டால் நாம் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

நாம் உண்மையாய் அவரை நேசிக்கும் போது , நம்முடைய தேவைகள் அனைத்தையும் சந்திக்கிறாவராகவே இருக்கிறார். ஏற்ற நேரத்தில் நல் ஆலோசனைகளைக் தந்து நம்மை மகிழ்விப்பவர் நம் அன்பின் ஆண்டவர்.

வேதத்தில் பார்ப்போம்,

உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.
நீதி22 :19.

கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
எரேமியா 17:7.

ராஜா கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருக்கிறார்: உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.
சங்கீதம் 21 :7.

பிரியமானவர்களே,

நம் அருமை இரட்சகர் நம்மை ஆதரிப்பவர். அவர் நம்மை காண்பவர். நாம் தள்ளாடும்படி ஒருநாளும் தேவன் அனுமதிக்கவே மாட்டார்.

நம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு கூடவே இருக்கிறார். நாம் அவருடைய சொந்த ஜனங்களாயிருக்கிறபடியால், அவர் நம்மை மிகவும் நேசிக்கிறார்.

அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ண வேண்டும் என்றது போல நமது அனுதின ஜெபமும் இருக்கட்டும்.

நமது அன்பான ஆண்டவர் நம்மை தம் உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிற தேவன், நம் பாரங்கள், கவலைகள், வேதனைகள் பிரச்சனைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார்.

“அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள்”
(1பேதுரு 5:7) என்ற வசனத்தின்படி தேவன் மீது நம் பாரங்களை வைத்து விட்டு,

தெளிந்த புத்தியுடன், விழித்திருந்து ஜெபித்து, தேவனை விசுவாசித்து, எதிரியான பிசாசை ஜெயித்து வெற்றியுடன் வாழ்வோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நம் பாரங்களை மாற்றி விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணி வெற்றியுள்ள வாழ்வை அருள் செய்வாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *