உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். சங்கீதம் 128 :2
எனக்கு அன்பானவர்களே!
நம் கையின் பிரயாசங்களை வாய்க்க செய்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஊரெங்கும் ஓடி ஓடி வேலை தேடியும் ஒரு வேலையும் கிடைக்காததால் ஒரு நாடக கொட்டகை வாசலில் சோர்ந்து படுத்துக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். பசி அவனை வாட்டி எடுத்தது. கையில் 10 பைசா கூட இல்லை.
அப்போது பணக்காரர் ஒருவர் அந்த நாடக கொட்டகை அருகில் குதிரையில் வந்தார்.
டேய் தம்பி, நான் உள்ளே சென்று நாடகம் பார்த்து விட்டு வரும் வரை நீ என் குதிரையை பார்துக் கொள்கிறாயா ? நான் உனக்கு பணம் தருகிறேன் என்று அவர் கூறினார்.
அவனும் வேகமாக தன் தலையை அசைத்தான்.
நாடகம் பார்த்து விட்டு வெளியில் வந்த பணக்காரருக்கு ஒரே ஆச்சர்யம். அந்த குதிரை என்னுடையது தானா என்ற சந்தேகம் அவருக்கு வந்து விட்டது.
அந்த அளவிற்கு அந்த குதிரையை சுத்தப்படுத்தி வைத்திருந்தான் அந்த சிறுவன். பேசியதை விட அவனுக்கு 5 மடங்கு அதிகப்பணம் கொடுத்தார் அந்த பணக்காரர்.
மீண்டும் அடுத்த நாள் அதே இடத்தில் சிலர் வந்து அவனிடம் குதிரையை விட அவனும் அதை பாதுகாத்து, சுத்தப்படுத்தி வருவாயை ஈட்டினான்.
இது ஒரு நல்ல தொழிலாக இருக்கிறதே என்று நினைத்த அவன் அந்த தொழிலை தொடர்ந்து செய்ய, ஒரு கட்டத்தில் குதிரை லாயமே அமைத்து, வேலைக்கு ஆட்களை எல்லாம் அமர்த்தி தன் பணியை தொடர ஆரம்பித்தான்.
நாடகத்திலும், இலக்கியத்தின் மீதும் ஆர்வம் கொண்ட அவன், நாடகங்களை கவனிக்க தொடங்கினான். ஒரு கட்டத்தில் அவன் மிகப் பெரிய இலக்கிய மேதை ஆகிவிட்டான்.
அந்த சிறுவன் தான் உலகப் புகழ் பெற்ற இலக்கிய மாமேதை ஷேக்ஸ்பியர்
ஆண்டவரின் வார்த்தை கூறுகிறது, உங்களுடைய கையின் பிரயாசத்தை நீங்கள் சாப்பிட்டு ஆசீர்வாதமாய் வாழ்வது தான் தேவனுடைய சித்தம்.
‘நீ உன் கையின் பிரயாசத்தை சாப்பிடுவாய்’ என்ற உன்னத தேவனின் வாக்குத்தத்தம் உங்கள் வாழ்வில் முற்றிலுமாய் நிறைவேற வேண்டும் என்பது தான் ஆண்டவரின் விருப்பம்.
வேதத்தில் பார்ப்போம்,
பவுல் சொல்லுகிறார், ‘பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்’.
2.தீமோ.2:5.
‘தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும், அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்’
பிரச.5:19.
ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்’.
2.தெச.3:8
பிரியமானவர்களே,
நம்முடைய ஆண்டவர் காரணமில்லாமலும், திடீரென்றும் ஒருவரை ஆசீர்வதிப்பது இல்லை. கர்த்தருடைய வசனத்தின்படி நம்முடைய வாழ்வு அமையும் போது நிச்சயம் தேவனுடைய ஆசீர்வாதமும், ஐசுவரியமும் நம்முடைய வாழ்க்கையில் தங்கும்.
தேவனுடைய ஐசுவரியத்தை பெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று வேலை செய்யாத சோம்பேறித்தனமாகும். நாம் ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும் என வேதம் தெளிவாக கூறுகிறது.
இன்று குடும்பங்களில் வறுமைக்கு மற்றொரு காரணம், கொடுக்கப்பட்ட வேலையில் உண்மையாக இருப்பதில்லை. அதுமாத்திரமல்ல, மனநிறைவோடு செய்யாமல் ஏனோ தானோ என அசட்டையாக செய்தல்.
இன்னும் சிலரை நான் கண்டிருக்கிறேன், தான் விரும்பின வேலை கிடைக்கும் வரை மற்ற எந்த வேலையும் செய்ய மனதில்லாமல் சோம்பேறித்தனமாக வீட்டிற்குள்ளேயே இருப்பார்கள்.
அன்பானவர்களே, விதைக்காமல் எப்படி அறுக்க முடியும்? அதைப்போல் வேலைதேட பிரயாசப்படாமல் அல்லது வேலை செய்யாமல் தேவனுடைய ஆசீர்வாதங்களை எப்படி அனுபவிக்க முடியும்? சிந்தித்துப் பாருங்கள்.
ஆகவே, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் நமக்கு கொடுத்த பெலன், ஞானம், அறிவின்படியே கட்டாயம் வேலை செய்ய பிரயாசப்பட வேண்டும். அப்போது தான் தேவனுடைய வாக்குத்தத்தம் நம்மில் நிறைவேறும்.
சீமோன் பேதுரு, இயேசுவிடம் ‘ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன்’ என்றான்”. (லூக்.5:5)
மேலே குறிப்பிட்டுள்ள வசனம் பேதுரு தம் வாயினால் கூறின வார்த்தை ஆகும். இது தோல்விக்குரிய வார்த்தையே தவிர ஜெயத்திற்குரிய வார்த்தை இல்லை.
நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் வேலை செய்து பிரயாசப்பட வேண்டும். அதே வேளையில் நாம் செய்கிற வேலையோ, தொழிலோ தேவ சித்தப்படி செய்கின்றோமா? என்பது மிக மிக முக்கியம்.
பேதுரு இரவெல்லாம் பிரயாசப்பட்டும் ஒரு மீனும் அகப்படாமல் வெறுமையான வலை, படகோடு கரை திரும்பினார்.
எத்தனை பரிதாபம், நம்மில் அநேகர் வேலை செய்கிறார்கள் அல்லது தொழில் செய்கிறார்கள், அதனிமித்தம் தங்கள் பிரயாசத்தின் பலனையும் தேவனுடைய ஆசீர்வாதத்தையும் அவர்கள் காண முடியவில்லை.
இப்படிப்பட்டவர்கள் அடிக்கடி தங்கள் வேலையை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். தொழில் செய்கிறவர்களும் கூட நஷ்டமடைந்து பலவிதமான தொழிலில் ஈடுபட்டு எல்லாவற்றிலும் பின்னடைவு ஏற்பட்டு, தங்கள் விசுவாசத்திலிருந்து வழிவிலகிப் போகிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் தேவனை குறைகூறவும் தயங்குவதில்லை.
நாம் செய்கிற ஒவ்வொரு பிரயாசத்திலும், வேலையிலும், தொழிலிலும் தேவ சித்தத்தை கட்டாயம் அறிய வேண்டும்.
‘ஆழத்திலே தள்ளிக் கொண்டு போய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்’. லூக்.5:4
ஆண்டவர் கொடுத்த வார்த்தையின்படியே பேதுரு ஆழத்தில் தள்ளிக் கொண்டு போய் வலையைப் போட்ட போது அவன் கையின் பிரயாசத்தை தேவன் ஆசீர்வதித்தார் என வேதம் கூறுகிறது. ‘அதன்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்து போகத் தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்’. லூக்.5:6
இத்தனை நாளும் நாம் தேவ சித்தத்தை அறியாமலேயே செயல்பட்டுக் கொண்டிருந்தால் ஆண்டவர் நம்மோடு பேசுகிறார் என்பதை மறந்து விட வேண்டாம்.
நன்றாக ஜெபம் பண்ணி தேவனுடைய சித்தத்தை தெளிவாக அறிந்து, பெரிய வேலையோ அல்லது சிறிய வேலையோ, பெரிய தொழிலோ அல்லது சாதாரண தொழிலோ எதுவானாலும் சரி சந்தோஷமாக, ஆழமாக வேரூன்றி செய்யும் போது நாம் அறியாத உயர்வுகள் நம்மை தேடி வரும்.
படிப்படியாக கர்த்தர் நம்மை உயர்த்தி தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார். ஆகவே சோர்ந்து போகாதீர்கள். உங்கள் முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு.
நம் கர்த்தர் நம்முடைய கையின் பிரயாசங்களை வாய்க்க செய்கிற தேவன். நாம் கையிட்டு செய்யும் எல்லாவற்றையும் ஆசீர்வதிக்கிற தேவன்.
கர்த்தர் எனக்காக யாவற்றையும் செய்து முடிப்பவர் என்ற விசுவாச உறுதியோடு வாழ்ந்து, அவர் காட்டிய வழியில் நடக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்