Daily Manna 105

சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்: பொறாமையோ எலும்புருக்கி. நீதி14:30

எனக்கு அன்பானவர்களே,

இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

பொறாமை
இல்லாத மனிதன் இவ்வுலகத்தில் இல்லை என்று சொல்லும் அளவிற்குப் பொறாமை குணம் பெரும்பாலான மக்களிடம் குடி கொண்டிருக்கிறது.

நம்முடைய மகிழ்ச்சியை கெடுக்கும் தன்மை பொறாமை குணத்திற்கு உண்டு. நெருப்பு விறகை எரிக்கிறது. இரும்பில் இருக்கும் துரு தான் இரும்பு கருக்குகிறது.

இது போன்று நம் உள்ளத்தில் எழக் கூடிய தீய எண்ணங்களாகிய பொறாமை குணம் நம்முடைய வாழ்க்கையை நாசம் செய்து விடும்.
அதனால் தான் பொறாமையைத் தீ என்று ஆன்றோர்கள் கூறியுள்ளனர்.

இங்கு மூன்று பேர் கடலுக்கு ஒரு படகில் மீன் பிடிக்கப் போனார்கள். திடீரென்று புயலடித்து படகு உடைந்தது. ஒரு குட்டித் தீவில் ஒதுங்கினார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத அந்தத் தீவில் இவர்களுக்கு சாப்பாட்டுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

இறைவனை நோக்கி வேண்டினார்கள்.ஒரு தேவதை வந்து என்ன வரம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றது.

ஒருவன் நான் அமெரிக்காவில் தொழில் அதிபர் ஆக வேண்டும் என்றான்.தேவதை அவனை அனுப்பி வைத்தது.

இரண்டாவது ஆள் நான் இங்கிலாந்து நாட்டில் போய் தொழில் தொடங்க வேண்டும் என்றான்.வரம் கிடைத்துப் போய் விட்டான்

மூன்றாவது ஆள் என்ன கேட்கப் போகிறான் என்று தேவதை காத்துக் கொண்டிருந்தது. அவன் என்ன கேட்டான் தெரியுமா?

அவங்க இரண்டு பேரையும் மீண்டும் இந்தத் தீவுக்கே கொண்டு வரணும் என்றான்! வரம் கிடைத்துப் போன கொஞ்ச நேரத்தில் இருவரும் மீண்டும் அந்த தீவுக்கே வந்து விட்டனர்.

பொறாமை கொள்பவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்ளுகின்றனர்.

அணுகுண்டு போட்ட இடத்தில் 40 வருடம் புல் முளைக்காது, ஆனால் பொறாமைக்காரன் இருக்கிற இடத்தில் 400 வருடம் ஆனாலும் புல் முளைக்காது என்று பெரியவர்களின் வாக்கு .

நமக்கு எதிரி யார்? யார் யாரையோ இருக்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நம்முடைய உண்மையான எதிரி யார் என்றால் நம்மிடமுள்ள பொறாமை குணமே ஆகும்.

வேதத்தில் பார்ப்போம்,

கோபம் நிர்மூடனைக் கொல்லும். பொறாமை புத்தியில்லாதவனை அதம் பண்ணும்.
யோபு 5:2.

உக்கிரமம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது: பொறாமையோ வென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
நீதி 27:4.

வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளாமலும் இருக்கக் கடவோம்.
கலா 5 :26.

பிரியமானவர்களே,

மனுஷனின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. அந்த இரத்தம் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகிறது. பொறாமையோ எலும்பை உருக்கிப் போடுகிறதாம்.

அதாவது, பொறாமை குணமானது, மனித உயிரின் ஆதாரத்தையே நாசமாக்குகிறது என்கிறது வேதம்.

யாராவது தெரிந்தே தன் வாழ்வுக்கு தானே குழி பறித்துக் கொள்வார்களா என்ன? பொறாமைப்படுவோரின் நிலை அது தான்! சுகமான, மாசற்ற மனமே உடலுக்கு ஜீவன்.

சிலரின் வளர்ச்சியை, தாலந்துகளை, உயர்வை, வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமலே பொறாமை தோன்றுகிறது!

பொறாமைப்படுவோருக்கு அது வளர்ச்சியற்ற, அழிவுக்கான, வழியாகவும் மாறுகிறது!

யோசேப்பின் சகோதரர்கள், யோசேப்பின் மேல் பொறாமை கொண்டார்கள்! யோசேப்பு உயர்த்தப்பட்டார்! *வழி கொஞ்சம் கடினம்! ஆனால் சேர்ந்த இடம் சிம்மாசனம்!*

சவுல் கொன்றது ஆயிரம்! தாவீது கொன்றது பதினாயிரம்! என்ற இந்த சத்தம் கேட்ட போது! சவுலுக்குள் பொறாமை துளிர் விட்டது!

இத்தனைக்கும் தாவீது, இன்னும் ஓர் ஆடு மேய்ப்பவர் தான்! ஆனால், சவுல் ஓர் ராஜா! காலப்போக்கில் அந்தப் பொறாமை, கோபமாகி கொல்லத் துணிந்தது!

ஆனால் செத்தது யார்? பிழைத்தது யார்? சாதாரணமாக என்னப்பட்ட பொறாமை, மிகச் சாதாரணமாக சவுலை மட்டுமல்ல, அவன் சந்ததியையே வீணடித்து விட்டது!

அரச மேன்மையை பிடுங்கிக் கொண்டு போய் தாழ்மையான தாவீதின் கால்களில் போட்டது!

நம் நிலை எப்படி? யாரைப் பார்த்தாலும் தேவசாயலாக பார்த்தோமானால், பொறாமைக்கு வேலையே இல்லை! வேலை செய்யும் இடத்தில், சபை கூடி வரும் இடத்தில், சக விசுவாசிகள் மத்தியில் “பொறாமைக்கு” நாற்காலி போடாதீர்கள்!

பின்பு அது தான் நாட்டாமை செய்யும்! அது மிக பயங்கரமான மாம்சத்தின் கிரியை!

கர்த்தர் வரங்களை கிருபைகளை வல்லமைகளை பகிர்ந்து கொடுத்திருக்க, நாம் அவற்றில் நிச்சயமாக வேறுபடுவோம். அதைப் புரிந்து கொள்ள வேண்டும்!

சிலரால் நன்றாக ஜெபிக்க முடியும்! சிலரால் நன்றாக பிரசங்கிக்க முடியும்! சிலரால் நன்றாய்ப் பாடமுடியும்! *எதுவும் பெரிதல்ல! சிறிதும் அல்ல! யாரையும் காலியான பாத்திரமாக ஆண்டவர் வைக்கவில்லை!*

ஆனால் ஒவ்வொருவருக்கும் ஆவியில் ஒருமனம் வேண்டும்! நாம் கிறிஸ்துவின் உறுப்புக்கள் என்ற சிந்தை வேண்டும்!

*சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்து விட்டு, நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப் பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்.*
‌ 1 பேதுரு 2:2-3.

பொறாமை குணத்தை விட்டுவிட்டு வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை பார்த்து அதன்படி நடக்க முற்பட்டால் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் மகிழ்ச்சியும் பெற்றுக் கொள்ள ஆண்டவர் உதவி செய்வார்.

இப்படிப்பட்ட நல்லொழுக்கங்களை பின்பற்றி வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *