நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்கிறார்கள்; என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள். சங்கீதம் 35 :12
அன்பானவர்களே,
நன்மைகளை தருபவராம் நம் அருமை இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு சலவைத் தொழிலாளியிடம் ஒரு நாயும்,ஒரு கழுதையும் இருந்தது. ஒரு நாள்
சலவைத் தொழிலாளி ராத்திரி களைப்போடு தூங்கி கொண்டிருக்கும் போது , வீட்டிலுள்ள கதவை
உடைச்சிட்டு ஒரு திருடன் வந்து விட்டான்.
சலவைத் தொழிலாளி நடப்பது தெரியாமல்
நல்ல தூக்கத்திலிருக்க, திருடனைப் பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு
இருந்தது.
“சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்” என்று
நாய் குரைக்கவில்லை.
அதைப் பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான்,
குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது
சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம் என்று கத்த
ஆரம்பிச்சுது.
சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.
தூக்கத்தில் இருந்து எழுந்த
சலவைத் தொழிலாளி ஒரு கட்டையை எடுத்து பளார் பளார்னு
கழுதையின் தலைல அடிபோட்டு விட்டு,
கூறு கெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு
இருக்குன்னு கழுதையை திட்டிவிட்டு திரும்பவும் படுத்து விட்டான்.
ஹி ஹி ஹி என்று சிரித்துக் கொண்டிருந்தது நாய்.
வேதம் சொல்லுகிறது, நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்.
1 பேதுரு 2 :20. என்று குறிப்பிடுகிறார்.
எனக்கு அருமையானவர்களே! நாமும் பிறருக்கு நன்மையே செய்தாலும் சில பல நேரங்களில் இது போல தான் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறோம்
பரவயில்லை , ஆனாலும் நாம் நன்மை செய்வதில் ஒரு நாளும் சோர்ந்து போக வேண்டாம்.
ஏனென்றால் பரிசுத்த வேதாகமம் சொல்கிறது,
“நன்மை செய்யப் படியுங்கள்.”
ஏசாயா 1:17 என்று ஆண்டவருடைய வார்த்தை நமக்கு போதிக்கிறது.
அப்படியே, “நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாதிருங்கள்” கலா 6:9. என்றும் நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.
மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற நன்மையை செய்வது கர்த்தருக்கு பிரியமான நற்கிரியையாகும். தேவன் தான் நம்மில் நன்மை செய்யும்படியான விருப்பத்தையும் செய்கையையும் உண்டாக்குகிறவர்.
வேதத்தில் பார்ப்போம்,
சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்து போகாமலிருங்கள்.
2 தெசலோனி 3:13
நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம்.
கலா 6:9.
நன்மை செய்பும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
நீதி3:27.
பிரியமானவர்களே,
நாம் நன்மை செய்வதிலே ஒரு நாளும் சோர்ந்து போகக் கூடாது. நன்மை செய்வது என்பது, நிலத்தில் விதை விதைப்பதற்கு ஒப்பாகும்.
விதையை, விதைக்கிற விவசாயி, அந்த விதைகள் முளைத்தெழும்பும் என்கிறது மட்டுமல்ல, அது முப்பதும், அறுபதும், நூறுமாக பலன் தரும் என்று எதிர்பார்ப்போடும், விசுவாசத்தோடும் விதை விதைக்கிறான்.
நீங்கள் நன்மை செய்யும் போது, பிறருக்கு கைமாறு கருதாமல் கொடுக்கும் போது, நிச்சயமாகவே கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்வார்.
கர்த்தர் நல்லோர் மேலும், தீயோர் மேலும் மழையை பெய்யப் பண்ணுவார். ஆகவே, நிச்சயமாகவே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். நன்மை செய்வது என்பது, உங்களுடைய ஆசீர்வாதத்திற்காக, நீங்கள் விதைக்கிற விதையே ஆகும்.
கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்து கொள்.
சங்கீதம் 37 :3. என்று வேதம் கூறுகிறது.
ஆம் பிரியமானவர்களே நாம் நன்மை செய்யவே படைக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்து பிறருக்கு நன்மை செய்வோம்.
இயேசு நன்மை செய்கிறவராய் இருந்ததை போல, அவரின் பிள்ளைகளாகிய நாமும் நன்மை செய்கிறவர்களாய் இவ்வுலகில் வாழ்ந்து காட்டுவோம். கர்த்தரின் ராஜ்யத்தையே சுதந்தரித்துக் கொள்ளுவோம்.
ஆமென்.