மோசம் போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். 1 கொரி15 :33
எனக்கு அன்பானவர்களே!
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
“ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” என்பது பழமொழி. இதற்கு மனித வரலாற்றில் பல ஆதாரங்கள் உண்டு.
நமது ஆதி தாயாகிய ஏவாள், தன் வீழ்ச்சிக்கு, தன் கணவனின் வீழ்ச்சிக்கு, மட்டுமல்ல மொத்த மனித இனத்தின் வீழ்ச்சிக்கே காரணமானாள்.
ஏன் என்றால்? முதலாவது, ஏவாள் சாவைத் தரும் உரையாடலில் ஈடுபட்டாள்.
“அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாவதே சாவதில்லை.
ஆதி 3:4-5 என்றது”.
அன்பான சகோதரி, உன்னைப் போல் ஒரு பெண், கடவுளின் சாயலில் படைக்கப்பட்டப் பெண், கணவனின் அன்பில் மகிழ்ந்திருக்கும் ஒரு பெண் தனிமையில் இருக்கும் போது பேசத் தகாத ஒருவனுடன் பேசுகிறாள். இதுதான் ஏவாளின் முதல் குற்றம்.
அவளுடைய இரண்டாவது குற்றம் வீண்பேச்சில் ஈடுபட்டது.
“அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்”
நீதி 17:17.
ஆம், அறிவற்றப் பேச்சு, அதிகப் பேச்சு, அவசியமற்றப் பேச்சு மிகவும் ஆபத்தானது.
தாவர இயல் விஞ்ஞானி ஒருவர் இப்படி கூறுகிறார். பூக்கள் மிகுதியாய் இருக்கும் மரத்தில் கனிகள் குறைவாய் இருக்கும் என்கிறான். அப்படியே அதிகப் பேச்சு அறிவை மழுங்கச் செய்யும்.
“பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனம் உண்டாகும்படி பேசுங்கள்”
எபேசியர் 4:29.
காவலாளி கோட்டையைக் காப்பது போல் நம் நாவைக் காப்போம்.
பலர் ஏவாளும் வீண் பேச்சுக்கு இடங்கொடாதிருந்தால் மனுக்குலம் பிழைத்திருக்கும்.
“நீங்கள் தோட்டத்தில் உள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” என்றது சர்ப்பம்.அவள் உண்மையான பதிலைத் தான் சொன்னாள்.
“நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம், ஆனாலும், தோட்டத்தின் நடுவிலுள்ள விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்; நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாமென்று சொன்னார் என்று சொன்னாள்” ஆதியாகமம் 3:2,3.
ஏவாள் இத்துடன் தன் உரையாடலை நிறுத்தியிருந்தால் நலமாய் இருந்திருக்கும்.
ஆனால் தொடர்ந்து தந்திரத்தால் பேச்சுக்கு செவிகொடுத்தாளே, அதுதான் தவறு. ஆதாமும் ஏவாளும் பரிபூரண வாழ்க்கையை, அழிவில்லா வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம்.
அதற்கு அவருடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்க வேண்டும். வெளியேறினால் மரணம்-வெறும் உடல் மரணமன்று, அதை விடக் கொடிய ஆன்மீக மரணம்.
இதோ, சாத்தானின் வஞ்சக வார்த்தைகள்.
“அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது”
ஆதியாகமம் 3:4,5.
தேவர்களைப் போலவா! நானும் ஆதாமும் தேவர்களைப் போல.! அவள் நெஞ்சில் ஒரு கிளர்ச்சி, ஒரு படபடப்பு! ஆம், பெண்களாகிய நாம் எவ்வளவு சுலபமாக உணர்ச்சி வசப்பட்டு விடுகிறோம்! அந்த உணர்ச்சி வேகத்தில் நாம் செய்யும் தவறுகள் தான் எத்தனை எத்தனை!
தேவர்களைப் போல்… தேவர்களைப் போலவா??… இரத்தத்தில் சூடு
ஏறுகிறது. உரையாடல் நிற்கிறது. தந்திரமான மெளனம்! இனி பேசத் தேவையில்லை. வாழ்வின் பெருமை அவளை ஆட்கொள்கிறது… இல்லை, இல்லை, ஆட்டிப் படைக்கிறது.
“மாமிசத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகள் எல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல;அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்”
1 யோவான் 1:16.
கண்களின் இச்சை! மெதுவாய் மரத்தைப் பார்க்கிறாள் ஏவாள்.என்ன அழகு! கனி கவர்ச்சிக்கிறது… மயங்கி நிற்கிறாள்! சகோதர, சகோதரியே, உன் கண்கள் எதைக் கண்டு
மயங்குகின்றன? சினிமாக் காட்சிகளா? தொலைக்காட்சி விளம்பரப்படுத்தும் கவர்ச்சிப் பொருட்களா? சகோதர,
சகோதரிகளே, கண்களின் இச்சைக்கு இடங்கொடுக்க வேண்டாம். ஏவாளின் வீழ்ச்சி உன்னை எச்சரிக்கட்டும்.
இதோ! ஏவாளின் கண்கள் மயங்குகின்றன. நரம்புகள் துடிக்கின்றன. மாமிசம் ஏங்குகின்றது! நாவில் நீர் சுரக்கின்றது. அழகிய விரல்கள் நடுக்கத்துடன் கனியை நோக்கி விரைகின்றன.
விலக்கப்பட்ட கனியைப் பறிக்கின்றன. அந்தோ! அடுத்த வினாடி மரணத்தின் சாயல் இறைவனின்
சாயலை மேற்கொள்கிறது.
இறைமகள் விழுகிறாள். தன்னோடு தன் கணவனையும் இழுத்துக் கொண்டு விழுகிறாள்.
வேதத்தில் பார்ப்போம்,
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்
நீதிமொழி:18 :21.
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற் போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
நீதி 10 :19.
தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
நீதி21 :23.
பிரியமானவர்களே,
தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனியாய் இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்”
ஆதியாகமம் 2:18.
ஆம், ஆதாமுக்கு ஏற்ற துணையாய் இருக்கவே இறைவன் ஏவாளைப் படைத்தார்.
அவளுக்குக் கொடுக்கப்பட்ட முதல் பட்டம் வாழ்க்கைத் துணைவி. அதாவது அவள் அவனுக்குப் பங்காளி, அன்பு மனைவி, இல்லத்தரசி. அப்படியானால், இறைவனால் நியமிக்கப்பட்ட ஒரு மனைவியின் குணவியல்புகள் என்ன? ஆதாம் கூறினான்:
“இவள் என் எலும்பில் எலும்பும், மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்” ஆதியாகமம் 2:23.
மனித உடலில் எலும்பின் பங்கு என்ன? அதுதான் உடலைத் தாங்குகிறது.
அவ்விதமே மனைவியே, நீ உன் கணவனையும் குடும்பத்தையும் உன் ஜெபத்தினாலும், தேவன் தருகிற நல்ல ஆலோசனையினாலும் தாங்க வேண்டும்.
இரண்டாவது, எலும்பு உடலின் முக்கியமான உள் உறுப்புகளைப் பாதுகாக்கிறது. அதேபோல் உன் கணவனின் நற்பெயர், நன்மதிப்பு போன்றவ்ற்றை உன் நன்னடத்தையினால் நீ பாதுகாக்க வேண்டும்.
மாம்சத்தின் பங்கு என்ன? உடலுக்கு உருவத்தைக் கொடுப்பது மாம்சம்.
அப்படியே தன் குடும்பத்திற்கு ஓர் அழகான உருவத்தைக் கொடுக்க வேண்டியவள் மனைவி.
சகோதரியே, உன் குடும்பத்தின் உருவம் என்ன? இன்று எப்படி இருக்கிறது??
“குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துகளைப் பார்க்கிலும் உயர்ந்தது” நீதிமொழிகள் 31:10,
முத்துக்களிலும் விலைமிக்கவள்! யார் இவள்? இவள் தான் பண்புமிக்க இல்லத்தரசி, கணவனின் நம்பிக்கைக்குரிய இல்லத்தரசி.
பிள்ளைகளின் பாராட்டுக்குரிய இல்லத்தரசி. நல்ல பெண், நல்ல மனைவி, நல்ல தாய். இவள் “சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்” நீதிமொழிகள் 31:20.
நல்ல பெண்… சிறுமையானவர்களுக்கு இரங்கும் பெண்… ஏழைகளுக்கு உதவும் பெண். சகோதரி, நீயும் ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் பெண்தானா? அல்லது ஏழைகளைக் கண்டால் காணாதவளைப் போல் ஒதுங்கிப் போகிறாயோ?
இந்த நல்ல பெண், “இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரம் கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படி அளக்கிறாள்” நீதிமொழிகள் 31:15.
ஆம், தன் வீட்டாருக்கு மட்டுமன்று, தன் வேலைக்காரருக்கும் ஆகாரம் கொடுக்கிறாள்.
ஆனால் இன்று சில பெண்கள் செய்வதென்ன? கெட்டுப் போனதும் உதவாததுமானவைகளைக் கொண்டு வேலைக்காரருக்கு படி அளக்கிறார்கள்.
கடவுளுக்கு பயப்படும் பெண் முத்துக்களைப் பார்க்கிலும் விலைமிக்கவள்!
“அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது. அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே செய்கிறாள்”
நீதிமொழி: 31:11,12.
“செளந்தரியம் வஞ்சனையுள்ளது; அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்” நீதிமொழி:31:30.
கர்த்தருக்குப் பயப்படுகிற பெண்… இது தான் திருமதி முத்துக்களிலும் விலைமிக்கவளின் வாழ்க்கை இரகசியம்.
கணவனாலும் பிள்ளைகளாலும் புகழப்பட்டதின் இரகசியம். அவள் கர்த்தராலும் புகழப்படுகிறாள். ஆகவே தான் திருமறையில் அழியா இடம் பெற்று விட்டாள் இவள்.
அன்பான சகோதரியே, நீங்களும் இப்படிப்பட்ட ஒரு பெண்ணாய் இருக்கத் தீர்மானிப்பீர்களா?
உலக கவர்ச்சியையும்,
ஆகாத சம்பாஷணைகளையும் விட்டு விட்டு புத்தியுள்ள ஸ்திரீயைப் போலவும், குணசாலியான ஸ்திரியாகவும், கர்த்தரால் புகழப்படும் ஸ்திரீயை போலவும் வாழ்ந்து நமது குடும்பத்தை கர்த்தருக்குள்ளாய் கட்டமைக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் யாவரையும் தகுதிப்படுத்துவாராக
ஆமென்.