Daily Manna 109

வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு. நீதி 19 :14

எனக்கு அன்பானவர்களே!

பூரண அழகுள்ளவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

இரு நண்பர்கள் தொலைக் காட்சியிலே திரைப்படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் வந்த நடிகையைப் பார்த்து ஒருவன் சொன்னான், ‘இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள், இவளை நான் திருமணம் செய்து கொண்டால் என் வாழ்க்கையே சொர்க்கம் போலாகிவிடும்’ என்றான்.

இன்று பெரும்பாலான வாலிபர்களின் எதிர்கால கனவெல்லாம் மிக அழகான பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்பதே! அவர்களுடைய கணக்குப்படி திருமணம் என்றால் அதில் அழகே பெரும்பான்மையான இடத்தை பெறுகிறது.

இந்த நடிகனைப் போல, நடிகையைப் போல வாழ்க்கை துணை அமைய வேண்டுமென்று எதிர்ப்பார்க்கின்றனர். அவர்களின் எண்ணம் அழகான துணைவர் கிடைத்து விட்டால் வாழ்வே சொர்க்கமாக மாறிவிடும் என்பதே.

ஆனால் நடிகைகளையும், நடிகர்களையும் மணந்தவர்களின் வாழ்க்கை சொர்க்கமாகாமல், நரகமாகி திருமணமான சில மாதங்களிலேயே கோர்ட் வாசலில் விவாகரத்திற்காக வருவதை கேட்டிருப்பீர்கள்.

அப்படியென்றால் ஒரு அழகியையோ, அழகனையோ திருமணம் செய்து கொண்டால் குடும்ப வாழ்வு சொர்க்கமாகும் என்பது தவறான கருத்து என்பது தெளிவாகிறதல்லவா…!?

இருபது வயதில் இருப்பது போலவே யாரும் வாழ்நாளெல்லாம் இருப்பதில்லை. அழகு மாறக்கூடியது.. ஆகவே இந்த வெளிப்புற அழகே உண்மையானது என்றோ, நிம்மதி தரக்கூடியது என்றோ நிரந்தரமானது என்றோ எண்ணி விடாதீர்கள்.

அழகியான ஒரு பெண் ஒருவனுக்கு வாழ்க்கை துணைவியாகி விட்டால் அவன் வாழ்நாளெல்லாம் சந்தோஷம் என எண்ண வைப்பது சாத்தானின் தந்திரம். அழகினால் மட்டும் ஒரு மனிதனின் குடும்ப வாழ்வு திருப்தியடையாது.

வாழ்க்கை துணையை வெளிப்புற அழகிற்காக மட்டுமே திருமணம் செய்தவர்கள் நாளடைவில் அவர்களிடம் உள்ளான அழகு காணப்படாதா என ஏங்க ஆரம்பிப்பர். நல்ல குணநலன்களும், அன்பும், மன்னிப்பும், விட்டுக் கொடுக்கும் தன்மைகளுமே ஒரு தம்பதியினரின் வாழ்வை இறுதி வரை இணைக்கும்.

உலக வாழ்வில் தேவன் உங்களுக்குக் கொடுத்த பெரிய ஆசீர்வாதம் குடும்பம். கர்த்தருடைய பரிபூரணமான ஆசீர்வாதங்களைக் காணக் கூடிய மிக முக்கியமான இடம் குடும்பம் தான்.

உங்களுடைய குடும்ப வாழ்க்கை வெற்றிகரமாக அமைவதற்கு முதல்படி கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் தான். ஒவ்வொரு சின்ன சின்ன காரியத்திலும் ஆண்டவரை உங்களுக்கு முன்பாக நிறுத்தி அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி பண்ணுங்கள்.

அவரிடத்தில் அனைத்து காரியங்களுக்காகவும் விசாரியுங்கள். கர்த்தர் உணர்த்துகிறதை நிறைவேற்ற ஆர்வம் கொள்ளுங்கள். இதுவே கர்த்தருக்குப் பயப்படும் பயம்.

வேதத்தில் பார்ப்போம்,

மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.
நீதி 11 :22.

செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
நீதி 31 :30.

மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக் கொள்ளுகிறான்.
நீதி 18 :22.

பிரியமானவர்களே,

நீதிமொழிகள் 31-ஆம் அதிகாரத்தில் காணப்படும் குணநலன்களோடு ஒரு பெண் கிடைப்பாள் என்றால் எத்தனை அருமையான ஒரு குடும்பமாக இருக்கும்!

திருமணமாகாத வாலிபரும் சரி, பெண்களும் சரி, கர்த்தரிடம் எனக்கு இந்த தகுதிகளோடு ஒரு பெண் வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். வெளிப்புற அழகையல்ல, ஒரு இரட்சிக்கப்பட்ட மகனையோ, மகளையோ எனக்கு தாரும் ஆண்டவரே என்று ஜெபிக்க வேண்டும்.

சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள் என்ற வசனத்தின்படி, கர்த்தரை நேசிக்கிற மனைவிவோ, கணவனோ கிடைக்கும் போது, அவர்கள் அழகற்றவர்களாக இருந்தாலும், மிகுந்த ஆசீர்வாதமானவர்களாக, உள்ளான அழகுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களின் இருதயத்தின் அழகு அவர்களுடைய முகத்தில் நன்கு தெரியும்.

‘குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது’ என்று வசனம் சொல்கிறது.

அழகுள்ள ஸ்திரீயை கண்டுபிடிப்பவன் யார் என்று கேட்காமல், குணசாலியான ஸ்திரீயையே முத்துக்களை பார்க்கிலும் விலையுயர்ந்தவள் என்று வேதம் கூறுகிறது.

‘புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு’ – நீதி 19:14 என்றும் வேதம் கூறுகிறது. அப்படிப்பட்டதான மனைவியை எனக்கு தாரும் என்று தேவனிடம் இந்த வசனத்தின் வார்த்தைகளை சொல்லி ஜெபிக்க வேண்டும்.

அப்போது தேவன் நிச்சயமாக நீங்கள் விரும்பும் அந்த வகையான மனைவியை அல்லது -கணவனை உங்களுக்கு நிச்சயம் தருவார்.

திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் வாலிப சகோதரனே, சகோதரியே, நீங்கள் கேட்கலாம், அப்படியென்றால் எனக்கு வரும் மனைவியோ, கணவனோ அழகாக இருக்க வேண்டும் என நினைப்பது தவறா? என்று.

அப்படி நினைப்பது தவறு இல்லை. ஆனால் அழகானவள், அல்லது அழகானவன் என்ற ஒரே காரணத்திறகாக மட்டும் திருமணம் செய்யக் கூடாது.அது மிக குறுகிய நாட்களில் அந்த அழகை ஆராதிக்கும் நமது பண்பு மறைந்து போகும்.

அதன்பின் அழகையல்ல, அன்பையும் அழியாத குண நலன்களையுமே தேடுவோம்.

ஆகவே வரன் தேடும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அந்த வேலையை கர்த்தரிடம் கொடுத்து விடுங்கள்.

நேர்த்தியாய் நீங்கள் கேட்ட நல்ல குணத்தோடும், கேட்காத அழகோடும் நல்ல ஆசீர்வாதமான வாழ்க்கை துணையை நீங்கள் எதிர்பார்ப்பதற்கு மேலான ஆசீர்வாதங்களை தருவார்.

ஒருவேளை இதை வாசிக்கும் பலர் குடும்பமாய் வாழ்ந்து கொண்டிருந்தாலும் கர்த்தர் தந்த கணவனுக்காக, மனைவிக்காக நன்றி கூறுவோம்.இன்னும் நமது குடும்பத்தை ஜெபத்தோடும் அழகோடும் நேர்த்தியாய் நடத்தி பக்தியாய் வாழ்ந்து பாக்கியமாய் முடித்து நித்திய ராஜ்ஜியத்தில் பங்கடைவோம்.

இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God