வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். சங்கீதம் 119:113
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு முனிவரை தேடிப் போனான்.
“சாமி! நான் உழைச்சி ரொம்ப களைப்படைஞ்சிட்டேன். இருந்தாலும் இன்னமும் என்னுடைய வேலைகளெல்லாம் முடியலே! பாக்கியிருக்கு.
எல்லா வேலையையும் செஞ்சு முடிக்கிற சக்தி எனக்கு கிடைக்கணும்.
அதுக்கு நீங்க தான் வழி பண்ணனும்!” –ன்னு வேண்டிக்கிட்டான்.
“அந்த சக்தியை உனக்கு நான் கொடுத்து விடுவேன். இருந்தாலும் அது உனக்குப் பெரிய தொந்தரவா இருக்குமே!” –என்றார் முனிவர்.
“இருந்தாலும் பரவாலே சாமி… நீங்க எனக்கு அந்த சக்தியை கொடுங்க!” –ன்னு கேட்டுக்கிட்டான்
முனிவர் பார்த்தார். இவனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசம் பண்ணினார்.
அவன் அந்த மந்திரத்தை கூறி முடிச்சதும் ஒரு பெரிய பூதம் அவன் முன்னாடி வந்து நின்னது.
“ஐயா… நான் உங்களுக்காக எல்லா வேலையும் செய்யக் காத்துகிட்டிருக்கேன். ஆனா ஒரு நிபந்தனை.நீங்க நாள் பூராவும் எனக்கு இடைவிடாம எனக்கு ஏதாவது வேலை கொடுத்துக்கிட்டே இருக்கணும்.
அப்படி எனக்கு வேலை இல்லாமே போச்சினா…உங்கயே முழுங்கிடுவேன். அவ்வளவு தான்!” என்றது.
அவனும் சரி-ன்னு ஒத்துக்கிட்டான்.
‘சரி வேலை குடு ’-என்றது பூதம்.
எனக்கு ஒரு பெரிய மாளிகை வேணும் என்றான்.
அடுத்த வினாடி அவன் கண் முன்னாடி ஒரு பெரிய மாளிகை உருவாயிட்டது.
அவன் அடுத்தடுத்து வேலை சொல்ல அனைத்தையும் அந்த நொடியே செய்து முடித்தது.
இனிமே சொல்றதுக்கு ஒண்ணுமில்லை. பிறகு பூதம் இவனை முழுங்கறதுக்கு வந்தது… இவனும் ஓட்டம் எடுத்தான்.
அவன் ஓடிப்போய் அந்த முனிவரின் காலிலே விழுந்தான். அவரும் அதுக்கு ஒரு உபாயம் சொன்னார்.
அவன் அந்த பூதத்துக்கிட்டே மாளிகைக்கு பக்கத்துல ஒரு பெரிய இரும்புத் தூண் உருவாக்க சொன்னான். பிறகு அந்த தூண்ல ஏறி இறங்க சொன்னான்.
நான் போதும்-ன்னு சொல்ற வரைக்கும் இதயே பண்ணு-ன்னு சொல்லிட்டு அவர் தேவைபடும் போது மட்டும் அந்த பூதத்த பயன்படுத்திகிட்டார்.
இந்த பூதம் போன்று தான்
நமது சிந்தனையும். நாம் சரியாக செயல்படுத்தவில்லை என்றால் தவறான சூழலில் நாம் சிக்கித் தவிக்கும் படி ஆகிவிடும்.
வேதத்தில் பார்ப்போம்,
எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
மத்தேயு 15 :19.
அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
ரோமர் 1:21.
வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
சங்கீதம் 119 :113.
பிரியமானவர்களே,
இன்றும் தங்கள் சிந்தனைகளினாலே வீணரானாவர்கள் நம்மில் அனேகர் உண்டு. உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. பல இன்னலுக்கும் , வேதனைக்குள்ளும் சிக்கி தவிக்கின்ற மக்கள் ஏராளம்.
ஆனால் நாம் கர்த்தருடைய வார்த்தையை தியானிக்கும் போது உண்டாகும் சமாதானம், உள்ளத்தை சுத்தமாக்குகிறது. வசனத்தால் உண்டாகும் ஆறுதலும், மனமாறுதலும் நம்முள் ஒளிந்திருக்கும் நல்ல எண்ணங்களை தட்டி எழுப்புகின்றன.
இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது
இவ்வாறு கூறுகிறார்.
நான் வீண் சிந்தனைகளை வெறுத்து, வேதத்தில் பிரியப்படுகிறேன்’’ என்று கூறுகின்றார்.
நம்முடைய சமாதானத்தைக் குலைக்கக் கூடிய சிந்தனைகளை நம்மை விட்டு விலக்கி, சமாதானத்தைக் கெடுக்கும் காரியங்களை நாம் வெறுக்க வேண்டும்.
தேவ சமாதானம் உடையவர்களாய் வாழ வேண்டும். தேவ சமாதானமே எல்லாப் புத்திக்கும் மேலானது.
‘‘தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது. இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்’’ கொலோ.3:5
சண்டை, பொறாமை, வைராக்கியம், பகை உணர்வு, விரோதம், கோபம், அசுத்தம், கொலை, வெறி… போன்றவை மனிதனை அசுத்தமாக்கி… தேவனிடமிருந்து விலக்கி வைக்கிறது.
மேலும் தேவன் அருளிய சமாதானத்தையும் குலைத்து விடுகிறது.
கடல் அலைகளை போல அலை அலையாய் துன்பங்கள் வந்தாலும், இறைவன் கொடுத்த சமாதானத்தை இழந்து விடாதீர்கள்.
ஏனெனில் துன்பம் என்ற அலை இறை நம்பிக்கை என்ற கற்பாறையில் மோதும் போது சிதறிப் போகின்றன. எத்தகைய அலை அடித்தாலும் பாறை அசைவதில்லை. பிரச்சினைகளை உடைத்தெறிந்துக் கொண்டே இருக்கிறது.
உம்மை உறுதியாய் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர்’.
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு’’ சங்.119:165
கர்த்தருடைய வசனத்தைத் தியானித்து அதன்படி ஜீவித்தால் தேவன் நமக்கு நதியைப் போன்ற சமாதானத்தை தருவார்.
இத்தகைய சமாதானத்தை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.