கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்து கொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது. சங்கீதம் 33:12
அன்பானவர்களே,
சகலத்தையும் நன்மையாக செய்து முடிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு நிலக்கரி சுரங்கத்தில், கடவுள் மீது பய பக்தியுள்ள ஒரு ஏழை மனிதன் வேலை செய்தார். அவர் இயேசுவைப் பற்றி பேசினதினால், மற்ற தொழிலாளர்கள் எல்லோரும் அவரைக் கேலியும், பரியாசமும் செய்தார்கள்.
அவரை அளவுக்கு அதிகமாக வேலை வாங்கி கொடுமைப்படுத்தினார்கள். இந்த ஏழை மனிதனின் மனம் சோர்ந்து போய், “கர்த்தர் தான், என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தாரோ? நான் இத்தனை நிந்தையும், அவமானத்தையும் பரியாசத்தையும் அனுபவிக்கிறேனே” என்று சொல்லி வேதனைப்பட்டார்.
ஒருநாள் அவர் அங்குள்ள மற்ற தொழிலாளர்களோடு அமர்ந்து சாப்பிட உட்கார்ந்த போது, திடீரென்று எங்கிருந்தோ ஒரு நாய் ஓடி வந்து, அவருடைய சாப்பாட்டுப் பையைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினது.
அதைப் பார்த்ததும் மற்ற தொழிலாளர்களெல்லாரும் கேலி செய்து சிரித்தனர். “உன் சாப்பாட்டை காப்பாற்ற இயேசு வருவாரா?” என்று சொல்லி பரியாசம் செய்தார்கள்.
அந்த மனிதன் பையை பறிப்பதற்காக, நாயை துரத்திக் கொண்டு ஒடினார். சுரங்கத்திலிருந்து அவர் வெளியே வந்ததும், திடீரென்று பெரிய சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார். அந்த சுரங்கம் இடிந்து விழுந்து கிடந்தது.
அவரைக் கேலி செய்த மற்ற தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி, குற்றுயிராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
அப்பொழுது தான், கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே செய்கிறார் என்பதை, அந்த மனிதன் கண்டு தேவனை மகிமை படுத்தினான்.
வேதத்தில் பார்ப்போம்,
தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
எபேசியர் 5 :21.
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 1 :2.
இவ்விதமான சீரைப் பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.
சங்கீதம் 144 :14.
பிரியமானவர்களே,
யோசேப்பு தன் வாழ்வில் தனது சொந்த சகோதரராலும், போர்த்திபாரின் மனைவியினாலும் எத்தனையோ பாடுகளையும் வேதனைகளையும் துன்பத்தையும் அனுபவித்திருந்தான்.
சிறையிலும் வாழ்ந்தான். இப்படி எத்தனையோ காரியங்களை கடந்து வந்தும் அவனது மனநிலை குழப்பம் அடையவில்லை. “நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் கர்த்தரோ அதை நன்மையாக முடியப் பண்ணினார்”
என்று தீமை செய்த சகோதரரிடமே யோசேப்பு கூறினார்.
இதற்குக் காரணம், யோசேப்பு கர்த்தரோடு எப்போதும் இருந்தது தான். அதனால் தேவனும் யோசேப்போடு எப்போதும் இருந்தார். யோசேப்பு சிறையில் இருந்த போதும் தேவன் யோசேப்போடு இருந்தார் என்று
ஆதியாகம்:39:21-ல் வாசிக்கிறோம்.
நாம் தேவனோடு இருக்கிறோமா? தேவனோடு நாம் இருந்தால் நமது வாழ்வையும் யோசேப்பின் வாழ்வைப் போலவே உன்னதமான வாழ்வாக பிறருக்கு ஆசீர்வாதமான வாழவாக தேவன் மாற்ற வல்லவராய் இருக்கிறார்.
தேவனோடு வாழாமல் நமது இஷ்டம் போல் வாழ்வதால் தான் இவ்வுலக பாடுகளையும், வேதனைகளையும் மேற்கொள்ள முடியாமல், அதற்குள் மூழ்கி விடுகிறோம்.
அல்லது, அவற்றிற்குத் தப்பிக் கொள்ளுவதற்கான வழியையும் நாமே தேடிக் கொள்கிறோம். இதன் விளைவாக விரக்தி நிலைக்கும், வாழ்வதால் என்ன பயன் என்ற சோர்வுக்கும் தள்ளப்படுகிறோம்.
தேவன் நம்மை அவ்விதமான ஒரு வாழ்வுக்காய் அழைக்கவில்லை. எல்லாச் சூழ்நிலைகளிலும் வெற்றி கொண்டு வாழவே அழைத்துள்ளார்.
அந்த வெற்றியானது நம்மால் முடியாது.உலகை ஜெயித்த அவராலேயே முடியும். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும், திடன் கொள்ளுங்கள்’ நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார் இயேசு கிறிஸ்து” யோவான் 16:33.
வரும் நாட்களில் ஒரு புதிய தீர்மானங்களோடு பிரவேசிப்போம். தேவனோடு வாழ்வதைத் தெரிந்து கொள்வோம். அப்போது தேவனும் நம்மோடு வாழுவார். எல்லா சூழ்நிலைகளையும் அவரோடு சேர்ந்து எதிர் கொள்வோம், அவருக்காக பணியாற்றுவோம். தேவன் சகலவற்றையும் நன்மையாய் மாற்றுவார்.
“நீர் வேறு,நான் வேறு அல்ல.நாம் இருவரும் ஒருவரே” என்று இயேசுவோடு இணைந்து வாழுவோம்.
நமக்காக யாவையும் நன்மையாக செய்து முடிப்பவர் நம்மோடு கூட இருந்து நம்மை வழிநடத்தி காப்பாராக.
ஆமென்.