Daily Manna 118

அவர் {இயேசு}அவர்களை நோக்கி: பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். லூக்கா:12:15

எனக்கு அன்பானவர்களே!

ஆசீர்வாதத்தின் ஊற்றும், உறைவிடமும், காரணருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

உலக பிரசித்தி பெற்ற தேவ ஊழியரான பில்லிகிரகாம் தனது சுய வரலாற்று புத்தகத்தில் ஒரு நிகழ்ச்சியை
பின்வருமாறு எழுதியிருந்தார்:

“உலகிலுள்ள மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இருந்த ஒரு மனிதர் தனது ஆடம்பரமான பங்களாவிற்கு என்னையும் என் மனைவி ரூத்தையும் மதிய உணவிற்கு அழைத்திருந்தார்.

எழுபத்தைந்து வயதான அவர் நாங்கள் அங்கு இருந்த நேரம் முழுவதும் கண்ணீர் சிந்த கூடிய நிலையிலேயே இருந்தார்.

“உலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் மிகுந்த வேதனையுள்ளவனாக நான் இருக்கிறேன்,
உலகில் நான் எங்கு எந்த இடத்திற்கு போக வேண்டுமென்று விரும்பினாலும் என்னால் அங்கு செல்ல முடியும். எனக்கு சொந்தமாக ஆகாய விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களும் இருக்கின்றன.

எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய எல்லா காரியங்களும் என்னிடம் உள்ளன. ஆனால் நான் எப்போதும் நரகத்திலிருப்பதை போலவே உணர்கிறேன்” என்றார். நாங்கள் அவருக்காக ஜெபித்து விட்டு கடந்து வந்தோம்.

அன்று மதியம் அப்பகுதியிலுள்ள 70 வயது நிரம்பிய போதகர் ஒருவரை சந்தித்தோம். அவர் உற்சாகத்தினாலும், கிறிஸ்துவின் மேலும், பிறரின் மேலும் கொண்டிருந்த அன்பினாலும், ஐக்கியத்தாலும் நிறைந்திருந்தார்.

அவர், “என்னுடைய பெயரில் இரண்டு பவுண் நாணயங்கள் கூட இல்லை. ஆனால் நான் மிகுந்த மகிழ்ச்சியோடிருக்கிறேன்” என்றார். அவர் எங்களை விட்டு சென்ற பிறகு, ‘இவ்விருவரில் அதிக ஐசுவரியமுள்ளவர் யார்’ என்று நான் மனைவி ரூத்திடம் கேட்டேன். எனினும் எங்கள் இருவருக்கும் அதற்குரிய விடை தெரியும்” என்று தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியிருந்தார்.

பிரியமானவர்களே,
நாம் பல ஆசீர்வாதங்களை பெற்றிருப்பவர்களாக வாழலாம். ஆனால் நாம் மன சமாதானத்தோடு ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பதே மெய்யான ஆசீர்வாதமாகும்.

வேதத்திலே சாலமோன் ராஜாவின் வாழ்வில் ஏராளமான ஐசுவரியங்களும், ஆசீர்வாதங்களும் நன்மைகளும் காணப்பட்டன. அவருடைய வாழ்விலிருந்த செழிப்பு கொஞ்சம் நஞ்சம் அல்ல.

ஆனால் அவர் வாழ்வை குறித்து சொன்னது, ‘எல்லாம் மாயையும் மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது’ என்பதே. அவர் தங்க தட்டில் சாப்பிடும் அளவிற்கு ஐசுவரியத்தை பெற்றிருந்த போதிலும் விரக்தியுள்ள வாழ்க்கையையே வாழ்ந்து முடித்தார்.

வேதத்தில் பார்ப்போம்,

பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
லூக்கா 12:15

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
மத்தேயு 16 :26.

தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.
பிரசங்கி: 5:19

பிரியமானவர்களே,

பணம், பொருள், புகழ், ஆஸ்தி, அந்தஸ்து இவைகளையே உலக மக்கள் ஆசீர்வாதமென நாடி தேடுகின்றனர். ஆனால் உண்மையான ஐசுவரியம் என்பது நமக்கு என்னென்ன செழிப்புகள் இருக்கிறது என்பதல்ல,

நமக்குள்ளே இருதயத்தில் காணப்படும் சந்தோஷம், நிறைவு திருப்தி, நற்குணம் இவையே உண்மையான ஆசீர்வாதங்களாகும். ஒருவரது செழிப்பான வாழ்வை மற்றவர் பார்க்கும் போது பசுமையான புல்வெளி போல தோன்றும்.

ஆனால் அது உண்மையல்ல, “ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல” என்று இயேசுகிறிஸ்து கூறினார்.

கிறிஸ்துவை ஏற்று கொண்ட ஒவ்வொருவருக்கும், தேவன் காட்டும் வழி, உலகப் பிரகாரமான ஆஸ்தியும், மேன்மையும் புகழும், அந்தஸ்தும் அல்ல, ‘இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள்;

இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்’ மத்தேயு 6:32-33 என்று இயேசுகிறிஸ்து கூறினார்.

நம் வாழ்வில் தேவனுடைய ராஜ்ஜியத்தை தேடும் போது, அவர் நமக்கு கொடுக்கும் சந்தோஷம், மன நிறைவு, சமாதான வாழ்வு ,நிறைவான அமைதி வேறு எவற்றாலும், யாராலும் தர முடியாது. அதுவே மெய்யான ஆசீர்வாதமாகும்.

கர்த்தர் தரும் ஐசுவரியத்தில் வேதனை இருக்காது. கண்ணீர் இருக்காது, துயரம் இருக்காது. பில்லிகிரகாம் சந்தித்த ஐசுவரியவானிடம் ஐசுவரியம் இருந்தது, பொருள் இருந்தது, ஆனால், அதோடு கூட வேதனையும், கண்ணீரும் இருந்தது.

ஏனெனில் அது தேவனில்லாத ஆசீர்வாதம். ‘கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்’
நீதிமொழி: 10:22 என்று வேதம் கூறுகிறது.

முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடும் போது, நிச்சயமாகவே தேவன் நமக்கு வேதனையில்லாத நித்திய ஆசீர்வாதத்தை கட்டளையிடுவார்.

இத்தகைய ஆசீர்வாதங்களை நாமும் பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *