நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் :136 :23
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு பெரிய பங்களாவில், அதன் உரிமையாளரும் அவரது பேரக் குழந்தைகளும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்தப் பெரியவரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. “தாத்தா! குழம்பு காரமாக இருக்கிறதா?” என்று கேட்டனர் விபரம் தெரியாத குழந்தைகள்.
தாத்தா அவர்களிடம், “என் அன்பு செல்வங்களே! இந்த உணவு மிகவும் சுவையாக இருக்கிறது.
ஒரு காலத்தில் எங்கள் ஓலை வீட்டில் எந்த வசதியும் கிடையாது. உடைந்த தட்டு இருந்தால் கூட அதிலாவது சாப்பிட்டிருக்கலாம். அது கூட இல்லாததால், சிமெண்ட் தரையைக் கழுவி அதிலே என் அம்மா எங்களுக்கு சாப்பாடு போடுவார்கள். நாங்கள் அதிலே பலவேளைகளில் அப்படி சாப்பிட்டிருக்கோம்.
ஆனால், இப்போது அம்மா இல்லை. அவளது மகனான நான் இவ்வளவு பெரிய பங்களாவில், வெள்ளித் தட்டில் நெய்ச்சாதம் போட்டு, அதையும் இந்த விலை உயர்ந்த மேஜையின் மீது வைத்து சாப்பிடுகிறேன். இந்த வளர்ச்சிக்கு காரணம் யார் என்று எண்ணினேன்.
என் தாய், தந்தை தங்கள் தாழ்மையான நிலையிலும் ஆண்டவரை உண்மையாய் நோக்கி பார்த்தார்கள். அதன் பலனைத் தான் இன்று நாங்கள் அனுபவித்து மகிழுகிறோம்.
“கர்த்தர் எங்கள் தாழ்மையை நினைத்தருளினார். என் இளவயதின் பரிதாபமான நிலையை நினைத்துப் பார்த்தேன். என் கண்கள் நன்றியை கண்ணீராக கொட்டுகின்றன,” என்றார்.
என் அன்பு இதயங்களே! நம்முடைய பழைய நிலைமையை எக்காரணம் கொண்டும் மறந்து விடக்கூடாது. அதில் துளியளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும், அது கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டது.
அந்நேரத்தில் ஆண்டவருக்கு நன்றி சொல்ல மறவாதீர்கள்.
வேதத்தில் பார்ப்போம்,
என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.
யாத்தி: 20:6.
கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள் மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.
சங்கீதம் 103:17.
நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 136 :23
பிரியமானவர்களே,
வேதத்தில் தாவீது ராஜாவுடைய வாழ்க்கையிலும் எத்தனையோ விதமான தாழ்வான நிலைமைகள் இருந்தது; ஈசாயின் பிள்ளைகளில் ஒன்றை ராஜாவாக அபிஷேகம் பண்ணும்படி சாமுவேல் தீர்க்கதரிசி சென்றபோது, தாவீது மாத்திரம் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான்.
அந்த விருந்திலே அவனைப் பற்றி யாரும் நினைக்கவில்லை. ஆனால், காத்தர் தாவீதை நினைத்தருளினார்.
பிற்பாடு தாவீதைக் கொன்று போடவென்று சவுல் விடாமல் துரத்திக் கொண்டிருந்தான். சவுலினால் பல திசைகளிலுமிருந்து வந்த நெருக்குதல்கள் ஏராளம்;
இதினிமித்தம், ராஜாவாக அமரவேண்டிய தாவீது மலைகளிலும் குகைகளிலும் தனது நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது. தாவீது வாழ்விலும் பசியினாலும், தாகத்தாலும், மன வேதனையினாலும் தாழ்த்தப்பட்டான். ஆனால் கர்த்தரோ, அந்தத் தாழ்மையிலும் அவனை நினைத்தார்.
தாவீதுடைய மன்னிக்கும் குணத்திற்கும், விட்டுக் கொடுக்கும் தன்மைக்கும் முன்பதாக சவுலின் பகைமை தோற்றுப் போனது. நம்மை தாவீதுடன் ஒப்பிடமுடியாவிட்டாலும், தேவன் நம் எல்லோரையும் ஒன்று போலவே நேசிக்கிறவர்.
அன்று அந்த ஏழை தாய் தன் குழந்தைகளுக்கு சாப்பாடு போட ஒரு பாத்திரம் கூட இல்லாமல் போனாலும் ஆண்டவர் மேலுள்ள அன்பு சற்றும் குறையாமல் இருந்தது.
வேதம் சொல்லுகிறது
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;
நீதி 28:20.என்று கூறுகிறது.
தாவீதை அவனுடைய தாழ்விலே நினைத்த கர்த்தர், நம்மை ஒருபோதும் மறவார். உறவுகள் நம்மை மறக்கலாம். வாழ்வில் ஏற்படும் வேதனைகள், துக்கங்கள், இழப்புகள், கடன் சுமைகள், வியாதிகள் நம்மைக் கீழே விழத் தள்ளுவது போல் தோன்றலாம் .
ஆனால் அந்தத் தாழ்வு நிலையிலும் கர்த்தர் நம்மை கைவிடமாட்டார்.
அவருடைய கிருபை பெரிது. ஆகையால், நம் வாழ்வில் என்னதான் பிரச்சினைகள் நம்மை நெருக்கித் தள்ளினாலும், தாழ்வில் நம்மை நினைத்தவரை எண்ணி, தைரியத்தோடு எழுந்து முன் செல்லுவோமாக.
நம்மை தாழ்வில் நினைப்பது மட்டுமல்ல. நம்மை உயர்த்தி உன்னதத்தில் வைத்து அழகு பார்ப்பவர் நம் அன்பின் ஆண்டவர்.
அவரின் உன்னத அன்பில் மூழ்கி அவரின் கிருபைகளை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.