Proverbs 21 6

Daily Manna 125

பொய் நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம் போலிருக்கும். நீதிமொழி: 21 :6

எனக்கு அன்பானவர்களே!

சத்தியத்தின் வழியில் நம்மை நடத்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

இருவர் ஒரே ஊரில் துணி வியாபாரம் செய்தனர். ஒருவன், வெளி மாநிலத்தில் இருந்து தரம் குறைந்த துணியை வாங்கி வந்து, “சூப்பரான துணி” என்று பொய் சொல்லி அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தான்.

அவனது பேச்சில் மயங்கியவர்கள் அதிக விலையை பார்க்காமல், துணி வாங்கினர். குறுகிய காலத்திலேயே அவன் பெரும் செல்வந்தன் ஆனான். பணம் வர வர, தீய செயல்களையும் செய்ய துவங்கி விட்டான்.

இன்னொருவனோ, உள்ளூர் துணிகளை நியாயமான லாபத்திற்கு விற்று தன் வாழ்க்கையை நீதியின் பாதையிலேயே நடத்தி வந்தான் . அவனும் அவன் பிள்ளைகளும் ஆண்டவருக்கு சாட்சி நிறைந்த வாழ்வை வாழ்ந்து மகிழ்ந்து வந்தார்கள்.

நாட்கள் ஓடியது. அதிக விலைக் கொடுத்து, தரம் குறைந்த துணியை வாங்கிய மக்கள், அது விரைவில் அதன் quality இழந்து, கிழிந்ததால், செல்வந்தனின் வீட்டை முற்றுகையிட்டனர்.

அவன் பெயர் அந்த ஊரில் கெட்டுப் போனது. அவன் கடைக்கு மக்கள் செல்வதை வெறுத்தனர். வியாபாரம் குறைந்தது.
அவனின் மக்களோ? ஊதாரித்தனமாக தீய வழிகளில் நடந்து தகப்பன் பொய் வார்த்தையால் சேர்த்து வைத்திருந்த செல்வங்களை எல்லாம் அழித்துப் போட்டார்கள்.

குடும்பம் நடுத்தெருவிற்கு வந்தது. “பொய் சொல்லி திரட்டும் பெரும் செல்வமானது சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரண்டு வேதனையில் விடுகிற பரிதாபமாக விடுகிற மூச்சைப் போலாகும் என்று வேதம் கூறுகிறது .

வெறும் பகட்டின் மூலம் சுலபமாய் சேர்த்த செல்வம் விரைவிலே குறைந்து போகும். உழைப்பின் மூலம் சிறுகச் சிறுக சேகரிப்பவனோ செல்வத்தைப் பெருக்குவான்.

ஆனால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது, பகல் நேர சூரியனின் உஷ்ணம், வனாந்தர செடியை மேல் படவே அது வாடி வதங்கி
அதன் அழகான வடிவம் அழிந்து போகிறது போலவே, பொய் நாவினால் சம்பாதித்த செல்வமும் கரைந்து போகும்.

வேதம் சொல்லுகிறது
நீதிமொழி:28:20-ல்
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான். பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது.

இதைப் புரிந்து கொண்டு, ஒவ்வொரு நாளும், கடவுளின் பிள்ளைகளாகிய நாம் நீதியான, நேர்மையான வழியில் நாம் செல்வத்தை சம்பாதித்து கொள்ள வேண்டும் . அது நமக்கு பல நன்மைகளை கொண்டு வரும்.

வேதத்தில் பார்ப்போம்,

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
லூக்கா 16:10.

கபடு செய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய் சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.
சங்கீதம் 101 :7.

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
நீதி 12 :22.

பிரியமானவர்களே,

முகஸ்துதி செய்வதில் சிலர் பேர் பெற்றவர்கள். ஒருவரைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி அவர்களைப் பற்றிக் கேவலமாய் பேசிக் கொண்டிருப்பார்கள்.

திடீரென அந்தக் குறிப்பிட்ட நபர் வந்ததும், “உங்களைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தோம். உங்களுக்கு ஆயுசு நூறு” என்று சொல்லி பேச்சையே தலைகீழாய் மாற்றி, அவரைப் புகழ்ந்து, புகழாரம் பாடத் தொடங்கி விடுவர்.

இச்செயலை நாம் முகஸ்துதி என்று மரியாதையாகக் கூறினாலுங் கூட, மறுபுறத்தே இது பொய் நாவுக்குச் சமானம் என்றே சொல்ல வேண்டும். காரணம், நாம் அவரைப் பற்றி உள்ளுக்குள் ஒரு எண்ணம் வைத்துக் கொண்டு, வெளியில் நாசூக்காகப் அவருடைய நற்பெயரை கூறுகிறோம். அல்லவா.

சவுல் கடவுளின் சொல்லை மீறி, கொழுத்த மிருகஜீவன்களை அழிக்காமல் பிடித்துக் கொண்டு வந்து பின்னாலே ஒளித்து வைத்து விட்டு, அவற்றை ஆண்டவருக்கே பலியிடுவதற்காக தனது ஊழியர் கொண்டு வந்ததாகப் பொய் சொல்லுவதைக் காண்கிறோம்.

கொழுத்தவைகளை ஏன் வீணாய் அழிக்க வேண்டும்; அவற்றை உயிரோடே பிடித்தால் நல்லது என்பதே சவுலின் உள்ளான எண்ணம். அந்த உண்மை வெளியான போது, தான் தேவனுக்காக நல்லதொரு எண்ணத்திலேயே அதைச் செய்ததாக அப்பட்டமான பொய்யைச் சொல்லி பேச்சை மாற்றி சமாளிக்கப் பார்க்கிறான்.

பொய் நாவை தேவன் வெறுக்கிறார்.
‘உண்மை வழி நடந்திடும் உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை, கண்கள் அவன் மீது வைத்திடுவார், கருத்தாய்க் காத்திடுவார்’ என்ற பாடலின் வரிகள் நமக்கு இதைத் தான் புரிய வைக்கிறது!

உண்மை வழியில் நடக்கிறவன் அநேகம் பாடுகளையும் உபத்திரவங்களையும் கடந்திட நேர்ந்தாலும் அவனுக்குக் கர்த்தரே துணையாம்.

ஆனால் நீதிமொழிகளில் சொல்லப்பட்டிருப்பது என்ன? பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடும் சுவாசம் போலிருக்குமாம். அச்சுவாசம் எப்படிப்பட்டது? அது ஒழுங்கற்றது, எந்நேரமும் நின்றுவிடக் கூடியது.

ஆகையால் பொய்நாவினால் சம்பாதிக்கும் சம்பாத்தியமும் இப்படிப்பட்டதே. “பொய் பேசும் நாவுக்கு போஜனம் கிடைக்காது” என்பது தமிழ் பழமொழி. நமது நாவுகளை நாம் காத்து நடக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.

தேவன் பரிசுத்தராய் இருக்கிறது போல நாமும் நமது நடக்கை, செயல்,பேச்சு என அனைத்திலும் உண்மையுள்ளவர்களாய் இருக்கவே தேவன் விரும்புகிறார்.

ஆகவே நாம் உண்மையை தரித்து, சத்தியத்தின் பாதையில் நடந்து கர்த்தர் தருகிற பரிபூரண ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *