உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. லூக்கா 17 :3
எனக்கு அன்பானவர்களே!
மன்னிப்பின் மகுடமாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒருமுறை இந்திய எல்லைப் பகுதிக்கு பாதுகாப்புக்காக செல்லும் இந்திய வீரர் தன் சகோதரரோடு வாட்சப்பில் பேசி அனுப்பிய சம்பாஷணைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
அவர் தன் தம்பியிடம், “தம்பி நாம் இருவரும் ஒரே வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தான், ஆனால் என்னிடம் உனக்கு ஏதாவது குறை உண்டானால் என்னை மன்னித்துக் கொள் தம்பி.நீங்கள் சந்தோஷமாய் இருங்கள். நான் யுத்த களத்துக்கு போகிறேன்.
நான் திரும்பி வந்தால் சந்தோஷம். ஆனால் நான் ஒரு வேளை யுத்த களத்தில் மரித்து வராமல் போனாலும் சந்தோஷப்படுங்கள் என்று கூறி விட்டு சென்றார்.
ஒரு ஆண்டவரை அறியாத ஒரு மனிதன் யுத்த களத்துக்கு போவதற்கு முன்பு தன் சகோதரனிடம் பேசி தன் குறையை சரி செய்து ஒப்புரவாகி விட்டு செல்கிறான்.
ஆனால் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிற நாம் ஒருவருக்கொருவர் செய்த தப்பிதங்களை அறிக்கையிடாததற்கு நம்முடைய இருதக்கடினமும், சுயத்துக்கு மரிக்காது நிலைத்து நிற்பதே காரணமாகும்.
இவ்வுகத்தில் ஆண்டவரே அறியாத மக்கள். அதாவது சத்தியமே அறியாதவர்கள் தேவன் சொன்ன சத்தியத்துக்கும், கட்டளைக்கும் கீழ்ப்படிந்து நடக்கும் போது,ஆண்டவர் எங்களை பரலோகத்துக்கு அழைத்து செல்லுவார். நாங்கள் தேவ ஆவியால் நிரப்பப்பட்டுயிருக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம், தேவஆவியால் நிரப்பப்பட்டும், நாம் சத்தியத்துக்கு கீழ்ப்படியாமல் இருப்பது தான் மிகவும் வருத்தமான விஷயம்.
எனவே இந்த கடைசி நாள்களில் சகல சத்தியத்துக்குள்ளும் நம்மை நடத்துகிற பரிசுத்த ஆவியானவரிடம் இந்த கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க நம்மை தாழ்த்தி அர்ப்பணிப்போம்.
வேதத்தில் பார்ப்போம்,
நீங்கள் ஜெபம் பண்ணும் போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும் படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
மாற்கு 11 :25.
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
எபேசியர் 4 :32.
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
மத்தேயு 6 :14.
பிரியமானவர்களே,
இஸ்லாமிய சகோதரர்கள் தங்களுடைய புனித பயணத்துக்கு முன்பாக அவர்கள் அனைவரிடமும் , குறிப்பாக அவர்கள் வேலை ஸ்தலத்திற்கு வந்து தான் யாரையாவது மனஸ்தாபப்படுத்திருந்தால் அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்பதுண்டு.
நம் மீது பிறருடைய கோபமோ, எரிச்சலோ, இருக்குமானால், அல்லது, நாம் யார் மீதும் கோபமோ வைராக்கியமோ வைத்து அவர்களை மன்னிக்காமல் இருப்போம் என்றால்
நம்முடைய ஜெபங்கள் ஒரு போதும் கேட்கப்படாது.
ஆண்டவரிடமிருந்து வரும் அனைத்து ஆசீர்வாதங்களும் தடைபட்டு நிற்கும்.
இன்று பலருடைய குடும்பங்களில் காணப்படும் நோய்களும் பெலவீனங்களும், எவ்வளவு ஊக்கமாக ஜெபித்தும் குணமடையாமல் இருப்பதற்கு ஒரு காரணம் நம்முடைய மனதிலிருக்கும் கசப்பும், வைராக்கியமும், அடுத்தவரை குறித்த முறுமுறுப்பும் தான்.
இவைகளெல்லாம் நம்மிடம் இருக்கும் போது நம்முடைய ஜெபம் ஒரு போதும் கேட்கப்படாது.
ஆண்டவர் நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் நமக்கு மன்னித்திருக்கிறார். ஆனால் நாம் பிறர் நமக்கு எதிராக செய்த சிறிதளவு காரியங்களை கூட நமக்கு மன்னிக்க மனமில்லை.
மேலும் அவர்கள் நமக்கு செய்த காரியங்களையே ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் பிறர் நமக்கு செய்த துன்பங்களை முழு மனதோடு மன்னிக்கும் போது தான் நம்முடைய வாழ்க்கையில் ஒரு முழுமையான விடுதலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இன்றைக்கு அனேகர் பிறருக்கு விரோதமாக செய்த குற்றங்களுக்காக ஆண்டவரிடம் அழுது மன்னிப்பு கேட்கிறார்கள். ஆனால் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் போய் மன்னிப்பு கேட்பதில்லை.
யாக் 5:16 – நீங்கள் சொஸ்தமடையும் படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்.
ஏனென்றால் நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
தெய்வீக சுகத்துக்காக பல வருடங்களாக ஜெபித்து, ஜெபித்து அந்த ஜெபம் கேட்கபடாமல் இருப்பதற்கு உள்ள தடை என்ன தெரியுமா ? நமக்கு பிறரிடம் உள்ள குறையை சரி செய்யாமல் இருப்பதே ஆகும்.
எனவே பிரியமானவர்களே, இனியும் தாமதிக்காமல் பிறரிடம் குறைகள் இருக்குமானால் அதை உடனடியாக சரி பண்ணி ஒப்புரவாகுங்கள், அப்பொழுதுதெய்வீக விடுதலையை அடைவதோடு பரிபூரணமான சுகத்தைப் பெற்று கொள்வீர்கள்.
வேதம் சொல்லுகிறது,
கொலோ 3:12,13 ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத் தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக் கொண்டு;
ஒருவரையொருவர் தாங்கி,ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
ஆம், கிறிஸ்து நமக்கு மன்னித்தது போல, நாமும் பிறருக்கு மன்னித்து மன்னிப்பின் பாதையில் நாம் பயணிப்போம்.
இத்தகைய நல்ல வாழ்க்கையை வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.