கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 118:6.
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
பொறாமை கல்லறையை விட கொடூரமானது –
என்று ஷேக்ஸ்பியர் பொறாமைக்கு ஒரு அழகான விளக்கம் கொடுத்துள்ளார்.
வேதத்தில் இஸ்ரவேலின் முதல் இராஜாவாகிய சவுலை கர்த்தர் எல்லாவிதத்திலும் ஆசீர்வதித்திருந்தார். அவருக்கு ஆலோசனை சொல்ல சாமுவேல் தீர்க்கதரிசியை கொடுத்தார்.
தங்களுக்கு ஒரு இராஜா வேண்டும் என்று கேட்டுப் பெற்றுக் கொண்ட மக்கள், அருமையான குடும்பம், பிள்ளைகள், ஆட்சி, சமாதானமான நிலைமை எல்லாம் இருந்தும், சவுல் ராஜா மனதில் கசப்புள்ளவராகவே மரித்தார்.
அவருடைய சரித்திரத்தை பார்த்தால், எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவரைப் போல மரித்தார். அவருடைய வாழ்வு நமக்கு படிப்பினையாகயுள்ளது.
தாவீது கோலியாத்தை தன் கவணில் உள்ள கல்லினால் கொன்று போட்டதை, அறிந்த ‘அங்குள்ள ஸ்திரீகள் ஆடிப் பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறை முறையாகப் பாடினார்கள்.
அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது. அவன் மிகுந்த எரிச்சலடைந்து, “தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்”. இன்னும் ராஜாங்கம் மாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள் முதற் கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் ( பொறாமை) பார்த்தான்.
மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின் மேல் இறங்கிற்று’
1 சாமு 18:7-10. என்று வேதம் கூறுகிறது. என்றைக்கு கசப்பும் பொறாமையும் சவுலின் உள்ளத்தில் வந்ததோ, அப்போதே ஒரு அசுத்த ஆவியும் அவர் மேல் வந்திறங்கிற்று என்று பார்க்கிறோம்.
அந்த பெண்கள் அப்படி தாவீதைக் குறித்து பாடினதில் இருந்து சவுலின் நல்ல மனநிலை மாற ஆரம்பித்தது. தாவீது எதை செய்தாலும், எதை சொன்னாலும் அதை சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்தான்.
தாவீது இத்தனைக்கும் சவுலின் சேனைகளோடு சென்று பெலிஸ்தியரோடு போராடி வெற்றியைக் கொண்டு வந்தாலும், எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்தார். தன்னை தள்ளிவிட்டு இந்த தாவீது ஆட்சியை பிடித்துக் கொள்வானோ என்ற பயம் சவுலை ஆட்டிப் படைத்தது.
தன் சொந்த மகளையே தாவீதுக்கு கட்டிக் கொடுத்திருந்தாலும், தாவீதை கொல்லவே திட்டமிட்டுக் கொண்டிருந்தார் சவுல். எங்குச் சென்றாலும் அவரை துரத்தி, துரத்தி பிடிக்க ஆட்களை அனுப்பினான். சில வேளைகளில் எதிரிகளிடம் கூட சென்று அடைக்கலம் தேடினான் தாவீது.
சவுலின் கடைசி காலம் வரைக்கும் அந்த கசப்பு மாறவே இல்லை. தாவீது நன்மைகள் செய்தாலும், அவனை எதிரியாகவே சவுல் பார்த்து, தன் வாழ்நாளை முடித்தான். கசப்பு மனதில் இருந்தபடியால் இரவும் பகலும் தூங்காமல் எப்படி தாவீதை பிடிக்கலாம் என்று திட்டம் போட்டு, போட்டு, தன் வாழ்நாளை வீணாளாக கழித்தான்.
எத்தனை பரிதாபம்! சவுலால் தாவீதை வீழ்த்த முடிந்ததா? இல்லவே இல்லை. ஏனெனில் கர்த்தர் தாவீதோடே இருந்தார்.
வேதத்தில் பார்ப்போம்,
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?
சங்கீதம் :118 :6.
இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.
ஏசாயா: 54 :15.
எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
சங்கீதம்: 118 :7.
பிரியமானவர்களே,
நாமும் நம் குடும்பத்தாரிடமோ, அல்லது நமது கூட வேலை செய்கிறவர்கள் மேலோ, அல்லது நம்முடைய சபையில் உள்ள யார் மீதோ இருந்த கோபம் தீர்க்கப்படாததினால் கசப்புக் கொண்டு உள்ளோமா? உடனே அதை சரி செய்து கொள்ள வேண்டும்.
கசப்பும், கோபமும், வைராக்கியமும் எங்கு இருக்கிறதோ?? அங்கு
அசுத்த ஆவி குடி கொள்ளும் இடமாக மாறிவிடும். பிறகு எப்போதும் சண்டை , கோபம், எரிச்சல் வைராக்கியத்தோடு காணப்படுவார்.
அந்த மனிதனிடம் அன்பையும், சமாதானத்தையும், பொறுமையையும் காண முடிவதில்லை.
சமாதானத்தை கெடுக்கும் பயங்கரமான சூழ்நிலைக்கு கொண்டு சென்று விடும்.
பிரியமானவர்களே,
நமக்கும் கூட யார் மீதாவது கசப்பு, வைராக்கியம் இருந்தால் அதை உடனடியாக கர்த்தரிடம் கொண்டு செல்வோம்.
உடனே அதை களைந்து போடுவோம். அதை வளருவதற்கு நாம் இடம் கொடுத்தால், அது நம் இருதயத்தை விஷமாக்கி, எதையெடுத்தாலும் நாம் சந்தேகக் கண்ணோடு பார்க்க தோன்றும்.
நம்முடைய சமாதானத்தையே குலைத்துப் போடும். பின் யார் என்ன சொன்னாலும் கேட்கக்கூடாத கடின மனதாகி விடும்.
‘உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள்’ கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு அந்த கசப்பும் வைராக்கியமும் எப்போதுமே வேண்டாம். எந்த விரோதமும் வேண்டாம்.
1கொரி:3:3 பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?
எது நடந்தாலும் கர்த்தரிடம் சொல்லி விட்டு விட்டு, நாம் அமைதலாய் செல்வோம். கர்த்தர் அதை பொறுப்பெடுத்துக் கொள்வார்.
கர்த்தர் தாமே பொறாமை இல்லாத பரிசுத்தமான நல்ல வாழ்க்கை வாழ நம் யாவருக்கும் கிருபை செய்வாராக.
ஆமென்.