உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 1 யோவான் 2 :17
எனக்கு அன்பானவர்களே!
நம்மிலே வாசம் பண்ண விரும்புகிற நம் இறைவனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
வட துருவத்தில் வாழும் எஸ்கிமோ என்னும் மக்கள், பனி கரடியை பிடிப்பதற்கு தந்திரமான, ஆனால் கொடூரமான முறையை வைத்திருந்தார்கள்.
சீல் என்னும் கடல் விலங்கைக் கொன்று, அதன் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதற்குள் ஒரு கூர்மையான கத்தியை போட்டு வைத்து விடுவார்கள் .அங்கு பனி சூழ்ந்திருப்பதால் அந்த இரத்தம் மிக சீக்கிரத்தில் உறைந்து பனியாகிவிடும்.
இந்தப் பனியால் இரத்தத்தின் நடுவில் இருக்கும் கத்தியும் உறைந்து போயிருக்கும். அந்தப் பாத்திரத்தை வீட்டின் வெளியே வைத்து விடுவார்கள். பனிக் கரடிகளுக்கு இரத்தம் என்றால் மிகவும் விருப்பம்.
இரத்தத்தின் மணத்தைப் வைத்து கரடிகள் இந்த இரத்தம் நிறைந்த பாத்திரத்தை தேடி வந்து விடும்.தேடி வந்து அந்த பாத்திரத்தில் உள்ள இரத்தத்தை பார்த்தவுடன் கரடிகள் நாவால் நக்கத் துவங்கி விடும்.
அந்த பனி அதன் நாவை மரக்கச் செய்யும், அந்தப் பனிக்கரடி அதை அறியாமல் தொடர்ந்து நக்கிக் கொண்டிருப்பதால், உள்ளே உள்ள கத்தியின் கூர்மையால் அதன் நாக்கு அறுபட்டு அதனுடைய சொந்த இரத்தமே வெளிவர துவங்கி விடும்.
ஆனால் அதை அந்த கரடி அறியாமல் தொடர்ந்து ரத்தத்தின் சுவையை சந்தோசமாக நக்கிக் கொண்டே இருக்கும்.
கடைசியில் அதனுடைய இரத்தம் எல்லாம் வெளியேறி மயக்கமான நிலையில் வரும்.
உடனே அந்த எஸ்கிமோக்கள் வந்து அதை எடுத்துக் கொண்டுபோய் அதனை கொன்று அதனுடைய மாமிசத்தை புசித்து அதனுடைய தோலை வைத்து தங்களுக்கு கதகதப்பான ஆடைகளை செய்து அதை பிரயோஜனப்படுத்திக் கொள்வார்கள்.
இந்த உலகில் உள்ள அநேகர் இந்த பனிக்கரடியைப் போல குடிக்கும் ,போதை வஸ்துவுக்கும், பல பாவ பழக்க வழக்கங்களுக்கும் அடிமைகளாய் போகின்றார்கள்.
இரத்தத்தை கண்டவுடன் அந்த பனிக்கரடி எப்படி மோப்பம் பிடித்து வந்து விடுகிறதோ அதைப் போல, பாவத்திற்கும், சிற்றின்பங்களுக்கும் அடிமையானவர்களாகி
தங்கள் சமாதானத்தையும், நல்ல குடும்ப வாழ்க்கையும்,
சமுதாயத்தில் உள்ள நற் பெயர்களையும் ஆரோக்கியத்தையும் இழந்து, அந்த பனிக்கரடி போல பரிதாபமாக பிசாசின் பிடியில் சிக்கி மடிந்து போகின்றார்கள்.
வேதத்தில் பார்ப்போம்,
அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்
யாக்கோபு 1:14.
அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.
எபேசியர் 2 :3.
பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும்.
2 தீமோ 2:25.
பிரியமானவர்களே,
ஒருமுறை பாவ பழக்கத்திற்கு அடிமையானவர்கள் வெளி வருவது மிகவும் கடினம்.
இப்படி அடிமையாகி தங்கள் குடும்ப வாழ்க்கையின் சந்தோசத்தையும் நல்ல பெயர் புகழையும், குடும்ப கௌரவத்தையும் இழந்தவர்களாய் நடைப்பிணமாய் வாழ்கின்ற மக்கள் ஏராளம் ஏராளம்.
அவர்கள் வெளியே வர விரும்பினாலும் வரமுடியாமல் தங்கள் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்கள் அநேகம்.
வேத வசனம் சொல்லுகிறது, இந்த “சரீரம் தேவனுடைய ஆலயம்” என்று ,பரிசுத்த ஆவியானவர் வந்து தங்கியிருக்கிற ஆலயம் என்று பார்க்கிறோம்.
அப்படிப்பட்ட சரீரத்தில் பாவத்திற்கு இடம் கொடுத்து அதற்கு அடிமைகளாகி போனவர்களின் சரீரத்தில் ஆவியானவர் எப்படி தங்கி இருப்பார்?
இயேசு கிறிஸ்துவின் சொந்த இரத்தத்தினாலே கிரகத்துக்கு கொள்ளப்பட்ட நாம் பாவத்திற்கு எப்படி நம் சரீரத்தில் அவயங்களை ஒப்புக் கொடுக்கலாம்.?
தேவனுக்கு சொந்தமான இந்த சரீரத்தில் பாவம் ஆளுகை செய்யாத படி பரிசுத்தமாய் பாதுகாத்து ,பரிசுத்த ஆவியானவர் தங்குகின்ற ஆலயமாக நம் சரீரத்தை பாதுகாத்துக் கொள்வோம். அவர் நம்மிலே வாசம் பண்ண நம் அருமை இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்கு இடம் கொடுப்போம்.
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ் செய்யமாட்டான்.
1 யோவான் 3:9-ல் வேதம் கூறுகிறது.
ஆம், பிரியமானவர்களே,
நான் செய்கிற ஒவ்வொரு காரியங்களையும் கர்த்தர் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.அவர் என்னை தமது ஆலயமாக கொண்டு இருக்கிறார் என்ற எண்ணம் நம்மில் இருக்குமானால் நாம் உலக காரியங்களையும் பாவத்தையும் கண்டிப்பாக புறம் தள்ளுவோம்.
நாம் நம்மை கர்த்தருடைய ஆலயமாக கருதுவோம்.கர்த்தர் வாசம் பண்ணும் பரிசுத்த ஸ்தலம் நான் என்ற எண்ணத்தில் பரிசுத்த வாழ்வு வாழ்ந்து கர்த்தரின் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்.
ஆமென்