Daily Manna 130

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கலாத்தி:5:22-23

எனக்கு அன்பானவர்களே!

எல்லார் மேலும் தயவுள்ளவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ராபர்ட் டி வின்சென்ஜோ என்னும் கால்பந்து ஆட்டக்காரர், ஒரு முறை விளையாடி விட்டு, வெளியே வந்த போது, ஒரு பெண் அவரிடம் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தன் இரண்டு வயது மகன் மிகவும் சீரியஸாக உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், அவனுடைய சிகிச்சைக்கு பணத்தேவை அதிகம் இருப்பதாகவும் கூறினாள்.

அதைக் கேட்ட அவர் உடனே தன் பையில் இருந்த செக் புத்தகத்தை எடுத்து ஒரு கணிசமான பணத்தை எழுதி அந்த பெண்ணிடம் கொடுத்து, உன் பிள்ளையை காப்பாற்று என்று சொல்லிக் கொடுத்தார்.

ஒரு வாரம் கழித்து, அவருடைய நண்பர்கள், அவரிடம் வந்து, ‘நீ என்னமோ பணத்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தாயாமே? அவளுக்கு பிள்ளை ஒன்றும் இல்லை, ஏன் அவளுக்கு இன்னும் கலியாணமே ஆகவில்லை, அவள் உன்னை நன்கு ஏமாற்றி விட்டாள்’ என்று கூறினர்.

அதைக் கேட்ட அந்த வீரர், ‘உண்மையிலேயே பிள்ளை யாரும் சீரியஸாக இல்லையா?’ என்றுக் கேட்டார். மற்றவர்கள் ஆம் என்று கூறியதும், “அப்பாடா” இந்த வாரத்தில் நான் கேட்ட சிறந்த செய்தி இது தான்’ என்று கூறினாராம். ஏனெனில் அவருக்கு பணம் பெரியதாக தெரியவில்லை, ஒரு உயிர் சுகமாயிருக்கிறது என்ற செய்தியே பெரிதாக இருந்தது.

மற்றவர்களுக்கு நம்மால் இயன்றதை, அவர்களிடம் திரும்பவும் உதவி பெறுவோம் என்ற கைமாறு கருதாமல் செய்யும் உதவியே தயவு ஆகும். உதவி என்று யாரும் கேட்டு வந்தால் அநேகருக்கு முகம் வேறு மாதிரி மாறி விடுகிறது. இந்த ஆளுக்கு வேறு வேலையில்லை, சும்மா உதவி தேவை என்று வந்து விடுகிறான் என்று முகத்தை சுளிக்கிறோம்.

தயவு பாராட்டுவதற்கு முதல் உதாரணம் நம் தேவன் தான். அவர் தயவு பாராட்டுவதால் தான் பாவிகளாயிருந்தாலும், நம்மை நீதிமான்களாக்கி, நம்மை பரலோக இராஜ்யத்திற்கு சுதந்தரவாளிகளாக மாற்றியிருக்கிறார்.

“எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது’ யோபு-10:12 என்று பார்க்கிறோம்.
ஆம், நம் தேவன் நமக்கு ஜீவனைத் தந்ததோடு மாத்திரமல்ல, தயவையும் பாராட்டியிருக்கிறார்.

அவருடைய தயவும் இரக்கமும் இல்லாதிருந்தால் நாம் எப்படி இருந்திருப்போமோ தெரியாது. ஆனால் அவர் நம் மேல் வைத்த தயவினால் இந்நாள் வரை ஜீவனோடு சுகத்தோடு நாம் நல்ல நாட்களை காண்கிறோம்.

வேதத்தில் எத்தனையோ பேர் மற்றவர்களுக்கு தயவு பாராட்டி இருப்பதைக் காணலாம். யோசேப்பு தன்னை அநியாயமாய் அந்நியரிடம் விற்ற தன் அண்ணன்மார்களின் மேல் கோபம் கொள்ளாமல், அவர்கள் மேல் தயவுக் காட்டி, பஞ்சக்காலத்தில் அவர்களை ஆதரித்தார்.

தாவீது இராஜா தன் உயிரை பறிக்கத் தன்னை துரத்தி வந்த சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தை அரண்மனையில் தன்னோடு இருக்க வைத்து, உணவு கொடுத்து, தயவு பாராட்டினாரே. பழைய ஏற்பாட்டு விசுவாசியானாலும், அவரிடம் ஆவியின் கனி வெளிப்பட்டதே!
ஆகவே நாமும் பிறருக்கு தயவு பாராட்டி கர்த்தரின் சித்தத்தை செய்வோம்.

வேதத்தில் பார்ப்போம்,

தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.
எபேசியர்: 1:6

கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலும் உள்ளது.
சங்கீதம்: 145:9

அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக் கொண்டு: நீர் இந்தத் தயவு செய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்.
லூக்கா: 7:4

பிரியமானவர்களே,
இப்படி எத்தனையோ உதாரணங்கள் இருந்தும், நாம் மற்றவர்களிடம் எப்படி தயவு காண்பிக்கிறோம்? யார் யார் மற்றவர்களுக்கு தயவு காண்பித்தார்களோ, அவர்களுக்கும் தயவு கிடைத்தது. நாம் மற்றவர்களுக்கு தயவு செய்தால், நம்முடைய தேவையில் நமக்கு தயவு கிடைக்கும். நம்மிடத்தில் தயை வேண்டி வரும் உதவியற்றவர்களுக்கு நாம் உதவி செய்கிறோமா?

ஆப்பிரிக்காவில் உசாமுசுலு மட்வா என்னும் மனிதர், தன் சிறு வயது மகனை வயிற்றுப் போக்கினால் ஆஸ்பத்திரி கொண்டு சென்றும், மரித்துப் போனபடியினால், மரித்த குழந்தையை ஒரு சபையின் போதகரிடம் அடக்கம் செய்யும்படி கேட்டபோது, அந்த போதகர், அந்த மனிதர் தன் சபையின் உறுப்பினரில்லை என்பதால் அடக்கம் செய்ய மறுத்து விட்டார்.

பின்னர் அதே மனிதர் “கிறிஸ்தவம் ஏன் ஆப்ரிக்காவில் தோற்றுப் போனது ?” என்று ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.

கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்படுகிற நம்மிடம் இருக்க வேண்டிய தயவு எங்கே போயிற்று? கிறிஸ்து நம் சொந்த இரத்தத்தை கொடுத்து சம்பாதித்த சபையில் ஆவியானவரின் கனி காணப்படவில்லை என்றால், அவருடைய பரிசுத்த இரத்தத்தை நாம் எந்த அளவு மதிக்கிறோம் என்பது விளங்குமல்லவா?

கர்த்தரை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்கிறவர்கள், ஆவியானவரின் கனியாகிய தயவை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறோமா? நாம் இந்த உலகில் வாழ்வதற்கு மற்றவர்களின் தயவு நமக்கு தேவையாயிருக்கிறது. குழந்தைகளாயிருந்தபோது பெற்றோரின் தயவு, பெரியவர்களானதும் வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் தயவு, வயதானவுடன் பிள்ளைகளின் தயவு என்று தயவு இல்லாமல் நம் வாழ்க்கை இல்லை. நாம் மற்றவர்களின் தயவை பெறும் போது, நாமும் தயவு காண்பிக்க வேண்டுமே!

‘ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்’
(எபேசி:-4:32) என்ற வசனத்தின்படி ஒருவருக்கொருவர் தயவாயிருப்போம். நம்மிடம் தயவு கேட்டுவரும் ஒவ்வொருவருக்கும் உதவிகள் செய்வோம்.

கர்த்தர் சீக்கிரம் வருகிறார்.அவரின் தயவினால் பரலோக வாழ்வையும் சுதந்தரிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *