விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். நீதி 22 :3
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு ஊரில் சர்க்கஸ் நடைபெற்று கொண்டு இருந்தது . அந்த இடத்தில் கோமாளிகள் நின்று எல்லாரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தனர். ஜனங்கள் தங்களையே மறந்து அந்த கோமாளிகள் செய்யும் கோமாளிதனத்தை இரசித்து பார்த்து கொண்டிருந்தனர்.
திடீரென்று அந்த சர்க்கஸ் உரிமையாளர் முன்னே வந்து, அந்த சர்க்கஸ் கூடாரம் தீப்பிடித்து இருப்பதாகவும், உடனே எல்லாரையும் வெளியேறும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் ஜனங்களோ, இதுவும் ஒரு சிரிப்புக்காக சொல்லப்படும் காரியம் என்று நினைத்து இன்னும் சிரிக்க ஆரம்பித்தனர்.
அந்த முதலாளியோ எல்லாரையும் வெளியேறும்படி மிகவும் கெஞ்ச ஆரம்பித்தார். பின்னர்தான் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய வந்தது, அது சிரிப்புக்காக அல்ல, நிஜம்தான் என்று.
ஆனால் அதற்குள் கொட்டகை முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது விட்டபடியால், உயிர் பிழைத்தவர்கள் மிகவும் குறைவானவர்களே.
இதைப்போலவே ஒரு ஐசுவரியவான் தான் நரகத்தின் அக்கினியில் எரியும்போது, லாசருவை தன் சகோதரரிடத்தில் அனுப்பும்படிக்கும்,
அவர்கள் அந்த நரக அக்கினியில் சிக்கி கொள்ளாதபடி லாசரு சென்று எச்சரிக்கும்படியாகவும் அவனுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்படி ஆபிரகாமிடம் கெஞ்சுகிறான் லூக்கா 16:27-28.
‘ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.
அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்’ லூக்கா 16:29-31.
எத்தனை சோகமான காட்சி! எத்தனை நாட்கள் பூமியிலிருந்த போதும் , தன்னுடைய சகோதரர்களுக்கு சத்தியத்தை அறிவிக்க மனமில்லாமல். தன் வாழ்நாளை அலச்சியமாய் வாழ்ந்தவன்.
இப்போது நரகத்தில் எரியும் போது அக்கரை வருகிறது, ஆனால் ஏற்கனவே காலம் கடந்து விட்டபடியால், ஒன்றுமே செய்யமுடியாத பரிதாப நிலைமைக்கு தள்ளப்பட்டான் ஐசுவரியன்.
வேதத்தில் பார்ப்போம்,
பேதைகளே விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள்.
நீதி 8 :5.
அவன் விவேகமாய் உத்தரவு சொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன்பின்பு ஒருவனும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங் கேட்கத் துணியவில்லை.
மாற்கு 12 :34.
ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால் உன் பெலன் குறுகினது.
நீதி24 :10.
பிரியமானவர்களே,
நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்;
அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும் மத்தேயு 24:37-39. கடைசி நேரம் வரை ஜனங்கள், சந்தோஷமாய் உலகத்தை அனுபவித்து கொண்டு, யார் எங்களை அசைக்க முடியும் என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஜலப்பிரளயம் வரப்போகிறது, பூமியை அழிக்க போகிறது என்று நோவா சொன்ன வார்த்தைகளுக்கு செவிகொடாமல், அவர்கள் தங்கள் இஷ்டம் போல வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் ஒரு நாள் ஜலப்பிரளயம் வந்தது, அனைவரையும் வாரிக்கொண்டு போனது! என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அவர்கள் உணர தொடங்கும்போது, ஏற்கனவே நேரம் கடந்து விட்டபடியால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.
ஆகவே காலம் இருக்கும் போதே கர்த்தரின் சத்தத்திற்கு செவிகொடுத்து கர்த்தரின் பாதுகாப்புக்குள் வந்துவிட வேண்டும்.
நாளை பார்த்து கொள்ளலாம் என்று நாட்களை தள்ளிப்போட்டால், ஒருவேளை நாளை வராமலே போகலாம்!
ஆகவே நாட்கள் பொல்லாதவைகளாய் இருப்பதால் காலத்தை பிரயோஜனப்படுத்தி கொள்வோமாக!
கர்த்தர் நீதியுள்ளவர், அவர் எல்லாரும் அவரை குறித்து அறிந்து கொள்ளும்படியான தருணத்தை கொடுக்கிறார்.
அவருடைய சத்தத்திற்கு உண்மையாய் செவிகொடுக்கிறவர்கள் பாக்கியவான்கள். செவிகொடாமற் போகும்போது, கருணையுள்ள தேவன், நீதியுள்ள தேவனாய் இருக்கிறபடியால், செவி கொடாதவர்களுக்கு அந்தநாளில் அவரும் செவிகொடாமலே போவார்.
ஆகையால் இந்த நாளே இரட்சண்ய நாள் என்று இரட்சிப்பின் கோட்டைக்குள்ளே வந்து விடுவோமாக..
ஆமென்.