உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங்கீதம் 32 :8
எனக்கு அன்பானவர்களே!
ஆலோசனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒருமுறை ஒரு தம்பதியர் தங்கள் சொந்த விமானம் ஒன்றில் பயணமானார்கள். கணவன் அந்த விமானத்தை ஓட்டிச் சென்றார்.
திடீரென்று அவருக்கு மாரடைப்பு வந்தது. அப்படியே மரித்துப் போனார். அவருடைய மனைவிக்கு விமானத்தை ஓட்டவே தெரியாது. ஆகவே, அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறினார்கள்.
திடீரென்று விமான தளத்திலுள்ள விமானங்கள் செல்ல வழிகாட்டும் இடத்திற்கு ரேடியோவின் மூலம் தொடர்பு கொள்ளும் கருவியை அழுத்தினார்கள். அங்கிருந்து, ஒரு குரல் ஒலித்தது.
“உதவி வேண்டுமா?” என்று கேட்டார்கள், இவர்கள் “ஆம்” என்று சொல்லி விட்டு, நிலைமையை விவரித்து சொன்னார்கள். அந்த மனிதர் அங்கிருந்து கொண்டே, “இந்த இடத்திலுள்ள இயந்திரத்தை அழுத்துங்கள்.
இந்த சுவிட்சைப் போடுங்கள். இந்த இடத்தில் உங்கள் காலை வையுங்கள்” என்று சொல்ல அவர்களும் அவர் சொன்னபடியே எல்லாவற்றையும் செய்தார்கள். விமானம் பத்திரமாக விமான நிலையத்தில் வந்து இறங்கியது.
அன்பான சகோதரனே, சகோதரியே,
இந்த உலகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் ஆவிக்குரிய காரியத்துக்கும், மற்ற காரியத்துக்கும் ஆலோசனை அவசியம்!
வேதத்தில் அனேகருக்கு “ஆலோசனைக்காரர்” இருந்ததை வாசிக்க முடியும்!
“தாவீது ஆயிரம் பேருக்குத் தலைவரோடும் நூறு பேருக்குத் தலைவரோடும் சகல அதிபதிகளோடும் ஆலோசனை பண்ணினான்.
1 நாளாகமம் 13:1 தாவீது அரசன் ஆனாலும், சக மனிதரோடு ஆலோசிக்கத் தவறவில்லை!
மனித ஆலோசனைகள் அவசியம்! ஆனால் தேவ ஆலோசனை அதனிலும் மிக அவசியம்!
காரியம் சிறிதோ பெரிதோ
கர்த்தரின் ஆலோசனையை நாடுவது மிகவும் நல்லது!
வேதத்தில் பார்ப்போம்,
ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.
நீதி 11:14.
எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.
சங்கீதம் 16 :7.
தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.
சங்கீதம் 139 :17.
பிரியமானவர்களே,
நம் கர்த்தரின் ஒரு பெயர் உண்டு” “ஆலோசனைக் கர்த்தர்!” என்பது
“அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத் தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.” என்று யோபு 12:13-ல் வாசிக்கிறோம்.
படிப்பு, ஊழியம், வீடு, குடும்ப வாழ்வு, பிள்ளை வளர்ப்பு, தொழில், உடைகள், பழக்கவழக்கங்கள், பண்புகள் என அனைத்திற்கான ஆலோசனையும் வேதத்தில் உண்டே!
ஜெபித்து வேதம் வாசித்தால், நேசித்து வாசித்தால் அந்த ஆலோசனைக் குரலை அங்கே கேட்க முடியும்! அவர் சொல்லும் வழியில் நடந்தால் சகலமும் நேர்த்தியாக நடக்கும்!
“அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தர்”
ஏசா.9:6.
நமது வாழ்வில் ஏதாவது பெரிய பிரச்சனைகள் எழும்பும் போது, குடும்பத்தில் சண்டைகள் எழும்பும்போது, அல்லது ஒரு முக்கியமான தீர்மானம் எடுக்கும் முன்பு, சிலர் ஆலோசகர்களை நாடிப் போவதுண்டு.
நமது வாழ்க்கையிலும் பல தடவைகளில் நாம் தடுமாறிப் போவதுண்டு. எல்லாப் பக்கங்களும், இருண்டு போய் கிடக்கும் போது எப்பக்கம் செல்வதென்று திசை தெரியாமல் திணறிப் போகும் சந்தர்ப்பங்களும் உண்டு.
அந்த நேரங்களிலெல்லாம் நாம் யாரை நோக்கி நம் கண்களைத் திருப்புகிறோம்? நமது ஆலோசனைக்காக யாரை நாடுகிறோம். ?
ஒரு அழகான பாரம்பரியப் பாடலின் வரிகள் இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது. “விண்ணொளியே நள்ளிருட்டில் என்னை நடத்துமே, ஓர் அடிதான் உம்மிடம் நான் கேட்பேன். தூரக்காட்சி காட்டும் என்று சொல்லேன்.”
நமது வாழ்க்கைப் பாதையில், நம்மைக் கரம் பிடித்து நம்மீது தமது கண்ணை வைத்து நமக்கு ஆலோசனை தரும் ஆண்டவர் உண்டு என்பதே நமது நம்பிக்கையாகட்டும். ஏனெனில் அதுவே சத்தியம்.
“பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே”
ஏசா. 48:17.
தேவன் எப்படி நமக்கு ஆலோசனை கொடுக்கிறார், எப்படி நம்மை நடத்துகிறார்? அவரது வார்த்தைகள் மூலமாகவே நடத்துகிறார்.
நாம் அவற்றை அனுதினமும் தியானித்துப் படித்தால் அவர் நம்மை வழிநடத்துவதை நம்மால் உணர முடியும். “
நம்மை சரியான பாதையில் வழிநடத்தக் கூடியவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே.
“நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்”
(சங்கீதம் 32:8) என்று ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்.
இந்த வாக்குத்தத்தத்தை பிடித்தவர்களாய் அவரோடு கூட பயணிப்போம்.அவர் தரும் ஆலோசனையை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.