Daily Manna 138

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம். ஏசாயா: 54:17

எனக்கு அன்பானவர்களே!

அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு வயதான விதவை தாய் தன் வீட்டிற்கு அருகாமையிலுள்ள சிறு பிள்ளைகளை கூட்டி வைத்து, ஒவ்வொரு நாள் மாலையிலும் ஆண்டவரைப் பாடி, சிறு சிறு கதைகள், சம்பவங்கள் மூலம் வேதாகம செய்திகளை பிள்ளைகள் மனதில் பதிய செய்வார்.

தன் வறுமையின் மத்தியிலும் தன்னால் இயன்றதை பிள்ளைகளுக்கு சாப்பிடக் கொடுத்து அனுப்புவார்கள். இது அநேக பிள்ளைகளின் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படுத்தியது .

பக்கத்து வீட்டுகாரருக்கு தினமும் பிள்ளைகள் பாடுவது எரிச்சலை உண்டாக்கியது. ஆகவே அந்த அம்மாவை விரட்ட ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஒரு மந்திரவாதியை வரவழைத்தான். பிள்ளைகள் ஆண்டவரை பாடித் துதிக்கிற நேரத்தில் மந்திரவாதி அவர்களுக்கு விரோதமாய் மந்திரங்களை செய்து கொண்டிருந்தான்.

திடீரென்று மந்திரவாதியின் கைகளும், கால்களும் நடுங்கி இழுக்க ஆரம்பித்தன.’ ஐயோ என்னை உடனே இப்போதே என் வீட்டிற்கு அனுப்பு, இல்லையென்றால் மரித்து விடுவேன்’ என்று கதறினான்.
உடனே மந்திரவாதியை அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டான்.

ஆம், தேவன் தெரிந்து கொண்டவர்களை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறவன் யார்? ரோமர் 8:33 சர்வவல்லமையுள்ள தேவனை அடைக்கலமாக கொண்ட நாம் எந்த ஒரு மாந்திரீகத்திற்கும், பிசாசின் வல்லமைக்கும் கலங்க தேவையில்லை.

மாந்திரீகங்கள் மற்றும் பிசாசின் கிரியைகளை குறித்து வேதாகமம் போதிக்கும் காரியத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும். கிறிஸ்தவர்களில் ஒரு சாரார் பிசாசுகளே கிடையாது என்று கூறுவர். மாறாக மறறொரு சாரார் எல்லாவற்றிற்கும் பிசாசு என்று கூறி எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். இந்த இரண்டு எண்ண ஓட்டங்களுமே சரியானதல்ல.

வேதாகமத்தில் குறி சொல்லுவோர், மந்திரவாதத்தில் ஈடுபடுவோரை குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. உதாரணமாக பார்வோனுக்கு முன்பாக மோசேயின் கோல் பாம்பாக மாறியது போல பார்வோனின் மந்திரவாதிகளும் தங்கள் கோல்களை மாற்றினர்.அதே போல் எகிப்தியர்களுக்கு மேல் வந்த பத்து வாதைகளில் முதல் இரண்டு வாதைகளை எகிப்திய மந்திரவாதிகளும் செய்து காட்டினர்.ஆம், பிசாசும் தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு வல்லமையையும், அற்புதம் செய்கிற வழியையும் கொடுக்கிறான்.

ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வல்லமைக்கு முன்பாக எந்த பிசாசின் வல்லமைகளும் ஒரு பொருட்டல்ல. எகிப்திய மந்திவாதிகள் பாம்பாக மாற்றிய கோலை மோசேயின் கோல் விழுங்கி போட்டது. அவர்களால் இரண்டு வாதைகளுக்கு மேல் எகிப்திய மந்திரவாதிகளால் செயல்படுத்தி காட்ட முடியவில்லை என்பதாக வேதத்தில் வாசிக்கிறோம்.

ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் மிகவும் பெரியவர்.
தாவீது இப்படி சொல்லுகிறார் சங்கீதம்:33:12-ல்
கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்து கொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது என்று கூறுகின்றனர்.

வேதத்தில் பார்ப்போம்,

யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லுதலும் இல்லை, தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக் காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.
எண்ணாகமம்:23:23

மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும் படிப் பிரயத்தனஞ் செய்தார்கள். செய்தும், அவர்களால் கூடாமற் போயிற்று.
யாத்திரா: 8 :18

அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள்.
யாத்திரா:8:19

பிரியமானவர்களே,

மாந்திரீகமும் பில்லி சூனியங்களும் உண்மை தான். ஆனால் அவைகளை விட கோடான கோடி மடங்கு வல்லமையுள்ளவர் தான் நம்முடைய தேவன்.
எனவே எந்த ஒரு பிசாசின் கிரியைகளுக்கும் , மாந்திரிகத்துக்கும் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

ஏனென்றால் இயேசுவின் நாமத்தினால் பிசாசுகளை துரத்த அதிகாரம் பெற்ற நாம். ஏன்? பிசாசின் செயல்களுக்கு நாம் பயப்பட வேண்டும்? அந்தகார வல்லமைகளை இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள இரத்தத்தினால் நாம் அவைகளை தோற்கடிக்க முடியும்.

எல்லா நாமத்திற்கும் மேலான இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு பாதாள வல்லமைகளும் நடுநடுங்கும்! இயேசுவின் நாமத்தை தரித்து கொண்ட நாம்
சாத்தானின் வல்லமைக்கு பயப்படத் தேவை இல்லை.

கிறிஸ்தவர்களில் சிலர் பயப்படுவார்கள், “அவன் எனக்கு சூனியம் வைத்து விட்டான், மந்திரம் செய்து விட்டான்” என்று. உண்மையான கிறிஸ்தவனாக, ( கிறிஸ்துவை உடையவனாக ) இருந்தால், அந்த சக்திகள் அவனை கண்டு பயந்து ஓடும்.

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம் என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது. கர்த்தரின் நாமமும், அவருடைய இரத்தமும் நம்மை பாதுகாக்கும் கோட்டைகளாகும்.

சர்வ வல்லவருக்கு முன்பாக எவ்வித சக்தியும் நிற்க முடியாது. அந்த சர்வ வல்லவர் நம்மோடு இருக்கும் போது எதுவும் நம்மை சேதப்படுத்த முடியாது. அவர் நமக்காக யுத்தம் செய்பவர். நமது பாதங்கள் கூட கல்லில் இடராதபடிக்கு தமது தூதர்களுக்கு கட்டளையிட்டு நம்மை பாதுகாக்கும் தேவன் அவர்.

அந்த நல்ல ஆண்டவரின் கரங்களை உறுதியாய் பற்றிக் கொள்வோம். இதோ உலகத்தின் இறுதி வரை உங்களோடிருப்பேன் என்ற தேவன் நம்மோடு இருந்து வழிநடத்துவாராக.

ஆமென்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *