புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள். புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப் போடுகிறாள். நீதிமொழி:14:1
எனக்கு அன்பானவர்களே!
நித்திய கன்மலையாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
வீடு கட்டப்படுவதையும், இடிக்கப்படுவதையும் கவனித்திருக்கிறீர்களா? கட்டுவதற்கு அதிக சிரமம் எடுக்கப்படும்.ஒரு கல்லின் மேல் ஒரு கல்லாக அடுக்கி நேர்த்தியாகக் கட்ட அதிக காலம் எடுக்கும்.அதிக செலவும் ஆகும்.
ஆனால், அதை இடிக்கும் போதோ அதை சுலபமாக தரை மட்டமாக்கி விடலாம். இடிப்பதைத் தான் இடிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. உடைக்க நினைத்த மறுகணமே உடைத்து விடலாம்.
அது மிக இலகுவான ஒரு வேலை.
இதிலிருந்து என்ன புரிகிறது. கட்டுவது மிகவும் கடினம்; ஆனால், இடிப்பதோ மிகவும் சுலபம். நாம் கட்டுகிறவர்களா? அல்லது இடிக்கிறவர்களா?
கட்டுகின்ற இந்தக் கடினமான காரியத்தையே ஒரு புத்தியுள்ள ஸ்திரீ செய்கிறாள் என்று வேதம் உணர்த்துகிறது.
அவளது குடும்பம் என்ற வீட்டை, அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் அவள் கட்டுவதற்கே பிரயாசப்படுவாளே தவிர அதை ஒரு போதும் இடித்துப் போட அவள் ஒரு நாளும் நினைக்க மாட்டாள்.
ஆனால், புத்தியில்லாத ஸ்திரீயோ தன் குடும்பம் என்னும் வீட்டை தரைமட்டமாக இடித்து போட கூச்சமோ, வெட்கமோ இல்லாமல் தான் நினைத்ததை தாமதம் காட்டாமல் இந்த மடைமைத்தனமான காரியத்தைச் செய்ய எத்தனிப்பாள்.
ஒரு வீட்டை நன்றாக கட்டவும், அதை பயனற்றதாக இடுத்து போடவும் வல்லமையுள்ளவர்களாக ஸ்திரீகள் இருப்பதாக வேதம் நமக்கு போதிக்கிறது!
ஆமான் மனைவி சிரேஷ் தன் ஞானமற்ற ஆலோசனையால் வாழ்வாங்கு வாழ்ந்திருந்த தன் குடும்பம் என்னும் உன்னதமான வீட்டை அழித்துப் போட்டாள்.
ரூத் குணசாலியான ஸ்திரீ என அழைக்கப்பட்டவள் ரூத். 3:11.
ரூத் அழிந்த தன் வாழ்வையும், தன் குடும்ப வாழ்வையும் தன் பண்பால் மீண்டும் கட்டி எழுப்பி ஒரு புதிய வாழ்வை அமைத்துக் கொண்டாள்.
வீட்டைக் கட்டும் பொறுப்பு இல்லாளுக்கே உரியது.
வேதத்தில் பார்ப்போம்,
வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்திரம். புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.
நீதிமொழி: 19 :14
அந்தப்படியே ஸ்திரிகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்க வேண்டும்.
1 தீமோத்: 3 :11
ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக் கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின் மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.
1 பேதுரு :1 :13
பிரியமானவர்களே,
“கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா” சங்.127:1. என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார்.
அப்படியானால் வீட்டைக் கட்டுகிற அந்தப் புத்தியுள்ள ஸ்திரீ கர்த்தருடன் சேர்ந்து தான் தனது குடும்ப வீட்டைக் கட்டுகிறாள் என்பது தெளிவாய் புரிகிறது. ஏனெனில், கர்த்தர் கட்டாவிட்டால் அவளது பிரயாசம் விருதாவாகப் போய்விடும்.
கர்த்தருடன் இணைந்து கட்டும் வீடு கர்த்தரின் ஆசீர்வாதத்தால் நிறைந்து காணப்படும். வீடுகளில் பொதுவாக தொங்கும் ஒரு வாசகம், ‘சேர்ந்து ஜெபிக்கும் குடும்பமே சேர்ந்திருக்கும்’. அது எத்தனை உண்மை.
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தமது இல்லத்தின் தலைவராகக் கொண்டு அவரை ஆராதித்து அவருக்கு உண்மைத்துவமாய் இருக்கும் குடும்பமானது என்றும் தேவனுக்குப் பிரியமான குடும்பமாய் இருக்கும்.
அது கடவுளால் கட்டப்பட்ட குடும்பமாயும் இருக்கும்.
கட்டுவது இலகுவான காரியமல்ல. இலகுவில் முடியக் கூடிய காரியமும் அல்ல. அது பல சவால்கள், சோதனைகளையும், வேதனைகளையும் சந்திக்க நேரிடும். ஆனால், கர்த்தர் கூடவே இருக்கும் போது நாம் எதற்குப் பயப்பட வேண்டும்?
இன்று நமது குடும்பங்களின் நிலை எப்படி இருக்கிறது? புத்தியுள்ள ஸ்திரீகளாக நாம் நமது இல்லங்களைக் கட்ட முயலுகிறோமா? அல்லது, நமது கைகளாலே நமது குடும்பங்களுக்கு தலைகுனிவும் அழிவையும் கொடுக்க முயலுகிறோமா?
அன்பின் சகோதரிகளே, நாம் நம்மை ஆராய்ந்து பார்ப்போம். நாம் குணசாலிகளான ஸ்திரீகளா? அலலது…? கைகளால் வீட்டை இடித்து போடுகிற புத்தியில்லாத ஸ்திரீகளா?
குணசாலியான ஸ்திரீகளுக்கே கிறிஸ்து நித்திய கன்மலையாகக் காட்சி தருவார். நம் வாழ்விலும், நம் வீட்டார்க்கும், சபைக்கும் சமுதாயத்திற்கும் நல்ல பலன் அளிக்க முடியும்.
எனவே நாம் கர்த்தருக்குப் பயந்து, நலமானவற்றை பேசி, குடும்பங்களை நல்ல முறையில கட்டிக் காத்து, ஏழைகட்கு இரங்கி, கன்மலையாம் கிறிஸ்துவின் பாதப்படியில் மரியாள் போல் அமர்ந்து அவர் சித்தத்துக்கு முழுமையாக நம்மை ஒப்புக் கொடுத்து ஜீவிப்போம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், சமாதானமும் உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக.
ஆமென்.