Daily Manna 14

மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். சங்கீதம் 100:2

எனக்கு அன்பானவர்களே!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

பூமியெங்கும் வாழ்கிற மனிதர்களின் வாழ்கைமுறையை சற்று கவனித்து பார்த்தபொழுது, பொதுவான ஒரு சுபாவத்தை நாம் காணலாம்.

படித்தவர்களானாலும், படிக்காதவர்களானாலும்,ஏழையானாலும்,
பணக்காரனானாலும் கிராம வாசியானானாலும், பட்டணவாசியானாலும், ஏன் காட்டில் வாழும் ஆதிவாசியானாலும் தங்களுக்கு மேலாக ஒரு தேவன் இருக்கிறார் என்று விசுவாசித்து, அவரை ஏதோ ஒரு முறையில் ஆராதிக்கிறார்கள்.

இதை யார் கற்று தந்தது என்று பார்த்தால், தேவனாகிய கர்த்தர் மனிதனை உருவாக்கினபோதே இந்த உணர்வுடன் படைத்ததால் தான் நாத்திகர்கள் கூட அவர்களின் அறிவையும், ஞானத்தையும் (அவர்களுக்கே தெரியாமல்) கடவுளாக நினைத்து நம்பி, அதற்கு கீழ்படிந்து தொழுது கொள்ளுகிறார்கள்.

ஆனால் ஒருவரும் தாங்கள் செய்வது சரியா தவறா என்று ஆராய்ந்து பார்ப்பதில்லை. தங்கள் முன்னோர் சொன்னதை அப்படியே நம்பி செய்கின்றனர்.

தேவனுடைய பெரிதான கிருபையால் கிறிஸ்துவை ஆராதிக்கிற நாம் உண்மையாக இந்த உலகத்தை படைத்த தேவனை ஆராதிக்கிறோம். ஆனால் நம்முடைய ஆராதனை முறை சரியா, தவறா என்று எப்படி அறிந்து கொள்வது…?

நம் வாழ்கையில் எதையும் சரியானதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தேவனுடைய வார்த்தையை கொண்டு தான் அறிய முடியும்.

பரிசுத்த வேதத்தில்
ரோமர் :12: 1 -ல் சொல்கிறது;
“அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான, ஜீவபலியாக ஒப்புக் கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.”என்று கூறுகிறார்.

பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலனாகிய பவுல் முலமாக நமக்கு கற்றுத் தருவது, மேற்கண்ட வசனத்தின்படி நம் ஆராதனை இல்லையென்றால் அது தேவனுக்கு பிரியமில்லாத, நமக்கும் பிரயோஜனமில்லாத ஆராதனை ஆகும்.

ஞாயிறுதோறும் திருச்சபைக்கு போய் பாடி விட்டு வந்துவிட்டால் அது முழுமையான ஆராதனையாகிவிடாது. நம்முடைய ஆராதனையில் நம்மை
*ஆண்டவருக்கு பரிசுத்த பலியாகவும் ஜீவ பலியாகவும்* *அர்பணித்திருக்க வேண்டும்.*

பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவனுக்கு கொண்டு வரும் பலி பழுதற்றதாக, குறைவில்லாததாக இருக்க வேண்டும். நாம் வாழும் புதிய ஏற்பாட்டின் காலத்தில் வெளிபுற தோற்றம் முக்கியமில்லை.

ஆனால் நம்முடைய உள்ளம் பரிசுத்தமாக இருக்க வேண்டும். சிலர் நன்றாக குளித்து, மாமிசம் சாப்பிடாமல் இருப்பது சுலபம். ஆனால் உள்ளத்தை தூய்மையாக வைத்து கொள்வதே மிகவும் கடினம்.

அப்படியென்றால் எப்படி பரிசுத்தமாவது..? அதற்கு தான் தேவன், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவபட்டு, பரிசுத்த ஆவியானவர் நம் உள்ளத்தில் வந்தால், உள்ளம் உடல் ஆவி மூன்றும் பரிசுத்தமாகி விடும்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் இல்லாமல், நம்மை பரிசுத்த பலியாக ஒருபோதும் நம்மை படைக்க முடியவே முடியாது.

வேதத்தில் பார்ப்போம்,

உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவு கூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன்.
2 தீமோ 1: 4.

ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
பிலிப்பியர் 3 :3.

ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக் கொள்ளக் கடவோம்.
எபிரேயர் 12 :28.

பிரியமானவர்களே,

ஆதாமும் ஏவாளும் தங்கள் பிள்ளைகளான காயின், ஆபேலுக்கு ஆராதிக்க கற்றுதந்தனர். ஆனால் தேவன் ஆபேலின் பலியை மடாடுமே அங்கீகரித்தார்; ஏன் காயினின் பலியை ஏற்கவில்லை.

ஆண்டவருக்கு காய்கனிகள் பிடிக்காதா..? அப்படியல்ல.., எபிரேயர் 11:4 ல் வேதம் சொல்கிறது விசுவாசத்தினாலே ஆபேலின் பலி காயினின் பலியை காட்டிலும் மேன்மையானதாக கருதப்பட்டது.

ஆதலால் நாம் எப்போதெல்லாம் ஆராதிக்க கூடுகிறோமோ, அங்கே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்பதை விசுவாச கண்களில் பார்த்து, விசுவாசித்து பயபக்தியுடன் தொழுது கொள்ள வேண்டும்.
அதுவே தேவனுக்கு பிரியமான பலியாகும்.

ஜீவபலியாக என்று சொல்லும் போது, அது ஆவியின் பரிசுத்தமும், ஆத்துமாவின் விசுவாசமும், சரீரத்தில் கிரியையினாலே வெளிப்படும் போது தான் அது ஜீவனுள்ள பலியாக மாறுகிறது.

நாம் உலகத்தில் வாழுகிற வாழ்கை கிறிஸ்துவின் பரிசுத்தத்தையும், நாம் அவர்மேல் வைத்துள்ள விசுவாசத்தை கனிதரும் வாழ்வின் மூலமாக வெளிபடுத்தாவிட்டால், நாம் ஜீவனில்லாத கிறிஸ்தவராகி விடுகிறோம்.

கிரியையில்லாத விசுவாசம் செத்தது யாக்கோபு 2:26 என வேதம் சொல்கிறது. எப்படி ஆவியின் கனியை மாமிசத்தில் தருவது? நம் ஆண்டவர் தாமே சொன்னார்;

*”நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்,

என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.” யோவான் 15:5. அவர் வார்த்தையை அனுதினம் தியானித்து அதன்படி வாழ்ந்தால் நாம் கனிதரும் ஜீவபலியாக முடியும்.*

பிரியமானவர்களே கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு ஆராதனை வேறு, வாழ்க்கை வேறு. ஆனால் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிற நமக்கு ஆராதனை நம் அன்றாட வாழ்வில் ஆரம்பித்து திருசபையில் கூடி தேவனை தொழுது கொள்ளும் போது முழுமையடைகிறது.

ஆகவே இந்த நாளில், நாம் நம்மை கர்த்தருக்கென்று ஜீவனுள்ள பலியாக தேவனிடத்தில் ஒப்புக் கொடுப்போம். ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *