Who is alive without death?
மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கி விடுகிறவன் யார்?.
சங்கீதம் :89 :48
மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கி விடுகிறவன் யார்?.
சங்கீதம் :89 :48.
~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!
மரணத்தையும் பாதாளத்தையும் வென்றவராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஹாரி கௌடினி என்றொரு மனிதர் இருந்தார். 1874 ல் பிறந்த இவர், தனது வாழ்நாளில் உலகப் பிரசித்தம்.
“தப்பிதல்களின் தலைவன்” என்று இவரை அழைத்தார்கள்.
என்னை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கட்டலாம், பூட்டலாம், மாட்டி வைக்கலாம், அடைத்து வைக்கலாம் அனைத்திலும் இருந்து நான் தப்பிப்பேன், என பொதுவில் சவால் விடுவார். இவருடைய சவாலை ஏற்றுக் கொண்டு பலரும் பல விதங்களில் இவரைப் பூட்டி வைக்க நினைத்தார்கள். முடியவில்லை.
பல்லாயிரம் பேருக்கு முன்னால் வைத்தே, சவால்களை வெற்றியுடன் முடிப்பார்.
ஒரு முறை இவருக்காகவே ஸ்பெஷலாக 5 வருடங்கள் கஷ்டப்பட்டு ஒரு புதுவகை பூட்டைக் கண்டுபிடித்து அவரைப் பூட்டியது, லண்டன் “டெய்லி மிரர்” செய்தி நிறுவனம். அதிலிருந்தும் தப்பினார்.
உலகமே அவரை வியந்து பார்த்தது .
சங்கிலிகளால் பூட்டியது.அதிலிருந்து தப்பினார். சவப் பெட்டியில் அடைத்து புதைத்தார்கள்.
அதிலிருந்தும் வெளியே வந்தார். பால் கேனுக்குள் திணித்துப் பூட்டினாலும், வெளியே வந்தார். உயர் மட்ட பாதுகாப்புடைய சிறையில் போட்ட போதும் தப்பினார் !
ஆனால் கடைசியாக அக்டோபர் 31, 1926ல் மரணம் அவரைப் பூட்டியது. சாகும் முன் மனைவியிடம் சொன்னார். இதிலிருந்து தப்பிக்கும் வழி ஏதேனும் இருந்தால் நான் நிச்சயம் வருவேன். வந்து உன்னைச் சந்திப்பேன். நமது திருமண நாளில் உன்னை எப்படியும் வந்து சந்திப்பேன், காத்திரு ! என்றார்.
மனைவி மெழுகுதிரியும், இதயமும் உருக உருக காத்திருந்தாள். திருமண நாள் வந்தது. ஹாரி வரவில்லை. அடுத்த வருடம் திருமண நாள் வந்தது, ஹாரி வரவில்லை. வருடங்கள் கடந்தன. பத்து வருடங்கள் சென்ற பின் அவருடைய மனைவி தனது டைரியில் இப்படி எழுதினாள். “மரணத்திலிருந்து தப்பிக்க ஹாரியாலும் முடியாது ! ”
யாரும் தப்ப முடியாத ஒரு சுருக்கு தான் மரணம்.
அதை வென்றவர் இவ்வுலகில் ஒரே ஒருவர் தான். அவர் தான் இறைமகன் இயேசு கிறிஸ்து. மரணத்திலிருந்து உயிர்த்தவர்கள் லாசரைப் போல பலர் உண்டு. ஆனால் அவர்களுடைய பயணம் மீள முடியாத இன்னொரு மரணத்தில் அவர்கள் வாழ்வும் முடிவடைந்து போனது.
வேதத்தில் பார்ப்போம்,
ஒருவன் என் வார்த்தையைக் கைக் கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 8 :51.
எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான், என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.
நீதிமொழிகள்: 8 :36.
மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
1 கொரிந்தி: 15 :16.
பிரியமானவர்களே,
எப்பொழுதும் ஆவிக்குரிய காரியங்களை சிந்திக்க கூடியதான மனநிலை நமக்குத் தேவை. நம்முடைய உள்ளான மனிதன் எவ்விதமாய் காணப்படுகிறான் என்றால் எப்பொழுதும், மாம்ச சிந்தையுடன் வாழக்கூடிய மக்களாக காணப்படுகிறோம்.
. ஆனால் தேவ ஆவியானவர் நம்மை உயிர்ப்பிக்கும் பொழுது மாத்திரமே, நாம் ஆவிக்குரிய காரியங்களை சிந்திக்கிறவர்களாக காணப்படுவோம்.
ஆவிக்குரிய வாழ்க்கை என்பது தேவனுடைய ஆவியின் பெலத்தால் வாழுகிற பரிசுத்த வாழ்க்கையாகும். ஆவியானவரின் பெலமும், கிருபையும், ஒத்தாசையும் இல்லாமல், நாம் இந்த ஆவிக்குரிய வாழ்க்கையை ஒரு போதும் வாழமுடியாது.
அது மாத்திரமல்ல, மாம்ச சிந்தை மரணம். எப்பொழுதும் நம்முடைய வாழ்க்கையில் மாம்ச சிந்தையே மேலோங்க பிரயாசப்படும். ஆனால் நாம் ஆவிக்குரிய சிந்தை உள்ளவர்களாக, மாம்ச சிந்தையை அழிக்க தேவ பெலத்தால் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆவிக்குரிய சிந்தை நம்மில் எப்பொழுதும் காணப்படுவது மிக அவசியமான ஒன்றாகும். பவுல் இன்னுமாக “மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்”
(ரோம் 8:13) என்று சொல்லுகிறார்.
நம் வாழ்க்கையில் மேலோங்கும் சரீர சிந்தைகளை, ஆவியானவரின் பெலத்தைக் கொண்டு அழிக்க நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.
இன்னுமாக பவுல் “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்”
ரோமர் 6:23 என்று சொல்லுகிறார்.
நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் மூலமாக நாம் நித்திய ஜீவனைப் பெற்று வாழ வேண்டியவர்கள். நாம் ஏன் மாம்ச சிந்தையினால் நித்திய மரணத்தை சுதந்தரிக்க வேண்டும்?
தேவன் நமக்கு எப்போதும் அநுகிரகம் பாராட்டுகிறவராக இருக்கிறார்.
அவர் எப்பொழுதும் நம்மீது கிருபையும், பொறுமையும் கொண்டவராக இருக்கிறார். ஆகவே அன்பு நிறைந்த அந்த தேவனை நாம் சர்ந்து கொள்ளுவோம். அப்பொழுது ஆவியானவர் நம்முடைய மாம்ச சிந்தையை அழிக்க பெலனைக் கொடுப்பார்.
சோர்ந்து போகாமல் தேவனுடைய சர்வாயுதங்களைக் கொண்டு போராடுவோம் எபேசியர் 6:11.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள வழிநடத்துவாராக. .
ஆமென்