இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். யோவான்: 16:33.
இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார்.
யோவான்: 16:33.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எனக்கு அன்பானவர்களே!
வாக்குத்தத்தங்களை
நிறைவேற்றுகிறவராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்
1989-ம் ஆண்டு ஆர்மீனியா (Armenia) தேசத்தில் நடந்த நான்கு நிமிடத்திற்கும் குறைவானதாக பூமி அதிர்ச்சியில் (ரிட்சர் ஸ்கேலில் 8.2) ஏறக்குறைய 30,000 மக்கள் பலியாயினர்.
எங்கு பார்த்தாலும் ஓலங்களும், தங்களுக்குரியவர்களை இழக்க கொடுத்த துயரத்தில் அழுகைகளும், உயிரோடு இருப்பவர்களை தேடிக் கொண்டிருந்த உறவினர்களும் என்று ஒரே துயரமான சூழ்நிலை.
அதில் ஒரு தகப்பன் தன் மகன் படித்துக் கொண்டிருந்த பள்ளியை நோக்கி விரைந்தார். அங்கு பள்ளிக்கு இருந்த இடம்
கல்லும் மண்ணும் குவியலாக இருந்தது. அதைப் பார்த்த தகப்பனுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மற்ற பெற்றோர் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தியபடி தங்களது பிள்ளைகளின் பெயர்களை கூப்பிட்டுக் கொண்டே தேடிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இந்தத் தகப்பனோ தனது மகன் படித்துக் கொண்டிருந்த வகுப்பு இருந்த இடத்தை தேடி கண்டுபிடித்து, அந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தார். அவர் தன் மகனிடம் சொல்லியிருந்தார், நான் எப்போதும் தன் மகனுடன் தான் இருப்பேன் என்றும் அவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்றும் வாக்கு பண்ணியிருந்தார்.
அவர் தோண்ட ஆரம்பித்த போது, மற்ற பெற்றோர், ‘கால தாமதமாகி விட்டது, எல்லாரும் மரித்து விட்டனர், இனி ஒரு பிரயோஜனமில்லை’ என்றுக் கூறி அவரை தடுத்தனர். அவரோ விடாமல் தோண்ட ஆரம்பித்தார்.
தீயணைப்பு படையினர் வந்து ‘எங்கும் தீ பற்றி எரிந்து, வெடிக்கிறது, நீங்கள் எது செய்தும் பிரயோஜனமில்லை வீட்டுக்கு போய் விடுங்கள்’ என்று கூறி அவரை எச்சரித்தனர். அவரோ விடாப்பிடியாக தோண்டிக் கொண்டே இருந்தார்.
கடைசியாக போலீஸ் படையினர் வந்து ‘உங்கள் வேதனை எங்களுக்குப் புரிகிறது. இப்போது எந்தப் பயனும் இல்லை, போய் விடுங்கள்’ என்று அவரை அந்த இடத்திலிருந்து இழுத்தனர். அவரோ தன் மகன் மேல் கொண்டிருந்த அன்பினால் தொடர்ந்து தோண்டிக் கொண்டே இருந்தார்.
8 மணி நேரம்.. 12.. 24.. 34 மணிநேரம் என்று தொடர்ந்து ஓயாமல் தோண்டிக் கொண்டே இருந்தார். 38 ஆவது மணி நேரத்தில் அவரது மகன் உதவிக்கு அழைக்கும் அழுகுரல் அவருக்கு கேட்டது. உடனே ‘ஆர்மண்ட்’ (Armond) என்று உரத்த சத்தமாக கூப்பிட்டு பார்த்தார்.
உடனே மகன், ‘அப்பா நீங்களா! எனக்குத் தெரியும் என் நண்பர்களிடம் சொல்லியிருந்தேன், என் தகப்பன் உயிரோடு இருந்தால் என்னைக் காப்பாற்ற எப்படியும் வருவார் என்றேன், என் நம்பிக்கை வீண் போகவில்லை’ என்று மெல்லிய குரலில் கூறினான்.
மிகுந்த சந்தோஷத்துடன் இடிபாடுகளின் மத்தியிலிருந்து பத்திரமாக தானும் தன் நண்பர்களுடன் மீட்டெடுக்கப்பட்டான். ஒரு உலகப் பிரகாரமான தகப்பன் தன் மகனுக்கு கொடுத்த வாக்குக்காக போராடி தன் மகனை மீட்டெடுக்க முடியுமென்றால் நம் பரம தகப்பன் நமக்கும் வாக்கு பண்ணியிருக்கிறார்,
மத்தேயு:28:20 -ல்
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார்.
நம்மை ஒரு போதும் கைவிடாத கன்மலை கிறிஸ்து மட்டுமே.
வேதத்தில் பார்ப்போம்,
நீ தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும் போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன் பேரில் பற்றாது.
ஏசாயா 43 :2.
கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர், அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; .
சங்கீதம் 37 :28.
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
யோசுவா 1 :5.
பிரியமானவர்களே,
உலகத்தின் முடிவு பரியந்தம் நான உங்களுடனே கூட இருக்கிறேன் என்று வாக்கு பண்ணினவர் மாறாதவர். உங்கள் வாழ்க்கையில் காணப்படும் கல்லும் மண்ணும் எது?
கடன் பிரச்சனையா? வியாதியா? குடும்பத்தில் நிம்மதி இல்லையா? பாவக்கட்டு என்னும் எத்தனை, எத்தனை விதமான கல்லானாலும் சரி அவை அனைத்தையும் புரட்டித் தள்ளி நம்மை விடுவிக்க நம் தேவன் வல்லமையுள்ளவராகவே இருக்கிறார்.
2000 வருடங்களுக்கு முன்பு இயேசு கிறிஸ்துவின் கல்லறையை மூடியிருந்த கல்லை புரட்டித் தள்ளி உயிரோடு எழும்பின தேவன் இன்றும் உங்கள் வாழ்க்கையில் காணப்படும் அனைத்து விதமான கற்களையும் மாற்றி உங்களை விடுவிக்கவும், தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றவும் அவர் வல்லவராகவே இருக்கிறார்.
அவரது வாக்குத்தத்தங்களை பற்றிக் கொண்டு அதை உரிமையாக்கி கொள்வோம். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
நமது பிரச்சனைகளாகிய கற்களிலிருந்து விடுபட்டு வெளியே விடுதலையோடு வருவோம். கர்த்தர் உங்களுக்கு வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கிறாரா?
நம்மிடம் வாக்கு பண்ணினவர் உண்மையுள்ளவர். வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவர்.
ஆகவே நம்முடைய பிரச்சினைகள் தலைதூக்கும் போது கர்த்தர் நமக்கு தந்த வாக்குத்தத்தங்களை நினைவுகூறி அவற்றை அறிக்கையிட்டு வெற்றியுள்ள வாழ்வை சுதந்தரிப்போம்.
இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை பெற்றுக் வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.