Daily Manna 157

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள். நீதிமொழிகள்:12:22

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
நீதிமொழிகள்:12:22

எனக்கு அன்பானவர்களே!

நீதியின் நியாதிபதியாக இருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

உலகமெங்கும் வியாபித்திருக்கின்ற ஒரு தீமையான காரியம் பொய் கூறுவது அல்லது உண்மையல்லாத வாழ்க்கை வாழ்வது. பெரும்பாலான மக்களின் வாழ்வில் இதைக் காண முடியும்.

பொய்யான வாழ்வினால் உடைந்து போன குடும்பங்கள் ஏராளம். உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கு பொய் ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது.

பொய் பேசுவதற்கான சில காரணங்கள்: தன்னை காத்துக் கொள்வதாக நினைத்து சிலர் பொய் சொல்வதுண்டு. அப்படி சொல்பவர்களுக்கு துளி கூட கடவுள் நம்பிக்கை இல்லை என்றே சொல்லலாம்.

வேதத்தில் அனனியா என்றொரு செல்வந்தர் இருந்தார். அவருடைய மனைவி பெயர் சப்பிராள் . அவர்கள் ஆதி திருச்சபையில் ஆர்வம் கொண்டு பேதுருவின் சபையில் இணைந்தவர்கள். அவர்கள் சென்று தங்கள் செல்வத்தை எல்லாம் விற்று விட்டு பேதுருவிடம் ஒப்படைத்த போது கொஞ்சம் தங்களுக்கு என்று வைத்து விட்டு எல்லாவற்றையும் கடவுளுக்கு கொடுத்தோம் என்று பொய் சொன்னார்கள்.

ஆண்டவரின் முன்னிலையில் பொய் சொன்ன காரணத்துக்காக கணவனும் மனைவியும் அங்கேயே சுருண்டு விழுந்து மாண்டனர். கொஞ்சத்தை நமக்கென்று வைத்து கொள்ளலாம் என்று நினைத்தது தவறல்ல .ஆனால் அவர்கள் சொன்ன சிறிய பொய் தான் கடவுளின் முன்னிலையில் பெரிய தவறாக கருதப்பட்டது. ஒரு சிறு பொய் கூட தங்களை அழித்துவிடும் என்பதை அனனியா , சப்பிராள் வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்கிறது .

சிலர் தன்னை தான் உயர்த்தி காட்டுவதற்காக பொய் சொல்கிறார்கள். இந்த சூழல் இவ்வுலகில் எல்லா இடத்திலும் காணப்படுகிறது என்று சொன்னால் மிகையாகாது. போலித்தனமாய் பெருமை கொள்பவர்களை கடவுள் ஒரு போதும் விரும்புவதில்லை.

தினமும் ஒரு மனிதன் இருபத்தைந்து முறை பொய் சொல்கிறான் என்கிறது ஒரு அமெரிக்க ஆய்வு. அதிலும் வாலிப பருவத்தில் தான் இன்னும் அதிகமாக பொய் சொல்கிறார்கள் என்று இன்னொரு ஆய்வு சொல்கிறது. பத்து நிமிடம் சிந்தித்து பார்த்தால் நம்மை அறியாமல் எத்தனை பொய் சொல்கிறோம் என்று புரிய வரும்.

சிலர் மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பதற்கும், சிலர் மற்றவர்களை தாழ்த்துவதற்கும் பொய் சொல்வதுண்டு.
சிலருக்கு பொய் என்பது உயிருடன் கலந்துவிட்டது. தன்னை அறியாமலேயே அவர்கள் பொய் சொல்கிறார்கள். பொய் என்பது பிசாசின் ஆயுதங்களில் ஒன்று என்பதை பல நேரங்களில் நாம் மறந்து போகிறோம் .

வேதத்தில் பார்ப்போம்

அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள், இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.
சங்கீதம்:12 :2

நீங்கள் பொய்யை பிணைகிறவர்கள். நீங்கள் எல்லாரும் காரியத்துகுதவாத வைத்தியர்கள்.
யோபு:13 :4.

துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்: பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
நீதிமொழிகள்:17 : 4.

பிரியமானவர்களே,

பொய்யின் சிந்தனைகள் இருக்கின்ற உள்ளத்தில் உண்மையும், கடவுள் நம்பிக்கையும் அங்கு இருக்காது. அற்ப வெற்றிக்காக சொல்லும் பொய்கள் ஒரு போதும் நிலைப்பதில்லை.

மனிதர்கள் அழியலாம், ஆனால் அவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் ஒரு போதும் அழிவதில்லை. ஆதலால் தான் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எப்போதும் உண்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள் .

பாதி உண்மை ஒரு போதும் முழு உண்மையாகாது. உண்மை என்பது முழுமையானது.

பொய் தன்னலமுள்ளது , அதில் துளி கூட அன்பில்லை. பொய்யான வாழ்வல்ல வாழ்வு, உண்மையான வாழ்வே மெய்யான வாழ்வு. நம் ஆண்டவரும் விரும்புகிறதும் அதுவே.

நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உண்மையுள்ளவர் என்றும், நாம் படிக்கும் புனித வேதாகமம் உண்மையானது என்றும், சிறிதும் கலப்படமில்லாதது என்றும் ஆழமாக நம்புகிறோம்.

அப்படியிருக்கும் நாம் அவர் வழியை பின்பற்றும் போது உண்மையுள்ளவர்களாக மாற வேண்டும் என்பது எத்தனை அவசியம்.

நாம் இவ்வுலகில் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். இல்லையென்றால் வேதத்தை பின்பற்றுவதில் அர்த்தம் இல்லை.

பக்தன் தாவீது சங்கீதம் 120 :2 சொல்லுகிறார். கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்
என்று கூறுகின்றார்.

நாமும் இந்த ஜெபத்தை அனுதினமும் கூறுவோம்.
பொய்களை களைந்து மெய்யான வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *