அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார். லூக்கா 21:4
அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.
லூக்கா 21:4
************
அன்பானவர்களே,
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஆலயத்திற்கு செல்லும் போது நாம் காணிக்கை இடுவது வழக்கம்.ஆனால் அவற்றை கர்த்தர் ஏற்றுக் கொண்டாரா? என்பது நமக்கு தெரியாது.
நம்முடைய கணக்கு என்பது வேறு.
தேவனுடைய கணக்கு என்பது வேறு.அது எவ்வளவு வித்தியாசமாயிருக்கிறது பாருங்கள்!’
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிரே உட்கார்ந்து ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக் கொண்டிருந்தார்;
அந்தக் காலத்தில் காசுகள் தான் இருந்தன. ரூபாய் நோட்டுகள் இல்லை. காசுகளை அள்ளிக் கொண்டு ஒரு உலோக காணிக்கைப் பெட்டியில் போடுவார்கள்.
போடுகின்ற காணிக்கைக் காசுகளின் அளவைப் பொறுத்தும், எண்ணிக்கையைப் பொறுத்தும் சத்தம் எழும்பும். நிறைய சத்தம் வந்தால் நிறைய காணிக்கை போடுகிறார் என அர்த்தம்.
எல்லோரும் அவரை மரியாதையுடன் பார்ப்பார்கள். கொஞ்சம் சத்தம் வந்தால் கொஞ்சமாகப் போடுகிறார் என பார்ப்பார்கள்.
செல்வந்தர்கள் வந்தனர். பெரும் தொகையை அள்ளி அள்ளி காணிக்கைப் பெட்டியில் போட்டு விட்டு கர்வத்துடன் நடந்து செல்லுவார்கள்.
அங்கே ஒரு ஏழை விதவை வந்தார். அவரிடம் இருந்தது இரண்டே இரண்டு காசுகள். அதை அந்தக் காணிக்கைப் பெட்டியில் போட்டாள்.
டக் டக் என மெல்லிய இரண்டு சத்தங்கள் வந்தன.
இயேசு சீடர்களை அழைத்துச் சொன்னார்,
“இந்த காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட இந்தப் பெண் மிக அதிகமாகப் போட்டிருக்கிறார்” என்று கூறிய போது
எல்லோரும் குழம்பினர்.
செல்வர்கள் அதிகமாய்ப் போட்டதை பலரும் பார்த்திருந்தனர். ஏழைக் கைம்பெண்ணிடம் எதுவும் இல்லை என்பதும் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
இயேசு அவர்களுடைய சிந்தனைகளைப் புரிந்து கொண்டு பேசினார், “மற்ற அனைவரும், தங்களுக்கு மிகுதியாய் இருந்த செல்வத்திலிருந்து பணத்தை அள்ளிப் போட்டார்கள். இவரோ தமது பிழைப்புக்குரிய அனைத்தையுமே போட்டு விட்டார்”
இயேசுவின் விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் வியந்து போனார்கள். அதுவரை அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் உடைந்து போயிற்று.
காணிக்கையிடுதல் பற்றிய அவர்களுடைய புரிதல் ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது.
நமக்குப் பிடித்தமானதை வைத்து விட்டு மற்றதைத் தருவதல்ல உண்மையான காணிக்கை.
நாம் பிரியமாய் இறைவனுக்குத் தருவதே அழகான காணிக்கை.
வேதத்தில் பார்ப்போம்,
கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.
சங்கீதம்: 96:8
அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.
மல்கியா:3:4
அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள், இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.
லூக்கா 21:4
பிரியமானவர்களே,
ஆண்டவரை நேசித்து ஆலய தேவைகளுக்காக கொடுப்பவரை கர்த்தர் நிச்சயம் ஆசீர்வதிப்பார்.
பெருமைக்காக, புகழுக்காக அதிகமான பணத்தை கொடுத்தாலும்,
ஆதனால் ஆண்டவராகிய இயேசு அவர்களை ஒரு போதும் மெச்சிக் கொள்ள மாட்டார்.
ஏனென்றால் அவர்கள் இருதயம் தேவனுக்கு ஏற்றதாக இல்லை. அவர்கள் பெருமையோடு தான் காணிக்கை இடுகின்றனர்.
ஒருவேளை நீங்களும் அதிகம் காணிக்கை கொடுக்கிறவராக இருக்கலாம். நான் அதிகம் காணிக்கைக் கொடுப்பதினால் கர்த்தர் என்னை அங்கிகரீப்பார் என்றும் எண்ணலாம். இல்லை, ‘மனிதனோ முகத்தைப் பார்க்கிறான், கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்’
இந்த ஏழை விதவை இரண்டு காசுகளை மாத்திரமே போட்டாள். காசு என்று இங்கு சொல்லப்படுவது நம்முடைய பைசாவுக்குச் சமம். இவள் அந்த இரண்டு காசையும் மற்றவர்கள் பார்த்தால் என்ன எண்ணுவார்களோ என்ற பயத்துடன் போட்டிருக்கலாம். அவள் ஏழை என்று சொல்லப்படுகிறது. அவள் உடை மிகவும் எளிமையானதாக இருந்திருக்கும்.
ஆனால் ஆண்டவர் என்ன சொன்னார் ‘மற்றவர்களைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள். இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள்.’ தேவன், நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை விட எப்படிக் கொடுக்கிறோம் என்பதையே பார்க்கிறார்.
நமது பணத்தை விட நமது அர்ப்பணிப்பையே எதிர்ப்பார்க்கிறார்
மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் காணிக்கை இடவேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும்.
ஏழைப் பெண்ணின் காணிக்கை நிகழ்வு நம்மை சிந்திக்க வைக்கிறது அல்லவா.
கொடுக்கும் காணிக்கையின் அளவை அல்ல, காணிக்கை கொடுக்கும் மனநிலையையே இயேசு பார்க்கிறார்.
காணிக்கை கொடுப்பதையும், கொடுப்பவர்களையும் இயேசு கவனிக்கிறார்.
பாருங்கள், நாம் ஆண்டவருக்கு காணிக்கை செலுத்தும் போது உற்சாகமாய் செலுத்த வேண்டும். வலதுகை செய்வது இடதுகைக்கு தெரியாமல், நீங்கள் செய்யும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை பார்த்து மகிழ்ச்சியடைவார்.
ஆண்டவரை மகிழ்ச்சியடைய வைப்போம். நாமும் மகிழ்ச்சியாய் வாழ்வோம். கர்த்தரின் ஆசீர்வாதம் உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக.
ஆமென்.