Daily Manna 178

நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். நீதிமொழிகள்: 2:11.

நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.
நீதிமொழிகள்: 2:11.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எனக்கு அன்பானவர்களே!

யோசனையில் பெரியவராகிய கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு முறை நிறைய பணத்துடன் ரயில் வண்டியில் ஒரு வியாபாரி பயணம் செய்து கொண்டிருந்தார். பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்ற கவலை அவரை வாட்டியது.

ஏனெனில் அவருடைய எதிர் இருக்கையில் கூர்மையாக அவரை கவனித்துக் கொண்டிருந்தான் ஒருவன். பார்ப்பதற்கு திருடன் போல தோன்றியதால் பணத்தை பாதுகாப்புடன் வைத்திருக்க வியாபாரி முடிவு செய்தார்.

பணம் இருந்த பையை மடியில் கட்டிக் கொண்டார். எதிரில் இருந்த அவனும் அதை அபகரிக்கும் வழிகளை யோசித்தபடி இருந்தான்.

ஆனால் திருடன் விழித்திருக்க முடியாத அளவுக்கு தூக்கம் அவன் கண்ணை கட்டியது.எனவே அவன் முதலில் உறங்கிவிட்டான். வியாபாரியும் நள்ளிரவில் நன்றாக தூங்கி விட்டார் .

திருடன் பரபரப்புடன் எழுந்து அவரது உடைமைகள் எல்லாம் சோதித்தான். அவரது மடியை சோதனை செய்தான். எங்கு தேடியும் பணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மிகவும் சோர்ந்து உறங்கி விட்டான்.

மறுநாள் காலை முகம் கழுவி தனது இருக்கையில் வந்து அமர்ந்த திருடனுக்கு ஆச்சரியம். வியாபாரி பணத்தை எண்ணி சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் மிகுந்த ஆர்வத்தோடு “இரவில் அந்த பணத்தை எங்கு வைத்திருந்தீர்கள்?” என்று கேட்டான் திருடன்.

வியாபாரி சிரித்த படி சொன்னார் “உன் தலையணையின் அடியில் தான் வைத்திருந்தேன். நீ அதை கவனிக்கவுமில்லை. சோதிக்கவும் இல்லை. அதனால் என் பணம் தப்பியது” என்றார்.
அசடு வழிந்தான் திருடன்.

வேதம் கூறுகின்றது நீதிமொழிகள்:2: 11 -ல் “நல்யோசனை உன்னைக் காப்பாற்றும்.புத்தி உன்னை பாதுகாக்கும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

வேதத்தில் பார்ப்போம்,

உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
நீதிமொழிகள்: 16 :3.

ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம் பண்ணு .
நீதிமொழிகள்: 20 :18.

என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது
சங்கீதம் :40 :5.

பிரியமானவர்களே,

நல்யோசனை உன்னைக் காப்பாற்றும். ஏனெனில் அது நமக்கு தேவன் அளிக்கும் பரம ஈவு! நாம் எதையும் பேசும் போது அடுக்கு மொழி அவசியமில்லை! நல்யோசனை அவசியம்!

நல்யோசனை என்ற இந்த வார்த்தைக்கு உன்னுடைய வாழ்க்கையில் அர்த்தம் என்ன? என்றாவது ஒருநாள், ஐயோ நான் பேசும்முன் ஆலோசனை பண்ணாமல் பேசிவிட்டேனே என்று எண்ணியுள்ளாயா?

உடனுக்குடன் பதில் கொடுத்து பேசுவது, அல்லது அதிகமான வார்த்தைகளை அள்ளி வீசுவது, சுய கர்வத்தோடு பேசுவது இவை என்றுமே நமக்கு அழிவுக்கு தான் வழிவகுக்கும்

நம்முடைய ஆத்துமாவையும், நமக்கு கொடுக்கப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், கர்த்தர் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களையும் கெடுக்க மனிதர்களும், சாத்தானும் சகல வித தந்திரங்களையும் பயன்படுத்துவார்கள்.

ஆனால் நீதிமொழிகள் 21:30,31-ல் “கர்த்தருக்கு விரோதமான ஞானமும் இல்லை. புத்தியும் இல்லை. ஆலோசனையும் இல்லை என்று கூறுகின்றன.

குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும் .ஜெயமோ கர்த்தரால் வரும் “என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நம்முடைய முழு நம்பிக்கையையும் கர்த்தர் மேல் வைத்து, அவருடைய வழியில் வாழ்ந்து, அவருடைய ஆலோசனைகளுக்கும் புத்திக்கும் இடம் கொடுப்போமென்றால், சாத்தானுடைய சகல கிரியைகளில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளுவோம்.

நாம் வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் போது கர்த்தர் தருகிற நல்ல ஆலோசனைகளை நாடுவோம். ஏனெனில் அவர் யோசனையில் பெரியவர். செயல்களில் வல்லவர்.

ஆகவே நமது எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தர் தருகிற நல்ல ஆலோசனைகளை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *