பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். நீதிமொழிகள்: 22 :6
பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
நீதிமொழிகள்: 22 :6.
~~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!
நல்ல வழியில் நம்மை நடத்துகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு அம்மாவுக்கு பாலு என்ற ஒரு மகன் இருந்தான். ஒரு நாள் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வரும் போது வழியில் நாதன் என்பவருடைய தோட்டத்தில் இருந்த கீரைச் செடிகளை பார்க்கிறான்.
அதில் கொஞ்சம் கீரைகளை பறித்து அதை வீட்டுக்கு கொண்டு சென்றான். வீட்டுக்கு போனதும் தன் அம்மாவிடம் “அம்மா அம்மா நான் கொஞ்சம் கீரைகளைக் கொண்டு வந்திருக்கேன். இதை சமைத்து தாரீங்களா!” என்று கேட்டான் பாலு.
அவன் அம்மா “எங்கிருந்து இந்த கீரைகளை கொண்டு வந்தாய்?” என்றதற்கு பாலு “நான் இதை நாதன் அவர்கள் தோட்டத்தில் இருந்து கொண்டு வந்தேன்” என்று அப்பாவியா சொன்னாலும் உண்மையில் பாலு கீரைகளைக் திருடி தான் வந்திருக்கிறான். ஆனால் அவன் அம்மாவோ பாலு இன்னும் சின்ன பையன் தானே தெரியாம கீரைகளை பறித்து வந்திருப்பான் என்று அவனை எதுவும் சொல்லவில்லை.
அவன் அம்மா அவனுக்கு அந்த கீரைகளை வைத்து அன்று இரவு சுவையான சாப்பாடு செய்து கொடுத்தார்கள். கொஞ்ச நாளுக்கு அப்புறம், ஒரு மரத்திலிருந்து மாங்காயை பறித்து அதை வீட்டுக்கு கொண்டு வந்து அவன் அம்மாவை மாங்காய் ஊறுகாய் செய்ய சொன்னான். முன்னாடி போலவே அவன் அம்மா அவனை திட்டவில்லை.
பாலு வளர வளர ரொம்ப குறும்பு செய்யத் தொடங்கி விட்டான்.
அவன் தாயோ அவனுக்கு சுவையான சாப்பாடு செய்து கொடுத்து வந்தாள். அவன் அதை சந்தோஷமாக சாப்பிட்டான்.
ஒரு நாள் முன்னாடி ஏற்கனவே செய்ததைப் போல பாலு பழங்களை பறிக்கும் போது தோட்டக்காரர் அவனை கையும், களவுமாக பிடித்தார். அவனை அவன் வீட்டுக்கு கூட்டிகிட்டு போய் அவங்க அம்மாகிட்ட அவன் திருட்டை பற்றி சொன்னார்.
ஆனால் பாலுவின் அம்மாவுக்கு ரொம்ப கோபம் வந்தது. “என் பையன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான். வேறு யாரோ திருடினதற்காக இவன் மேல பழியை போடாதீங்க” என்று சொல்லி தோட்டக்காரனை திட்டி அனுப்பிட்டாங்க.
அவன் அம்மா அவனை கண்டிக்காமல் விட்டதால் அவனால் அவன் தப்பை உணர முடியவில்லை. அம்மா அவனுடைய குணத்தை உற்சாகப்படுத்துகிறார்கள் என்று நினைத்தான் பாலு.
சில வருஷங்களுக்கு அப்புறம் பாலு பெரியவன் ஆனான். வயது ஆக ஆக நம்முடைய தேவைகளும் மாறும். அவன் சின்ன வயசுல பழங்களையும், காய்கறிகளையும் திருடினான்.
அனால் இப்போது அவன் தேவைகளுக்கு ஏற்ற மாதிரி பணம், அடுத்தவர்களின் பர்ஸ், வழிப்பறிப்பு போன்ற பொருட்களை திருட ஆரம்பித்தான்.
அவன் அம்மா இப்போ நினைத்தாங்க பாலு பெரிய பையன் ஆயிட்டான் அவன் என் பேச்சை கேட்க மாட்டான் என்று நினைத்து அவனை அப்பவும் அவங்க கண்டிக்கவில்லை.
ஒரு முறை அவன் திருடும் போது அவனை போலீஸ் கையும், களவுமாக பிடித்தார்கள். அப்போது போலீஸ் அவனை பிடிச்சு அடித்து உதைத்ததை அவன் அம்மா பார்த்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாங்க.
அப்போது பாலு அவன் அம்மா கிட்ட சொன்னான் “இப்ப அழுது என்ன பிரயோஜனம் அம்மா நீங்க, நான் முதல் தடவை நாதன் தோட்டத்தில் இருந்து திருடிய போது என்ன தடுத்திருந்தால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டேனேம்மா என்று சொல்லி அழுதான். போலிஸ் அவனை பிடித்து இழுத்துக் கொண்டு போனாங்க.
அன்பானவர்களே, எப்போதெல்லாம் குழந்தைகள் தப்பு பண்ணுகிறார்களோ! அப்போதெல்லாம் அவர்கள் செய்தது தவறு என்று உணர வைக்க வேண்டியது, அவர்கள் பெற்றோருடைய பொறுப்பு.
இல்லையென்றால் குழந்தைகள் வளரும் போது அந்த தப்புகள் பழக்கமாக மாறி அவர்களை தப்பான வழியில் கொண்டு செல்லும்.வேதனை அவங்களுக்கு மட்டுமல்ல நமக்கும் தான்.எனவே பிள்ளைகளை வளர்ப்பதில் விழிப்புணர்வோடு இருப்போம்.
வேதத்தில் பார்ப்போம்,
பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனை விட்டு அகற்றும்.
நீதிமொழிகள்: 22:15
பிரம்பும் கடிந்து கொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான்.
நீதிமொழிகள்:29:15
உன் மகனைச் சிட்சை செய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
நீதிமொழிகள்: 29:17
பிரியமானவர்களே,
ஒரு குழந்தைகள் வளரும் போது… அதன் ஒட்டு மொத்த வளர்ச்சியில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல் தான் குழந்தைகளின் தனித் திறனை வளர்க்க உதவும்.
வேலை, குடும்ப பொறுப்புகள் என எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்தாலும் குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
குழந்தைகள் வளரும் போதும் அவர்களுடன் இருந்து வழிநடத்தி செல்வது அவர்களை சரியான வளர்ச்சி பாதையில் பயணிக்க வழி வகை செய்யும்.
அதுமட்டுமல்ல அவர்களின் சிந்தனைகள், செயல்திறன்களை மேம்படுத்தவும் உதவும்.
பெற்றோர்களின் நடவடிக்கைகளை பார்த்தே பிள்ளைகள் வளருவார்கள் என்பதால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது முக்கியமானது.
பெற்றோரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் அதனை பின்பற்றும் பிள்ளைகளும் சிறந்த மனிதர்களாக உருவாகுவார்கள்.
அது மட்டுமல்ல அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை எளிதாக தீர்க்கும் திறன்களையும் மேம்படுத்திக்
கொள்வார்கள்.
எல்லா சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாளுதல், ஒழுக்கம், நேர்மை, போன்ற நடைமுறைகள் மூலம் தங்கள் தகுதியையும் வளர்த்துக் கொள்வார்கள்.
சமூக தொடர்பு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை பெற்றோர் எவ்வாறு கையாள்கிறார்கள், எத்தகைய தீர்வை நாடுகிறார்கள் என்பன போன்ற விஷயங்களை பிள்ளைகள் கவனிக்கிறார்கள்.
மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது, சமூகத்துடன் எத்தகைய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது, சரியான நண்பர்களை எப்படி தேர்ந்தெடுப்பது,
யாவற்றையும் தன் பெற்றோரிடம் இருந்து கற்றுக் கொள்கிறார்கள்.
பெற்றோரிடமிருந்து கிடைக்கும் சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இந்த விஷயத்தில் பெற்றோரைத் தான் பிள்ளைகள் ரோல்மாடலாக கருதுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே பெற்றோர்கள் கர்த்தரை முன் வைத்து வாழ வேண்டும்.அப்போது பிள்ளைகளும் அதே வழியை பின்பற்றுவர்.
நாம் யாவரும் கர்த்தரை முன் வைத்து வாழ்ந்து நீதியின் வழியில் நடக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.