Daily Manna 180

கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி அழாதே என்று சொல்லி, கிட்ட வந்து, பாடையைத் தொட்டார். லூக்கா. 7:13.

கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி அழாதே என்று சொல்லி, கிட்ட வந்து, பாடையைத் தொட்டார்.
லூக்கா. 7:13.
~~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஆப்பிரிக்கா தேசத்தில் பசியின் கொடுமையினால் மக்கள் இறப்பதை தொலைக்காட்சியில் பார்த்து உள்ளம் உருகி அழுது கொண்டிருந்தார் ஒருவர்.

அப்போது அவர் வீட்டு கதவு தட்டும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார் என்று ஆத்திரப்பட்டுக் கதவைத் திறந்து பார்த்தார். அங்கே ஒரு ஏழைத் தாய் சின்ன சின்ன இரண்டு குழந்தைகளோடு பசியினால் கூனிக்குறுகி பிச்சை கேட்டுக் கொண்டு நின்றாள்.

இவருக்கு வந்ததே கோபம்; உங்களுக்கெல்லாம் நேரம் காலமே இல்லையா போவியா என்று கடினமாகப் பேசி விட்டு கதவை டமார் என அடைத்துக் கொண்டார்.

இப்படித் தான், எங்கேயோ பட்டினியாயிருப்பவர்களுக்காக மனதுருகும் நாம், நமது கண்கள் முன்னே வாடி வதங்கி திரிகிற மக்களை கண்டும் காணாதவர்கள் போல கடினமாய் நடந்து கொள்ளுகிறோம் . இது தான் உண்மையான மனதுருக்கமா?

இங்கு வேதத்தில் நாயீன் ஊருக்கு இயேசு போனார். அவ்வூரின் வாசலருகே மரித்த ஒருவனை அடக்கம் செய்ய வந்தார்கள். அவன் தாய்க்கு ஒரே மகன்.அவளோ ஒரு விதவை. அநேக ஜனங்கள் அவருடனே கூட வந்தார்கள்.

கர்த்தர் அவளை பார்த்து அவள் மேல் மனதுருகி அழாதே என்று சொல்லி பாடையின் அருகில் வந்தார்.விதவையாகி அவளுக்கிருந்த ஒரேயொரு நம்பிக்கை அவளது மகன் மட்டுமே.

அந்த நம்பிக்கையும் இப்போது செத்து விட்டது. அவளது வேதனையில் பங்கு பெற்று, அவளுக்காகப் பரிதாபப்பட்டவர்கள் அநேகர் இருந்தார்கள்.

ஆனால், மகனின் உடலை அடக்கம் செய்த பின்னர் அந்த அநேகரில் ஒருவராவது அவளுடன் கூடயிருந்து அவளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா? இந்த நிலையிலிருந்த அந்தத் தாயைத் தான் இயேசு சந்தித்தார்.

அவள் நிலையைக் கண்டு அவளுக்காக மனதுருகினார்.
வெறுமனே அவளுக்காகப் பரிதாபப்பட்டுக் கடந்து போகவில்லை. பாடையின் அருகில் வந்தவர் பாடையைத் தொட்டார். மரித்தவனை உயிரோடு எழுப்பினார்.அவன் தாயின் வேதனையும் நீக்கினார்.

அன்பான
தேவபிள்ளையே, மனதுருக்கம் என்பது மனதளவில் அல்ல; செயலிலே வெளிப்படுகிற ஒரு தெய்வீக பண்பு. ஒரு நாளைக்கு எத்தனை தடவை “ஐயோ பாவம்” என்று சொல்லியிருப்போம்!

ஐந்தோ பத்தோ வீசி எறிந்து விட்டால் போதாது. மனதளவிலும், உடல் அளவிலும் சிதைக்கப்பட்டு, உருக்குலைந்து, நைந்து, நைந்து, வாழுகின்ற மக்களுக்காக மனதுருக்கத்தை வெளிப்படுத்துவது யார்?

உண்மையான மனதுருக்கம் என்பது வாயளவில் அல்ல, அது உண்மையாய் நமது செயலிலே வெளிப்பட வேண்டும்.

வேதத்தில் பார்ப்போம்,

கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, கிட்ட வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா :7:13-14

மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத் தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.
லூக்கா :7:15

எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
லூக்கா: 7:16

பிரியமானவர்களே,

இயேசு இன்று உங்கள் வேதனையை காண்கிறார்.அன்று அந்த விதவைக்கு அந்த மகன் அவசியமாயிருந்தான் இன்று உங்கள் அவசியம் என்னவென்று நமது ஆண்டவர் நன்கு அறிவார். உங்கள் கண்ணீரை காண்கிற தேவன் அவர்.

அவர் ஊரின் வாசலுக்கு சமீபித்த போது மரித்து போன ஒருவனை அடக்கம் பண்ணும் படி கொண்டு வந்தார்கள். அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம் பெண்ணாயிருந்தாள்ஊராரின் வெகு ஜனங்கள் அவளுடனே கூட வந்தார்கள்
லூக்கா:7:12 இந்த வசனங்களில் இரண்டு விதமான திரள் கூட்டத்தை பற்றி பார்க்க கூறுகின்றன.

ஒரு கூட்ட மக்கள் இயேசுவோடு கூட வருகின்றார்கள்.
மற்றொரு கூட்ட மக்கள் தன் மகனை பறிகொடுத்த விதவை தாயோடு வருகின்றார்கள்.
இயேசு செய்யும் அற்புதங்களை பார்த்திட அவரோடு கூட திரளான ஜனங்கள் நடந்து வந்திருப்பார்கள். மரித்த வாலிபனை அடக்கம் செய்திட விதவை தாயோடு கூட திளரான ஜனங்கள் நடந்து வந்திருப்பார்கள்.

இப்படிப்பட்ட இரண்டு விதமான திரள் கூட்ட ஜனங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இயேசு கிறிஸ்து முயற்சி செய்யாமல், நம்பிக்கை இழந்த நிலையில் கண்ணீரோடு காணப்படும் தாயை தேற்றுவதையே மேன்மையாக கருதியுள்ளார்.

ஏனென்றால் அந்த தாயின் நிலை மிகவும் மோசமாயிருந்தது. அவளுடைய கணவனும் மரித்து போயிருந்தான். இப்போது அவளுடைய வாழ்வுக்கு ஒரே நம்பிக்கையும் ஆதாரமுமாயிருந்த மகனும் இறந்து போனான்.

இனி அவளுக்கு யாரும் இல்லை. பாதுகாப்பும் இல்லை. அவள் தனித்து போனதை நினைத்து கதறி கதறி அழுது கண்ணீ விட்டதை இயேசு கண்டார்.

இயேசு தனது வாழ்க்கையில் கண்ணீர் சிந்திய அநேகரை சந்தித்த போதிலும், இப்படிப்பட்ட ஒரு கண்ணீர் சிந்துகின்ற தாயை சந்தித்த பொழுது தாமாகவே முன் சென்று அவளை பார்த்து மனதுருகி அழாதே என்றார்.

எத்தனை பெரிய ஆச்சரியம் இயேசுவிடம் யாரும் இந்த மரித்து போன மகனை எழுப்பும் படி கேட்கவுமில்லை, மன்றாடவுமில்லை. அவராகவே சென்று பாடையை தொட்டார். தொட்டதும் அதை சுமந்தவர்கள் நின்றார்கள்.

அப்பொழுது அவர், வாலிபனே எழுந்திரு என்று உனக்கு சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். லூக்கா:7:12-15. என்று பார்க்கிறோம்.

பிரியமானவர்களே,
உங்கள் சூழ்நிலையை யாரும் காணவில்லை என்று கலங்கி தவிக்கின்றீர்களா?பயப்படாதிருங்கள். உங்களுடைய எல்லா சூழ்நிலையும் அவர் நன்கு அறிவார் உங்களையும் தேடி நிச்சயம் வருவார்.

நீங்கள் எல்லா சூழ்நிலையிலும் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்திருக்கும் இயேசுவையே நோக்கிப் பாருங்கள். நமது ஆண்டவர் மனதுருக்கமுள்ளவர் .

இயேசு உங்கள் வேதனையை காண்கிறார். அன்று அந்த விதவைக்கு அந்த மகன் அவசியமாயிருந்தான் இன்று உங்கள் அவசியம் என்னவென்று நமது ஆண்டவர் நன்கு அறிவார். உங்கள் கண்ணீரை காண்கிற இயேசு கிறிஸ்து நிச்சயம் உங்களுக்கு விடுதலை தருவார்.

நமது எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரே நமக்காக வந்து நம்மை சமாதானமாய் வாழச் செய்வார்.

கர்த்தர் தாமே இந்த ஓய்வு நாளிலே நம் யாவரையும் ஆசீர்வதித்து நம் தேவைகளை சந்தித்து வளமான வாழ்வுக்கு நேராக நம்மை அழைத்துச் செல்வாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *