அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; யோவேல்: 2 :32.
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒருமுறை கேரளாவைச் சேர்ந்த ஒரு பக்தி நிறைந்த மனிதர் தம் மகனைப் பற்றி கண்ணீரோடு சாட்சி சொன்னார்.
தன் மகன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானான். நாங்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தோம் கீழ்ப்படியவில்லை. சபையார் எல்லாரும் அவனுக்காக ஜெபித்தோம்.
ஒரு நாள் இரவு டெல்லியிலிருந்து ஒரு ஊழியக்காரர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவர் சொன்ன காரியம் கர்த்தர் என்னோடு பேசினபடியால் உங்கள் மகனைப் பார்க்க வந்ததாக சொன்னார்.
நான் அவரை என் மகன் இருந்த அறைக்குள் அழைத்துச் சென்றேன். அவனோ தன் நண்பர்களோடு குடித்து கொண்டிருந்தான்.
அந்த ஊழியக்காரர் அந்த மகனோடு நான் உன்னை பார்க்கும் படி ஆண்டவர் என்னை இங்கு அழைத்து வந்தார். மகனே! நீ இந்த பாவ பழக்கவழக்கங்களை விட்டு விடு என்று அன்பாக சொன்னார்.
அவன், அவர் சொன்ன எதையும் பொருட்படுத்தாமல் அவன் வாயிலிருந்த மதுபானத்தை அவர் முகத்தின் மேல் உமிழ்ந்தான். அவரோ ஒன்றுமே பேசாமல் அந்த இடத்தை விட்டு வருத்தத்தோடு போய் விட்டார்.
சில நாள்கள் கழித்து அவனுக்கு தொண்டையில் தாங்க முடியாத வேதனையால் மிகவும் கஷ்டப்பட்டான். இதைப் பார்த்த அவன் தகப்பனார் அவனை மருத்துவர்களிடம் அழைத்து வந்து அவனை பரிசோதித்து பார்த்த போது, அவன் தொண்டையில் புற்று நோய் என்று உறுதிப்படுத்தினார்கள்.
மேலும் அந்த நோயை குணப்படுத்த முடியாத அளவுக்கு போய் விட்டது. இவன் சில நாட்களில் மரித்து போய் விடுவான் என்று சொல்லி விட்டார்கள்.
மருத்துவர்கள் சொன்னதைக் கேட்ட வாலிபன் அதிர்ந்து போனான். ஐயோ என் வாழ்க்கையை நானே அளித்து விட்டேனே, இரட்சிப்பு என்னை தேடி வந்ததே நான் உதாசீனம் செய்து விட்டேனே என்று வருந்தினான். ஆனால் காலம் கடந்து விட்டது.
மருத்துவர்கள் சொன்ன படியே சில நாட்களில் அவன் மரித்து விட்டான். அவனுக்கு தேவன் அனேக தருணங்களை கொடுத்தும் அவன் அதை உதாசினப்படுத்தினதையும் மேலும் அவனை இரட்சிப்புக்குள்ளாக நடத்த முடியாததையும் நினைத்து, அவன் தகப்பனார் கண்ணீரோடு சாட்சி சொன்னார்.
பிரியமானவர்களே, உங்களை நிதானித்து பாருங்கள், பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொண்டீர்களா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் இலவசமாக உங்களுக்காக பெற்று தந்த இரட்சிப்பை பெற்றுக் கொண்டீர்களா?
சிந்தித்துப் பாருங்கள்.
வேதத்தில் பார்ப்போம்,
இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின் மேல் இருப்பதாக.
சங்கீதம்: 3 :8.
கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
புலம்பல்: 3 :26.
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
அப்போஸ்தலர்: 4:12.
பிரியமானவர்களே,
கர்த்தர் தம் மக்களுக்கு சொல்லுகிறது என்னவென்றால், என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.
ஆம், நாம் பிழைக்கும் படியான ஒரே வழி தேவனை தேடுவது மாத்திரமே. இன்றைக்கு அநேக மக்கள் தேவனைத் தேடுகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் அதோடு கூட மற்றவற்றையும் தேடுகிறார்கள்.
“பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும் சேராதேயுங்கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும் போகும்”
ஆமோஸ் 5:5. அநேகருடைய வாழ்க்கையில் தேவனை மாத்திரமே தேட வேண்டும் என்ற உணர்வு இருப்பதில்லை.
வேதம் தெளிவாக கூறுகின்றது இரு மனம் உள்ளவன் தன் வழிகளில் எல்லாம் நிலையற்றவன் என்று சொல்லுகிறது. நம்முடைய வாழ்க்கையில் இருமனம் உள்ளவர்களாக இருப்போமானால் நம்முடைய வாழ்க்கையில் தேவன் ஒரு போதும் செயல்படமாட்டார்.
தேவனைத் தேடும் பொழுது பிழைப்பீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். “தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது”
புலம்பல்: 3:25-26 என்று வேதம் சொல்லுகிறது.
நீங்கள் உங்களுடைய காரியங்களில் நிலையான சிந்தையோடு வாழ்வதே இல்லை. கொஞ்சம் காத்திருந்தாலும் உடனடியாக உங்களுடைய மனதில் அவிசுவாசப்பட்டு கர்த்தருக்கு புறம்பான வழிகளைத் தேடும் படியாக தீவிரிக்கிறீர்கள்.
அது உங்களுடைய வாழ்க்கையில் நன்மை பயக்காது. நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரை மாத்திரமே தேடுவோம்.
அப்பொழுது நிச்சயமாக நாம் பிழைப்போம் என்பதில் சந்தேகமில்லை.
வேதம் சொல்லுகின்றது
கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப் பண்ணினார்.
சங்கீதம் 98:2 . என்று பார்க்கிறோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே தம்முடைய இரட்சிப்பை நம் யாவருக்கும் பிரஸ்தாபமாக்கி நமக்கு நல்வாழ்வை கட்டளையிடுவாராக.
ஆமென்.