Daily Manna 191

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள்: 18 :21.

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
நீதிமொழிகள்: 18 :21.
~~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள். அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மணம் முடிக்க போட்டி போட்டவர்களிடம் ” நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்” என்று சொன்னார்.

மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர்.
குரு அவர்களைப் பார்த்து ” உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்” என்று சொன்னார்.

மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.
ஒருவன் தேனைக் கொண்டு வந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.

அதில் குருவின் சீடன் ஒருவன் எப்படியாகிலும் இந்த பெண்ணை நான் திருமணம் செய்ய வேண்டும். எனவே உலகில் இனிமையானது எது? என்று எங்கெங்கோ அலைந்து திரிந்தான்.
எதுவும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சோர்ந்து போய் நடந்து கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு அம்மா, தன் குழந்தையை காணாமல் அங்கும் இங்கும் தேடி அலைந்து அலறிக் கொண்டு திரிந்தாள்.

அப்பொழுது ஒரு சின்ன சத்தம்..”அம்மா” என்று கூப்பிட்டதும்… அந்தப் பிள்ளையை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்ட போது, அந்த தாயின் உள்ளத்திலும், முகத்திலும் இருந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அப்பொழுது புரிந்து கொண்டான். உலகின் மகிழ்ச்சி எது என்பதை.

வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்றிருந்தான்.
குரு அவனைப் பார்த்து நீயுமா என்று ஆச்சரியமாக கேட்டார்.”ஆம்” என்று சொன்னான்.

குரு” நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்?” என்று கேட்டார்.
சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான்.
அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது.
குரு அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

குரு ‘என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்” என்று கேட்டார்,
சீடன் ” குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டு வர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது?

மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால் தான் குறியீடாக ஆட்டின் நாவை கொண்டு வந்தேன். நாவில் இருந்து தான் இனிமையான சொற்கள் வருகின்றன. அது சோகத்தில் இருப்பவன் கேட்டால் சந்தோசம் அடைகிறான்.

குரு “இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள்” என்று சொன்னார்.
சீடன் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டான்.
குரு ” உலகிலேயே கசப்பான ஒரு பொருளைக் கொண்டு வா” என்று சொன்னார்.மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளைக் கொண்டு வந்தனர்.

கடைசியாக சீடன் வந்தான்.
அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதே ஆட்டின் நாக்கு.
குரு ” என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளைக் கேட்டேன் நாவை கொண்டு வந்தாய்.
கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?” என்று கோபமாக கேட்டார்.

சீடன் ” தீய சொற்களை பேசும் நாவைப் போல கசப்பான பொருள் இவ்வுலகில் உண்டா?

அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான பொருள்” என்று சொன்னான்.

சீடனின் அறிவைக் கண்டு வியர்ந்த குரு தன் மகளை அவனுக்கே மனம் முடித்துக் கொடுத்தார்.

வேதம் சொல்லுகிறது மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.

நாவு ஒரு சிறிய உறுப்பு தான்.
நரகத்தின் வாசல்படியும் அது தான். சொர்க்கத்தின் திறவுகோலும் அது தான்.

வேதத்தில் பார்ப்போம்,

நாவும் நெருப்புத் தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச் சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்தி விடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
யாக்கோபு: 3 :6.

துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக் கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவி கொடுக்கிறான்.
நீதிமொழிகள்: 17 :4.

நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
சங்கீதம் :37 :30.

பிரியமானவர்களே,

சிறிய செயல்கள், சிறிய வார்த்தைகள், சிறிய பாவங்கள், மனித வாழ்வில் பெரிய மாற்றங்களையும், ஆசீர்வாதங்களையும், சாபங்களையும் கொண்டு வருகிறது.

முதல் மனிதன் ஆதாமின் சிறிய செயலான கீழ்ப்படியாமை உலக மக்கள் அனைவருக்கும் பாவத்தைக் கொண்டு வந்தது. தாவீதின் சிறிய பாவம் அவனுக்கு மனவேதனையையும் ஆசீர்வாத இழப்பையும் கொண்டு வந்தது.

மேலும் சீரியா தேசத்து அடிமைப் பெண்ணின் சிறிய நாவின் வார்த்தை நாகமானுக்கு பெரிய விடுதலையைக் கொடுத்தது.

சிறிய பையனின் சிறிய உணவு ஐயாயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு உணவளித்தது.

சிறிய கடிவாளம் குதிரையின் முழு சரீரத்தையும் வழிநடத்துகிறது. சிறிய சுக்கான் பெரிய கப்பலைச் சரியாக நடத்துகிறது.

சிறிய நெருப்பு, பெரிய காட்டையும், அதிலுள்ள மரங்களையும், விலங்குகளையும் அழித்து விடுகின்றன என்று நாம் பார்க்கிறோம்.

நாவை நமது உணர்வுகளையும் நினைவுகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த ஆண்டவர் நமக்குக் கொடுத்த அற்புதமான அவயம்.

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் உள்ளது. இதயத்தின் நிறைவை நாவு பேசும்.

நாவைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் அது அழிவை உண்டாக்கும் நெருப்பு.

ஒரு மனிதனைக் கோபமூட்டினால் அவன் நல்லவனா, கெட்டவனா என்பது தெரிந்து விடும். அவன் வாயிலிருந்து அக்கினியும் கந்தகமான வார்த்தைகள் வரும்.
இதனாலே பிற மனிதனை சபிக்கிறான்.

ஆனால் இயேசு கிறிஸ்துவைக் கவனித்துப் பாருங்கள். அவர் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் வல்லமையுடையதாய் அதிகாரமுடையதாய், மனிதனுடைய தேவையைச் சந்திப்பதாயும், கடவுளுக்கு மகிமையைக் கொண்டு வருவதுமாய் இருந்தது.

இயேசுவின் ஒரே வார்த்தையில் நாயீனூர் விதவையின் மகன் மரணத்தினின்று உயிர் பெற்றான்.

நூற்றுக்கதிபதியின் வேலைக்காரன் இயேசுவின் ஒரே ஒரு வார்த்தையினால் சுகமானான்.

மரித்து நான்கு நாளான லாசரு, இயேசுவின் வார்த்தையினால் உயிர் பெற்றான்.

இயேசு கிறிஸ்து மக்களுக்கு தேவையான வார்த்தைகளை எளிமையான முறையில் போதித்தார். ஏழைகளும், எளியவர்களும் , ஞானிகளும் புரிந்து கொள்ளும்படிச் செய்தார்.

இயேசுவின் வார்த்தை, மக்களுக்கு நம்பிக்கை, புது வாழ்வு, நித்திய ஜீவனைக் கொடுத்தது.

ஆண்டவர் நமக்கு கொடுத்த சிறிய நாவுக்காக நன்றிச் செலுத்துவோம். அதைச் நாம் சரியாகப் பயன்படுத்த எனக்கு உதவி செய்யும் என மன்றாடுவோம்.

தேவன் தாமே நம் வாயின் வார்த்தைகளும், நம் இருதயத்தின்
தியானமும் அவருடைய சமுகத்தில் பிரீதியாயிருக்க கிருபை செய்வாராக.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *