Daily Manna 194

ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன். ஏசாயா: 6:8

ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
ஏசாயா: 6:8
==========================
எனக்கு அன்பானவர்களே!

பரிசுத்த தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

அமெரிக்காவில் ஒரு கைப்பிரதி ஊழியர் உள்நாட்டு ஆறுகளில் ஓடும் சிறிய கப்பலில் கைப்பிரதிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். உயர்தர ஆடைகள் அணிந்த ஒரு செல்வந்தன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஊழியர் அந்த செல்வந்தருக்கும் ஒரு கைப்பிரதியைக் கொடுத்தார். கோபமடைந்த செல்வந்தர் ஊழியரைப் பார்த்து, “நானும் கிறிஸ்தவன் தான். இதை ஏன் எனக்கு கொடுத்துக் கொண்டிருகின்றீர். இதினால் எவ்வித பயனும் இல்லை” என்றார்.

அதற்கு ஊழியர், “நீங்கள் ஒரு போதும் அப்படி சொல்லாதீர்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு பாவ வாழ்வில் மூழ்கிக் கிடந்த நான், நியூயார்க் பட்டணத்தின் வீதி ஒன்றில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். அந்த தெருவில் இருக்கின்ற ஆலயத்திற்கு முன்பாக வந்த போது, ஒரு வாலிபன் அந்த ஆலய வாசற்ப்படியில் நின்று கொண்டு வருவோர் போவோரிடம் கைப்பிரதிகளைக் கொடுத்து, நடந்து கொண்டிருக்கும் ஆராதனையில் பங்கு பெறும் படி ஒவ்வொருவரையும் வருந்தி அழைத்துக் கொண்டிருந்தான்.

அவ்வாலிபன் பேசிய அன்பாலும் பரிவாலும் ஈர்க்கப்பட்ட நானும் அவனிடம் கைப்பிரதியை வாங்கிக் கொண்டு ஆலயத்திற்குள் சென்றேன். அங்கே போதகர் யாவரும் இரட்சிக்கப்பட வேண்டியதின் அவசியத்தையும், இயேசு தன்னிடம் வருவோரை ஒருநாளும் புறம்பே தள்ளுவதில்லை என்று பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.

நான் பாவி என்ற உணர்வு எனக்குள் அதிகமாக ஏற்படவே அந்த ஆலயத்தில் இருந்து வீட்டிற்கு சென்று விட்டேன். ஆயினும் நான் பாவி என்ற உணர்வு என்னை அதிகம் வாட்டியது. அப்பொழுது அந்த வாலிபன் கொடுத்த கைப்பிரதியை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்”
(I யோவான் 1:9)
என்ற அந்த கைப் பிரதியிலிருந்த வசனங்கள் என் உள்ளதை வெகுவாய் அசைத்தன.

உடனே நான் எனது பாவங்களை அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவால் கிடைக்கப் பெறும் பாவ மன்னிப்பை பெற்றுக் கொண்டேன். நான் பெற்ற இந்த இரட்சிப்பின் அனுபவத்தை மற்றவரும் பெற்றனுபவிக்க கடந்த இருபது ஆண்டுகளாக இந்த கைப்பிரதி ஊழியத்தை செய்து வருகின்றேன் என்று ஊழியர் அந்த செல்வந்தரிடம் கூறினார்.

அதைக் கேட்ட அந்த செல்வந்தர் கண்களில் கண்ணீர் ததும்ப, “கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன், உனக்கு கைப்பிரதியை கொடுத்த அந்த வாலிபன் நான் தான். இவ்விதமாய் கைப்பிரதிகளைக் கொடுத்து பெரிய மாற்றத்தை காணாததினால் அந்த ஊழியத்தை கைவிட்டு இருபது ஆண்டுகள் வீணாய்க் கழித்து விட்டேன்.

ஆனால் உன்னைப் போல எத்தனை பேர்கள் அந்த கைப்பிரதியினால் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை உன்னைப் பார்த்து நான் அறிந்து கொண்டேன். நான் நியூயார்க் பட்டணம் சென்ற பிறகு மீண்டும் இந்த கைப்பிரதி ஊழியத்தை தொடர்வேன்” என்று உற்சாகமாய் ஆயத்தமானார்.

வேதத்தில் பார்ப்போம்,

பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
ஏசாயா 6 :8.

அதற்கு அவர்: நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் னபுறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.
அப்போஸ்தலர் 22:21

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
யோவான் :16:7.

பிரியமானவர்களே,

தேசத்தின் எதிர்காலம் ஜெபிக்கிற தேவனுடைய பிள்ளைகளின் கையில் தான்.
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன் என்று தேவன்
2 நாளாகமம்:7:14 ல் சொல்லியிருக்கிறார்.

மேலும் அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு ஒரு பிரதானமான ஆலோசனையை தருகிறார்.
நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ண வேண்டும்;

நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும் படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது (1தீமோ.2:1- 3).

நாம் விதைகளை விதைக்கும் பொழுது எந்த விதை விளையும், எது விளையாது என்று நமக்கு தெரியாது. ஆனால் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனே அதை விளையச் செய்வார். ஆதலால் நாம் கூடுமானமட்டும் தேவனுடைய ஊழியம் செய்ய முன் வருவோம். தேசத்திற்காகவும், அதிகாரிகளுக்காகவும், எல்லா மனுஷருக்காகவும் தேவனிடத்தில் மன்றாடுவோம்.

யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்? என்று கேட்பார். நாம் என்ன செய்ய வேண்டும்? இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்று சொல்வோமாகில் இந்திய தேசம் இரட்சகரைக் காணும் நாள் தூரத்திலில்லை.

போகிறேன் என்று கூறி தேவ நோக்கத்தை இழந்து அலைந்து திரிந்த யோனாவைப் போலல்ல. பார்வை இழந்த ஜனத்திற்கு பாதை காட்டுகிறவர்களாக நாம் மாறுவோம்.

ஆகவே ஆண்டவரின் மன வேதனையை அறிந்து அதைப் புரிந்தவர்களாக நாம் ஜெபிப்போம். ஜெபிப்பதற்கு நமக்கு பல காரியங்கள் இருந்தாலும் குயவன் கையில் கழிமண்ணைப் போல என்னை ஒவ்வொரு நாளும் உம்முடைய ஊழியத்திற்கு என்னை பயன்படுத்தும் என கேட்போம்.

நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின தேவனின் எண்ணத்தை புரிந்தவர்களாய் கர்த்தருக்கென்று ஊழியம் செய்து இலக்கை நோக்கி பயணிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே இந்த பரிசுத்த நாளில் நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *