கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்;
ஏசாயா 11:3.
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தருக்கு பயப்படும் பயத்தை நமக்கு போதிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
பென்னிகின் என்கிற ஒரு தேவ மனிதர்
ஒரு முறை அவர் தன்னுடைய கன்வென்ஷன் கூட்டத்திற்கு செல்வதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தாராம்.
இப்படியாக அவர் ஆயத்தமாகி கொண்டிருந்த வேளையில் திடீரென அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அனேக நாட்களுக்குப் பின்பு அவரைத் தேடி வந்துவிட்டார்.
அவரைப் பார்த்த சந்தோஷத்தில் பென்னிகின் அவரோடு சமயத்தை செலவிட விரும்பினார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இடைப்பட்டு, கன்வென்ஷன் கூட்டத்திற்காக ஜெபிக்கும்படி ஏவினார்.
பென்னிகின் ஆண்டவரைப் பார்த்து சொன்னார், அனேக நாட்களுக்குப் பிறகு என்னுடைய நண்பர் என்னைத் தேடி வந்திருக்கிறார், ஆகவே சிறிது நேரம் அவருடன் இருக்க விரும்புகிறேன் என்று சொன்னாராம்.
உடனே பரிசுத்த ஆவியானவரும் அதைக் குறித்து ஒன்றுமே சொல்லவில்லை.
அடுத்த நாள் கன்வென்ஷன் கூட்டத்திற்கு சென்ற பென்னிகின் ஐயாவுக்கு அதிர்ச்சி காத்திருந்ததாம். எப்படியென்றால் அந்த கூட்டத்தில் எந்தவொரு அற்புதமும் நடக்கவில்லை.
அதாவது தேவ மகிமை அந்த கூட்டத்தில் வெளிப்படவில்லை என்பதை இவர் நன்றாக அறிந்து கொண்டாராம்.
எனக்குப் பிரியமான ஜனங்களே,இந்த தேவ மகிமையை இவர் இழப்பதற்குக் காரணம் கீழ்ப்படியாமையே ஆகும் என்பதை உணர்ந்து கொண்டார்.
இன்று அனேகர் சபைகளில் தேவ மகிமையை பார்க்க முடியாமல் போவதற்குக் காரணம் இதே போன்று தேவனுக்குப் பிரியமில்லாத அனேக காரியங்கள் நம்மிடத்தில் காணப்படுவதே ஆகும் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆகவே தான் கர்த்தர் தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு ஜனங்கள் எந்த காரியத்தையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்பதை ஊழியர்களுக்கு வெளிப்படுத்துகிறார்.
ஊழியர்கள் கர்த்தருடைய சத்தத்திற்கு உண்மையாய்ச் கீழ்ப்படியும் போது தான் ஆலயத்தில் கர்த்தரின் மகிமையை காண முடியும்.
வேதத்தில் பார்ப்போம்,
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
நீதி 19 :23.
கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்;
நீதி 15 :33.
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப் பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.
நீதி 10 :27.
பிரியமானவர்களே,
நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரில் உறுதியாக நிற்கவில்லை என்றால், நம் வாழ்க்கையில் நாம் நிலை தவறினவர்களாகவும், தடுமாறித் திரிகிறவர்களாகவும் காணப்படுவோம்.
மூன்று காரியங்களை நாம் இந்த நாளில் பார்க்கலாம். முதலாவது, பூரண இரட்சிப்பு. நம் வாழ்க்கையில் நாம் இரட்சிக்கப்படவில்லை என்றால், நம் வாழ்க்கை அதிபயங்கரத்தில் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.
இரட்சிக்கப்படும் பொழுது நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் தேவன் பொறுப்பெடுத்து செயல்படுகிறவராக இருக்கிறார். இரட்சிக்கப்பட்ட மனிதனின் வாழ்க்கையானது கர்த்தருக்குள் பாதுகாப்பானதாகும்.
இரட்சிக்கப்படாத மனிதனின் வாழ்க்கையானது பாதுகாப்பற்ற, நம்பிக்கையற்ற, ஏமாற்றம் நிறைந்த ஒன்றாகும்.
இரண்டவாதாக, தேவன் கொடுக்கிற ஞானம். தேவ ஞானம் என்பது தேவன் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிற ஆவிக்குரிய காரியங்கள் ஆகும். அது உன்னதமான சில்லாக்கியங்கள் கொண்டவை.
தேவனுடைய காரியங்களை ஒரு மனிதன் தாமாக அறிந்துக் கொள்ள முடியாது. அதற்கு தேவனுடைய ஞானம் அவசியம்.
மூன்றாவதாக, அறிவு. இது தேவனைக் குறித்து நாம் அறிந்திருக்கிற காரியமாகும். தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழுவதாகும். இந்த மூன்று காரியங்களும் எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும்.
இந்த மூன்று காரியங்களும் இல்லாதவர்களின் வாழ்க்கை நிலையற்றதே.
அது மாத்திரமல்ல, நம் வாழ்க்கையில் பெற்றிருக்கிற அல்லது பெற வேண்டிய பொக்கிஷம் என்னவென்றால் கர்த்தருக்குப் பயப்படும் பயம்.
தேவனுக்குப் பயந்து வாழுகிற வாழ்க்கை. ஆகவே தான் வேதம்: “கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக் கண்ணிகளுக்குத் தப்பலாம்”(நீதி 14:27) என்று சொல்லுகிறது.
கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது நாம் அடிமைத்தனத்தில் வாழுவதல்ல. மாறாக நாம் நீதியின் பாதையில் செல்லுவதற்கு கர்த்தருக்குப் பயப்படும் பயம் அவசியம்.
நாம் கர்த்தருக்குப் பயப்படும் பொழுது மாத்திரமே மேலே கூறிய மூன்று காரியங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆகவே கர்த்தருக்குப் பயப்படும் பயம் நம்மில் காணப்படுகிறதா? என்று சிந்திப்போம்.
கர்த்தருக்கு பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது” நீதி 19:23) என்று வேதம் கூறுகிறது.
உண்மையிலேயே கர்த்தருக்கு பயப்படும் பயம் நமக்குள் இருக்க வேண்டிய ஒன்று. இது இயேசுவுக்கு நேராக நம்மை வழிநடத்துகிறது. இது நமக்கு ஜீவனை கொடுக்கும்.
இப்படிப்பட்ட நித்திய ஜீவனை கர்த்தருக்கு பயப்படுதல் மூலமாக பெற்றுக் கொண்டு வளமாக வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.