Daily Manna 201

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே 1 பேதுரு 1:19

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே
1 பேதுரு 1:19.
=========================
எனக்கு அன்பானவர்களே!

நம்மை மீட்டெடுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

இங்கிலாந்து தேசத்திலிருந்து அனேக
பிரிட்டீஷ்காரர்கள் செல்வந்தர்களாகும் படி அமெரிக்காவிற்கு சென்றார்கள். இதில் ஒரு ஏழை மனுஷனும் இருந்தான். அவன் அமெரிக்காவிற்கு சென்று பெரிய பணக்காரனாக விரும்பினான்.

அவன் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து அந்த பணத்தைக் கொண்டு அமெரிக்கா செல்கிற ஒரு கப்பலில் டிக்கெட் வாங்கினான். அதில் பிரயாணம் பண்ண ஆரம்பித்தான்.

கையில் உள்ள பணத்தை எல்லாம் கொட்டி டிக்கெட் வாங்கி விட்டபடியினால் வேறு செலவிற்கு அவனுக்கு பணமில்லை. எனவே அவன் பட்டினி கிடந்தாவது அமெரிக்கா சென்று விடத் தீர்மானித்தான். ஒவ்வொரு நாளும் சாப்பாட்டு நேரம் வரும் போது, பசியாக தன்னுடைய அறைக்குள் முடங்கி கிடந்தான்.

14 நாட்கள் தொடர்ந்து பட்டினி அவனை தொய்ந்து போக பண்ணியது. அன்று கடலில் புயல் வீசியது. கப்பல் அமிழுமோ என்ற ஒரு பயம் நேரிட்டது. அவன் யோசித்தான் கடலில் அமிழ்ந்து போவதுக்கு முன் சாப்பாட்டு அறைக்குள் பிரவேசித்து நன்றாகச் சாப்பிட்டு விட்டு மரிக்கிறது நல்லது என்று எண்ணினான்.

ஆகவே கப்பலில் உள்ள ஹோட்டலில் துணிந்து புகுந்து நான் சாப்பிடுவேன் என்று சொல்லி போனான். அங்கே உள்ள சாப்பாடு கேட்டு வாங்கினான். அவர்கள் அவனுக்கு கொடுத்தார்கள். அவன் மிகவும் பசியாக இருந்தபடியினால் மிக அதிகமாக அவன் சாப்பிட்டான்.

கடைசியில் அவனுக்கு உணவு வழங்கிய வேலைக்காரனை பார்த்து நான் எவ்வளவுக்குச் சாப்பிட்டிருக்கிறேன்? பில் கொடு என்று கேட்டான். அதற்கு அந்த வேலையாள், “ஐயா நீங்கள் கப்பலில் டிக்கெட் வாங்கிய போது உணவிற்குரிய தொகையையும் அதிலே கட்டி விட்டீர்கள்.

ஆகவே நீங்கள் சாப்பிடுவதற்கு தனியாக பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
கப்பல் அமெரிக்கா போய் சேரும் வரைக்கும் ஒவ்வொரு நாளும் மூன்று வேளைக்கும் தேவையான பணம் அதிலே செலுத்தப்பட்டிருக்கிறது” என்று கூறி விளக்கினான்.

அப்போது தான் அந்த வாலிபன், ஐயோ, இது தெரியாமல் இத்தனை நாளும் பட்டினியாய் கிடந்து விட்டேனே; என்னுடைய உணவுக்குரிய பணம் ஏற்கனவே செலுத்தப்பட்டிருந்தும் நான் அதை அறியாமல் போனேனே” என்று கவலைப்பட்டான். இன்று நம்மில் அநேகர் அந்த வாலிபரைப் போல தான் இருக்கிறோம்.

வேதத்தில் பார்ப்போம்,

கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
1 கொரிந்தியர் 6 :20.

நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.
1 கொரி 7 :23.

அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக் களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
ஏசாயா :51:11.

பிரியமானவர்களே,

இயேசு கிறிஸ்துவுடைய இரத்தத்தினாலே நாம் பரலோகத்திற்கு செல்வதற்கான ஒரு பயணச் சீட்டை வாங்கி இருக்கிறோம்.
அநேகர் அதிலே ஆவிக்குரிய உணவு மாத்திரமே அடங்கியிருக்கிறது என்று எண்ணுகிறார்கள்.

ஆனால் அந்த பயணச் சீட்டில் தேவனுடைய எல்லா பரிபூரணங்களும் உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்களும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் இணைந்திருக்கின்றன.
ஆனால் விசுவாசிகள் தங்களாகவே புத்தியீனமாக தங்களுக்கு இருக்கிற தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களை எண்ணாமல் போகிறார்கள்.

பிசாசின் அடிமைத்தனத்தில் நீங்கள் இருந்த பொழுது, இயேசு கிறிஸ்து உங்களை விடுவித்தார். அவர் தனது சொந்த விலைமதிப்பற்ற இரத்தத்தை சிந்தி உங்களை மீட்டிருக்கிறார். “கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்”
1 கொரிந்தியர் 6:20

ஆம், தமது மக்களை பாவத்திலிருந்தும், குற்ற உணர்ச்சியிலிருந்தும் தண்டனையிலிருந்தும் மீட்பதற்காக தேவன் தமது ஒரே பேறான குமாரனுடைய விலையேறப் பெற்ற இரத்தத்தையே கிரயமாகக் கொடுத்து உங்களை வாங்கியுள்ளார்.

அதுமட்டுமல்ல, உங்களை வியாதியினின்றும், சாபத்திலிருந்தும், பாவத்தின் பிடியிலிருந்தும் விடுதலை செய்திருக்கிறார். “நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்”
1 கொரிந்தியர் 7:23. என்று வேதம் கூறுகிறது.

நாம் கிரயமாக கொள்ளப்பட்டதால், உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் யாவும் தேவனுக்கு சொந்தமானது. அளவற்ற சந்தோஷடத்துடனும் சமாதானத்துடனும் வாழும்படி நீங்கள் விடுதலையாக்கப்பட்டுள்ளீர்கள்.

பரிசுத்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து தேவ நாமத்தை கனப்படுத்துங்கள்.
இதுவே தேவன் நமக்கு தரும் அழைப்பு என உணர்ந்து கர்த்தருக்கு பிரியமானவர்களாய் வாழுவோம்.

கர்த்தர் தாமே இத்தகைய ஆசீர்வாதங்களை இந்த ஓய்வு நாளில் தந்து நம்மை நல்வழியில் நடத்தி காப்பாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *