Daily Manna 202

குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். நீதிமொழிகள்: 21:31

குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
நீதிமொழிகள்: 21:31.
~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!

வெற்றியுள்ள வாழ்வை அருளிச் செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

உலகெங்கும் குதிரைகள் பல நூற்றாண்டுகளாக மனிதக் கலாசாரத்துடன் ஒட்டி பங்கேற்றுள்ளன. பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது.

இந்த குதிரையானது விழிப்புடன் எப்பொழுதும் இருக்கும். சிறிது நேரம் தூங்கினாலும் நின்று கொண்டு தான் தூங்கும். குதிரைகளால் பகலிலும் இரவிலும் நன்கு பார்க்க முடியும்.

தரையில் வாழும் பாலூட்டிகளில் யாவற்றிலும் குதிரையின் கண்களே பெரியது. இவற்றால் இரு கண்களால் 65 பாகை வரையும், ஒற்றைக் கண் பார்வையில் 350 பாகைக்கு மேலும் பார்க்கவியலும்.

அதைப் போன்று குதிரைகளின் கேட்கும் திறனும் அதிகம். இவற்றால் தமது காது மடல்களை 180 பாகை வரை திருப்ப முடியும். எனவே தலையைத் திருப்பாமலேயே எந்தப் பக்கம் இருந்து சத்தம் கேட்டாலும் உணர முடியும்.

இவற்றின் தொடுதிறனும் நுட்பமானது. கண், காது, மூக்குப் பகுதிகள் உணர்ச்சி மிகுந்தவை. குதிரையின் தொடுதிறனானது தன் உடம்பில் ஒரு சிறு பூச்சி அமர்ந்தால் கூட அறியுமளவுக்கு நுட்பமானது.

அது மட்டுமல்லாமல் தனக்கு முன் நிற்கும் எதிரியைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் தன் மேல் ஏறியிருப்பவரின் மேல் முழு நம்பிக்கையையும் வைத்து துணிவுடன் போரில் முன் செல்லும் குணம் படைத்தது.

குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும் என்று
நீதிமொழிகள்: 21:31-ல் வேதம் கூறுகிறது.

ஆனால் ஒரு குதிரையைப் போல இன்று பலர் யுத்தத்திற்கு ஆயத்தமாகலாம்.
ஆனால் ஜெயமோ கர்த்தரிடத்திலிருந்து மாத்திரமே வரும் என்று அநேகர் இந்த உண்மையை அறிந்துக் கொள்வதில்லை.

வேதத்தில் பார்ப்போம்,

அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்.
சங்கீதம்: 147 :10.

தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
1 யோவான்: 5 :4.

குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
நீதிமொழிகள்:21 :31.

பிரியமானவர்களே,

வசனம் சொல்லுகிறது கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்
சங்கீதம்:75:6,7 என்பதாக பார்க்கிறோம்.

நீங்களும்
உங்களுடைய உயர்வுக்காக மனிதர்களை நம்பி இருக்கிறீர்களா?. அல்லது ஏதோ ஒரு காரியத்தில் ஜெயம் வேண்டும், ஆனால் எனக்கு ஜெயம் கிடைக்கவில்லையே என்று மனம் சோர்ந்து போயிருக்கிறீர்களா? கவலைப்படாதிருங்கள் உங்களுக்கு ஜெயம் கர்த்தரிடத்திலிருந்து நிச்சயம் வரும்.

தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காரணம் விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள் என்றும் வசனம் சொல்லுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நாம் ஜெயிக்க பிறந்தவர்கள். குடும்ப காரியங்களிலும், வேலை காரியங்களிலும், தொழில் காரியங்களிலும் மற்ற எல்லா காரியத்திலும் எதுவாக இருந்தாலும் நமக்கு ஜெயத்தை நமது அருமை ஆண்டவர் தருவார்.

நாம் தோற்றுப் போவதற்கு பிறந்தவர்கள் அல்ல, நாம் ஒவ்வொருவரும் ஜெயிக்க பிறந்தவர்கள்.

தோல்வி வந்து விட்டது என்று கலங்காதீர்கள். மற்றவர் பார்வைக்கு அது தோல்வி . ஆனால் அது நீங்கள் ஜெயத்தை பெற்றுக் கொள்ள உங்களுக்காக தேவனானவர் திறந்த வாசல்.

தானியேலின் காரியம் எல்லாம் ஜெயமாக இருந்தது என்று வேதத்தில் பார்க்கிறோம். காரணம் தானியேல் எல்லா காரியத்திலும் கர்த்தரை நம்பி இருந்தான். மூன்று வேளையும் தவறாமல் ஜெபித்தான். அவன் கர்த்தரை தேடுவதற்கு தடைகள் வந்த போதும், வழக்கம் போல அவன் ஜெபித்து வந்தான்.

மற்ற எல்லாரைக் காட்டிலும் முகப் பொலிவுடன் காணப்பட்டான். எல்லாரைக் காட்டிலும் அவனுக்கு கர்த்தர் தேவ ஞானத்தை கொடுத்திருந்தார். ஆகையால் அவனுடைய வேலை காரியங்கள் எல்லாம் ஜெயமாக இருந்தது.

அவன் ஐந்து இராஜாக்களின் காலத்தில் பணியில் இருந்த போதிலும் ஒருவனாலும் அவனை விழத்தள்ள முடியவில்லை. காரணம் கர்த்தர் தானியேலோடு இருந்தார். தானியேலின் காரியம் ஜெயமாக இருந்தது போல உங்கள் காரியங்களிலும் கர்த்தர் ஜெயத்தை கொடுப்பார்.

தானியேலின் தேவன் உங்கள் தேவன். நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்திருந்த ஜெயம் உங்களுக்கு கர்த்தரிடத்திலிருந்து வரும்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று விசுவாச அறிக்கையிட்டு வெற்றியை சுதந்தரிப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நம்முடைய முயற்சிகளை வாய்க்க செய்து, வெற்றியை சுதந்தரித்துக் கொள்ள நம்மை தகுதிபடுத்துவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *