Daily Manna 203

ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள். மத்தேயு :7 :2

ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்.
மத்தேயு :7 :2.
~~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

முன்னொரு காலத்தில் பொன்னுரங்கம் என்ற ஒரு ஏழை இருந்தான். அவன் பார்ப்பதற்கு மிகவும் அவலட்சணமாக இருப்பான்.யாருமே விரும்பாதபடிக்கு அவனது முகத் தோற்றம் இருந்தது.

அவன் மாடு மேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தான்.அருகில் இருந்த காட்டிற்கு மாடுகளை ஓட்டிச் செல்வான். அங்கே மேய விடுவான். மரத்தின் நிழலில் அமர்ந்து புல்லாங்குழலை இசைப்பான்.

வழக்கம் போல, அவன் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டிருந்தான். அந்த இசையில் மயங்கிய தேவதை ஒருத்தி அவன் முன் தோன்றினாள்.

“”ஆ! இப்படி ஒரு இனிய இசையை நான் கேட்டது இல்லை. நீ என்னை மணந்து கொள். உன் ஆசை எதுவானாலும் உடனே நிறைவேற்றி வைக்கிறேன்,” என்றாள் அந்த தேவதை.

இப்படி ஒரு நல்வாழ்க்கை கிடைத்ததை அவனால் நம்ப முடியவில்லை.
“”தேவதையே! உன் விருப்பம் போல நடப்பேன்,” என்றான் அவன்.

அடுத்த நொடியே அவன் பேரழகனாக ஆனான். அரசனைப் போல ஆடை, அணிகலன்கள் அணிந்து இருந்தான். தன் தோற்றத்தைப் பார்த்து மிகவும் பெருமிதம் கொண்டான்.

“என்னை அவலட்சணம் என்று இகழ்ந்தவர்கள் முன் செல்ல வேண்டும். நான் யார் என்பதை அவர்களுக்கு காட்ட வேண்டும்’ என்று நினைத்தான்.

“”தேவதையே! நம் திருமணத்திற்கு முன் நகரத்திற்குச் சென்று வர ஆசைப்படுகிறேன்,” என்றான் பொன்னுரங்கம்.
அவன் முன் அழகிய குதிரைகள் பூட்டப்பட்ட பொன் தேர் ஒன்று நின்றது.

“”உனக்காக காத்திருப்பேன். விரைவில் திரும்பி வா,” என்றது தேவதை.

அரசனைப் போல அந்தப் பொன் தேரில் அமர்ந்தான் அவன். பெருமிதமாக நகரத்திற்குள் சென்றான்.அங்கே இருந்தவர்கள் அவனைப் பார்த்து வியப்பு அடைந்தனர்.

அரண்மனை மாடத்தில் நின்ற இளவரசி தேரில் வரும் அவனைப் பார்த்தாள். அவன் அழகில் மயங்கினாள்.
வாயிலுக்கு வந்த அவள், அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றாள்.

இளவரசி தன்னை மணக்க விரும்புகிறாள் என்பதை அறிந்தான் அவன்.”தேவதையை மணப்பதை விட இளவரசியை மணப்பதே சிறந்தது’ என்று நினைத்தான்.

அரசியை வணங்கிய அவன், “இந்த அடிமையைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் உங்களுக்குத் துணையாக இருப்பேன்,” என்றான்.

அங்கே என்ன நடந்தது என்பதை அறிந்தது தேவதை.

உடனே அவனது அரச வடிவம் மறைந்தது. முன்பு இருந்தது போல மிகவும் அவலட்சணமாக காட்சி அளித்தான் பொன்னுரங்கம்.

எரிச்சல் அடைந்த அரசி,”இந்த அவலட்சணத்தை யார் அரண்மனைக்குள் விட்டது? அடித்து விரட்டுங்கள்,” என்று வீரர்களுக்குக் கட்டளை இட்டாள்.

ஏமாற்றத்துடன் காட்டிற்கு வந்தான். நீண்ட நேரம் புல்லாங்குழலை இசைத்தான். தேவதை அவன் முன் தோன்றவே இல்லை.

“”நன்றி கெட்ட எனக்கு நல்ல தண்டனை கிடைத்தது,” என்று கதறி அழுதான் பொன்னுரங்கம்.

அன்பானவர்களே,
பிறர் நமக்கு செய்த உதவிக்கு நாம் என்றும் நன்றி உள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதே இக்கதை நம்மை
வலியுறுத்துகிறது.

வேதத்தில் பார்ப்போம்,

ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
மத்தேயு :7:2

பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள், எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.
மாற்கு :4 :24.

என்னை மறந்து, பொய்யை நம்பினபடியினாலே, இது உன்னுடைய வீதமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா :13 :25.

பிரியமானவர்களே,

நன்றி சொல்லும் நெஞ்சம் நமக்கு இருந்தால்
நான்கு திசையிலும் உறவுகள் விரியும்
முயற்சி என்னும் அற்புதச் சிறகுகளிருந்தால்
ஆகாயத்திற்கு அப்பாலும் அதிசயம்
நிகழ்த்தலாம்!

நாம் வாழும் வாழ்விற்கு ஆதாரமாக, பக்கபலமாக, உதவிக்கரமாக பலர் இருக்கின்றார்கள். மற்றவர்களின் உதவியும், ஒத்துழைப்பும் இன்றி நம்மால் இவ்வுலகில் வாழவே முடியாது.

அவ்வாறு நமக்கு உதவிக்கரமாக இருக்கும் அனைவருக்கும் நமது நன்றி உணர்வை வாழ்நாள் முழுவதும் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

பெருந்தகையும் நன்றி மறப்பது நன்றன்று என்றார். நன்றியுணர்வோடு செயல்படும் போது நமது மனம் பக்குவப்பட்ட நிலையில் பணிவோடும் தெளிவோடும் இருக்கின்றது.

தான் என்ற அகந்தை நீங்கிய நிலையில் எண்ணங்கள் தெளிந்த நீருற்றாகவே ஊற்றெடுக்கத் தொடங்குகிறது. இது சாத்தியமா? முயற்சித்துப் பாருங்கள்.

இதுநாள் வரை உங்களுக்கு உதவியவர்களை நெஞ்சில் நினைத்து நன்றி செலுத்திப் பாருங்கள். உங்களுக்குள் ஒரு பணிவுணர்வும் மென்மையும் தோன்றும்.
மற்றவர்களின் மீது அன்பு செலுத்துகின்ற பண்பும், மற்றவர்களை மதித்து நடக்கின்ற தன்மையும் ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பது உறுதி.

இதைத் தான் ஒரு கவிஞர் பதவி வருகின்ற போது பணிவு வர வேண்டும் என்றார். வெற்றி பெறுவதற்கு பணிவும் துணிவும் வேண்டும்.

தோல்வி வருகின்ற போது தொடர்ந்து முயற்சிக்கும் துணிவு தான் ஒருவரை வெற்றியின் சிகரத்திற்கு அழைத்துச் செல்கிறது.
ஒருவன் தனது வாழ்க்கையில் இரண்டு நபர்களை எப்பொழுதும் மறக்கமாட்டான். அதாவது தனக்குத் துன்பம் நேரும் போது கை கொடுத்து உதவியவனையும்,
துன்பம் சூழும்போது காலை வாரியவனையும் மறக்க முடியாது.

இப்பொழுது எல்லோரும் நன்றி உணர்வு இல்லாமல் இருக்கின்றனர் என்பது பலரது கருத்து. மற்றவர்கள் நன்றியுணர்வு இல்லாமல் இருக்கின்றார்கள் என்பதற்காக நாம் ஏன் அவர்களைப் பின்பற்றி நன்றி உணர்வற்றவனாக வேண்டும்?

மற்றவர்கள் நம்மைப் பின்பற்றும் விதத்தில் நன்றியுணர்வோடு நடந்து முன் உதாரணமாகத் திகழ முயற்சிப்போம்.

அதுமட்டுமல்ல நம்மை இந்த நாள் வரை காத்து வழிநடத்தி ஒரு குறைவும் இல்லாதபடி நம்மை வழிநடத்துகிற இறைவனுக்கும் நாம் நன்றிபலிகளை செலுத்துவதும் அவசியம்.

ஆகவே நாமும் நமது வாழ்வில் தேவன் தருகிற நன்மைகளை நினைத்து நன்றிபலிகளை ஏறெடுத்து வளமுடன் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *