நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; ஆதியாகமம்: 4 :7
நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்;
ஆதியாகமம்: 4 :7.
~~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு முறை ஒரு ஆசிரியரின் பக்கத்து வீட்டில் உள்ள நபர் குடிக்கு அடிமையாகி இருந்தார். அவருக்கு குடிக்க கொஞ்சம் கொடுத்து விட்டு, அவர் வீட்டுக்கு தெரியாமல் வஞ்சகமாக கையெழுத்தை வாங்கி அவரது சொத்தை அபகரித்து கொண்டார்.
அந்த குடும்பத்தார் அந்த வீட்டை விட்டு துரத்தப்பட்டனர். அவர்கள் அழுது கொண்டே அந்த வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
பக்கத்து ஊரில் ஒரு சிறிய வீட்டில் பல வேதனைகளுக்கு மத்தியில் குடியிருந்தார்கள்.
பல வருடங்களாக நன்றாக இருந்த அந்த ஆசிரியரின் வீட்டில் சாபம் புகுந்து விளையாட ஆரம்பித்தது. அந்த ஆசிரியர் நடந்து சென்ற போது கீழே விழுந்து மரித்து போனார்.
இவரது மகனின் மனைவி, ஒரு விபத்தில் மரணமடைந்தாள். அது மட்டுமல்லாமல் இவரது மகள்களின் குடும்பத்திலும் பயங்கர சாபங்கள் கடந்து வந்தது.
இவரது மனைவியின் கர்பப்பையில் புற்று நோய் வந்து மரித்தாள். இவரது மற்றொரு மகன் திடீரென்று புத்தி சுவாதீனமாகி யாரும் கவனிக்க முடியாதபடி பரிதாபமான நிலையில் அள்ளாடிக் கொண்டிருக்கிறார்.
தவறான வழியில் வந்த எந்த பொருளும் நல்வாழ்வை கொண்டு வராது. அது சாபத்தை தான் கொண்டு வரும்.
பிரியமானவர்களே,
இன்றைக்கு அனேகருடைய வாழ்க்கையிலும் அவர்களுடைய சந்ததிகளுடைய வாழ்க்கையிலும் சாபங்களும், குறைவுகளும் வருவதற்கு காரணம் இது தான்.
அவர்கள் செய்த அநியாயத்தின் பலன் அவர்களை பின் தொடர்ந்து வருவதாகும். தேவன் பிதாக்களுடைய பாவத்தை பிள்ளைகளின் மடியில் சரிகட்டுகிறார்.
ஒருவர் அநியாயமாக சம்பாதித்த பணம் அவருடைய பிள்ளைகளின் தேவையை சந்திக்கிறது போல அந்த பணத்தின் பின்புறம் மறைந்திருக்கிற சாபங்கள் பிற்காலத்தில் அவர்களை சாபத்திற்குள்ளாக்குகிறது.
ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்கு தீமை செய்யாதபடி பாருங்கள். உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள். என்று பவுல்
1 தெசலோ:5:15- ல் எழுதுகிறார்.
நீங்கள் மற்றவர்கள் உங்களுக்கு செய்யும் தீமைக்கு பதிலாக நன்மை செய்தால் நன்மையை சுதந்தரிப்பீர்கள். இதையே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறுகின்றார்.
வேதத்தில் பார்ப்போம்,
பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற் செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங் கொடுங்கள்.
ரோமர்:12:19
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்;
மத்தேயு :5:44
தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
1 பேதுரு :3:9
பிரியமானவர்களே,
நீங்கள் எதற்காக பாவங்களினால் கட்டப்பட வேண்டும்? பாவம் செய்கிறவனெவனும் பாவத்திற்கு அடிமையாயிருக்கிறான்.
யோவான் :8:34..
நம்மையும் அறியாமலே நாம் பாவம் செய்யத் தூண்டுகிற பிசாசு நமக்குள் நுழைவான்.
ஆம், பாவம் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் நமக்குள் நுழைகிறது. பாவம் காயீனின் வாழ்க்கையை எவ்வாறு பாழாக்கியது என்பதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். காயீன் பாவம் செய்வதற்கு முன்பு, தேவன் அவனை எச்சரித்தார்.
“நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; என்றார்” (ஆதி4:7). காயீன் கேட்டானா? இல்லை. அவன் கேட்டிருந்தால் அவருக்கு தண்டனை கிடைத்திருக்காது.
ஆனால், அவன் கேட்கவில்லை. தேவனுடைய சத்தத்திற்கு அவன் தன் செவியை அடைத்துக் கொண்டார். தனது சகோதரன் ஆபேலைக் கொலை செய்தான்.
நாம் தேவனுடைய வார்த்தையைக் கேட்காத போது பாவம் நம்மை பாதிக்கிறது. பாவத்திலிருந்து விடுபட ஒரே தீர்வு தேவனுடைய வார்த்தை மட்டுமே.
வேதம் கூறுகின்றது நன்மை செய்யும் படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே [நீதிமொழிகள்:3:27]. கிறிஸ்தவர்களாகிய நாம் நம்மிலுள்ள தீமைகளை அகற்றி விட்டு நன்மை செய்ய வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் எவ்விடத்திலும் கிறிஸ்துவை பிரதிபலிக்கும் வண்ணம் எல்லாருக்கும் நன்மைகளை செய்வோம்.
நாம் பிறருக்கு நன்மைகள் செய்தாலும் பல நேரங்களில் அவர்கள் நமக்கு தீமை செய்ய கூடும். இப்படிப்பட்ட பாடுகள் அடையும் போது பொறுமையோடு சகிக்க வேண்டும்.
அது தேவனுடைய சமூகத்தில் பிரீதியாயிருக்கிறது. நாம் ஏதோ ஒரு உதவியை செய்வது மட்டும் நன்மையல்ல.
ஒரு சகோதரன் இடகிறதற்காவது தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாய் ஒன்றும் செய்யாமலிருப்பதும் நன்மையே.
சாலொமோன் ராஜா நன்மை தீமை இன்னதென்று வகையறுக்க ஞானமுள்ள இருதயத்தை தேவனிடம் கேட்டார்.
அது தேவனின் பார்வைக்கு உகந்த விண்ணப்பமாய் இருந்தது. தேவனுடைய பாதத்தில் அமர்ந்து நன்மை தீமை வகையறுக்கதக்க ஞானமுள்ள இருதயத்தை தாரும் என மன்றாடுவோம்.
நாம் உயிரோடிருக்கும் காலம் வரை நம்மால் இயன்ற நன்மைகளை பிறருக்கு செய்வோம். தேவன் நம் ஒவ்வொருவரையும் இரட்டிப்பான நன்மையினால் நிறைத்து ஆசீர்வதிப்பாராக.
ஆமென்.