Daily Manna 206

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள். 1 தீமோ 6 :10.

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1 தீமோ 6 :10.
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
எனக்கு அன்பானவர்களே!

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

பண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை.
பல ஆண்டுகளாகப் பாடுபட்டும் கூட அவன் வறுமை தீரவில்லை.

ஒருநாள் அவன் வயலில் ஏர் உழுது விட்டு வரும் போது தகதகவென ஜொலித்த வண்ணம் பறவை ஒன்று அங்கிருந்த மரத்தில் அமர்ந்திருந்தது. அதைப் பார்த்த விவசாயி, “இந்தப் பறவை நம் வயலைக் காக்கும் தேவதையாக இருக்கக் கூடும்.

இத்தனை நாள் நாம் இதற்கு மரியாதை செய்யாமல் போனதால் தான் நம்முடைய வயலில் விளைச்சல் பெருகவில்லை. இன்று முதல் இதற்கு நாம் மரியாதை செய்வோம்’ என்று தீர்மானித்தான்.

“”எனது வயலைக் காத்து வரும் தேவதையே! இவ்வளவு நாட்கள் உன்னைக் கவனிக்காமல் இருந்ததற்காக என்னை மன்னித்து விடு. உனக்கு என் வீட்டில் இருந்து பழங்கள் எடுத்து வந்துள்ளேன்.

நீ சாப்பிட்டு என்னை ஆசீர்வதிப்பாயாக,” என்று கூறி பாத்திரத்தை வைத்து விட்டுச் சென்றான் விவசாயி
மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. மகிழ்ச்சியுடன் அதை எடுத்துச் சென்றான் விவசாயி.

இப்படி நாள்தோறும் மாலை வேளைகளில் விவசாயி பாத்திரத்தை வைத்துவிட்டு வருவான். மறுநாள் காலையில் ஒரு தங்க இறகு இருக்கும்.

இவ்விதம் மகிழ்ச்சியாகக் காலந்தள்ளிக் கொண்டிருந்த விவசாயி ஒருநாள் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. தனது மகனைக் கூப்பிட்டு அவனிடம் பறவைக்கு பழம் வைத்து விட்டு வருமாறு கூறினான்.விவசாயி மகனும் தந்தை சொல்லியவாறே அன்று மாலை பழங்களை வைத்து விட்டுச் சென்றான்.

மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது அந்தப் பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. அதைப் பார்த்த விவசாயியின் மகன், “இந்தப் பறவையைப் பிடித்து தங்க இறகுகளை வேண்டிய மட்டும் பிய்த்துக் கொள்வோம்.

எப்படியும் பறவைக்கு தங்க இறகு முளைத்து விடும். மீண்டும் பிய்க்கலாம்,’ என்று நினைத்து அவன் மறுநாள் ஒளிந்திருந்து பறவை பழம் சாப்பிடும் போது பிடித்துக் கொண்டான்.

அதன் இறகை பிய்க்க முயன்ற போது பறவை அவன் கண்களைக் குத்தி குருடாக்கி விட்டு பறந்து சென்றது. விவசாயியின் மகனின் பேராசையின் காரணமாக பார்வையற்றவன் ஆனான்.

கிடைப்பதை கொண்டு திருப்தி அடைய வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான்

வேதம் சொல்லுகிறது, போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.’
(1 தீமோத்: 6 : 6) என்று போதுமென்கிற மனது தேவன் கொடுக்கும் மிக பெரிய பொக்கிஷம்.

மெய்யான கிறிஸ்தவன் இதை நிச்சயமாக வாஞ்சிப்பான். பொதுவாக மனிதன் போதுமென்கிற மனதற்றவனாய் இன்றைக்கு அலசடிப்படுகின்றான்

அது மட்டுமல்ல திருப்தியற்ற இருதயம் உள்ளவனாய் ஒவ்வொரு நாளும் வாழுகிறான். இதினிமித்தம் அவர்கள் பலவிதமான பிரச்சனைகளிலும் நெருக்கங்களிலும் அகப்படுகிறார்கள்.

போதுமென்ற மனதில்லாத இடத்தில் மெய்யான தேவ பக்தியைப் பார்க்க முடியாது.

வேதத்தில் பார்ப்போம்,

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1 தீமோ 6 :10.

ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்;
பிரசங்கி 6:9.

நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்;
எபிரேயர்: 13 :5.

பிரியமானவர்களே,

அவர்கள் பணம், பொருள், பாவ ஆசைகள் எல்லாவற்றிலும் எனக்கு இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று இரவு பகலாக திருப்தியற்ற நிலைமையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு பலர் தங்கள் வருமானத்துக்கு அதாவது தேவைக்கு மிஞ்சி அதிகமான காரியங்களை செய்து பணப் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

மேலும் அடுத்தவர்களை Compare பண்ணி நாமும் இப்படி செய்ய வேண்டும்.இதைப் போல வாங்க வேண்டும், இவர்களைப் போல வாழ வேண்டும் என்று கடன் வாங்கி எல்லாவற்றையும் செய்து விட்டு கடைசியில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் எல்லாவற்றையும் விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

வேதம் சொல்லுகிறது,
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
(எபிரேயர் 13-9). என்று பார்க்கிறோம்.

ஆகவே பிரியமானவர்களே, பணத்தை நேசிக்கும் இச்சையிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். பணத்தை கையாளும் காரியங்களில் நாம் உண்மையுள்ளவர்களாக இருப்போம்.

பண விஷயத்தில் நேர்மையுள்ளவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் இருப்போம். உண்மையுள்ளவன் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வான் என்கிற வாக்குத்தத்தம் நம் வாழ்க்கையில் நிறைவேற நாம் தகுதியுடையவர்களாக காணப்படுவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே இத்தகைய பரிபூரண ஆசீர்வாதத்தை தந்து நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *