ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். ஏசாயா :66:13
ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.
ஏசாயா :66:13.
~~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!
தாயினும் மேலாய் அன்புள்ளம் கொண்ட இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு சிறுமிக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது அவளுடைய தாய் தன் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.
சில பரிசோதனைகளுக்குப் பிறகு, மருத்துவர் அந்த தாயாரிடம், “அவள் ‘டிப்தீரியா’ என்றழைக்கும் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்” என்று கூறினார்.
அது காற்றில் பரவக் கூடிய ஒரு நோய். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுடைய சுவாசக் காற்று மற்றும் தும்மலின் மூலம் இது மற்றவருக்கு பரவும் என்றும் கூறினார்.
ஆகவே, தாயாரை குழந்தையிடமிருந்து சற்று விலகியிருக்குமாறு கூறினார். ஒருநாள் இந்த நோயின் தாக்கத்தால் சிறுமி தொடர்ந்து அழுது கொண்டேயிருந்தாள். அவளால் சரியாக சுவாசிக்க முடியவில்லை.
சிறுமி தன் தாயிடம் “அம்மா, எனக்கொரு முத்தம் மட்டுமே தாருங்கள் அம்மா என்று அழுதாள்.” சிறுமியின் தாய் தன் உயிரைப் பற்றி சற்றும் சிந்தியாமல், மகளை முத்தமிட்டாள்.
அதன் பிறகு, தாயும், மகளும் இருவருமே மடிந்து போனார்கள். தன் ஜீவனையே தன் மகளுக்காக இழக்க துணிந்த ஒரு தாயின் மனதுருக்கம் இது.
பிரியமானவர்களே,
இன்று
என்னிடத்தில் ஆறுதலாய் பேச ஒருவருமில்லை என்று நீங்கள் புலம்புகிறீர்களா? கவலைப்படாதீர்கள். அன்பின் ஆண்டவர் சொல்லுகிறார். “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை”
(ஏசாயா 49:15) என்று நமக்கு வாக்குறுதி கொடுக்கிறார்.
ஒரு தாயின் அன்பு எல்லாவற்றையும் விட மேலானது. ஆனால், தாயின் அன்பை காட்டிலும் மேலானது தேவனுடைய அன்பு.
அது இணையற்ற ஒரு அன்பு. ஆகவே, உங்கள் உற்றார் உறவினர், அன்பானோர் உங்களை விசாரிப்பதில்லை என்று கவலைப்படாமல், தேவ பிரசன்னத்தில் உங்கள் கண்ணீரை ஊற்றுங்கள்.
அவர் உங்களுக்கு தம்முடைய சமாதானத்தையே கொடுப்பார்.
உங்களை ஏந்தி, சுமந்து, பாதுகாக்கும் அன்பின் ஆண்டவர் உங்களோடு
இருக்கும் போது ஏன் கலக்கம் கொள்ள வேண்டும்.
வேதத்தில் பார்ப்போம்,
ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
ஏசாயா 49 :15.
கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்.
ஏசாயா 66:2
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப் போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப் போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்.
ஏசாயா :66:12
பிரியமானவர்களே,
இன்றைய வேகமான உலகத்தில், சமூக ஒழுக்கத்துடன் வாழ வேண்டுமென்பதை மறந்து ஜனங்கள் தனித்து விடப்படுகின்றனர்.
சிலருக்கு மற்றவர்களுடைய பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்கும் நேரமில்லாமல் தங்கள் சொந்த பிரச்சினைகளிலேயே மூழ்கிப் போயிருக்கின்றனர்.
குப்பைத் தொட்டிகளில் வீசி எறிகிற குழந்தைகளின் எண்ணிக்கையும், முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படும் பெரியோர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இரக்கமற்ற ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, மாத்திரமே, நொறுங்கிய இருதயத்துடன் ஆறுதலற்று வாழும் ஜனங்களுக்காக ‘நொறுக்கப்பட்டார்.’
அவர் நம் மீது வைத்த மெய்யான அன்பினிமித்தம், நம்மை தேற்றும்படி, நம்மை குணமாக்கும் படி சிலுவையில் தம்மையே பலியாக ஒப்புக் கொடுத்தார்.
இயேசுவின் ஆழமான அன்பை சிலுவையில் இருந்த போது இயேசு பேசிய வார்த்தைகள் மூலம் அறியலாம். புரிந்து கொள்ள முடியாத ஒரு வழியில் போராடிக் கொண்டிருந்த அவருக்குத் தான் உதவி தேவைப்பட்டது.
ஆனால், இறுதியில், அவர் தன்னைப் பற்றி மறந்து, நமக்காக முழுக் கிரயத்தையும் செலுத்தும் வரை நமக்காக ஜெபித்தார். அவரால் எப்படிச் செய்ய முடிந்தது? அவரை அனுப்பிய அவருடைய பிதாவிடமும் நம்மிடமும் அவருக்கிருந்த தூய அன்பினாலேயே. அவரை விட அவருடைய பிதாவையும் நம்மையும் அவர் அதிகமாக நேசிக்கிறார்.
அவர் செய்யாத ஒன்றிற்காக அவர் கிரயம் செலுத்தினார். அவர் செய்யாத பாவங்களுக்காக அவர் கிரயம் செலுத்தினார். ஏன்? தூய அன்பு. தாயினும் மேலான அன்பு.
அவர் முழுக் கிரயத்தையும் செலுத்தியதில், நாம் மனந்திரும்பினால், அவர் செலுத்தியதற்கான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த மெய்யான அன்பில் என்றென்றும் நிலைத்திருக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே இந்த ஓய்வு நாளில் நம்மை ஆசீர்வதித்து காப்பாராக.
ஆமென்.