Daily Manna 208

ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நீதிமொழிகள்: 2 :10

ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,
நீதிமொழிகள்: 2 :10.
~~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!

ஞானத்தின் உறைவிடமாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு ஊரில் ஒரு ஞானி இருந்தார். அவரிடம்
குடும்ப வாழ்வில் நிம்மதியற்ற நிலையில் இருந்த ஒருவர் வந்தார். தான் ஞானம் பெற விரும்புவதாகவும் தாங்களே குருவாக இருந்து, ஞானத்தில் சிறந்த ஞானம் எதுவோ அதை எனக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்…!

உபதேசம் மூலம் ஞானத்தை இந்த குடும்பஸ்தருக்கு அறிய வைக்க முடியாது என ஞானி அறிந்தார். எனவே தினமும் உன் வீட்டின் முன்னால் திண்ணையில் காலை முதல் மாலை வரை அமர்ந்திருக்க வேண்டும்.

அந்த வழியாக சலவை தொழிலாளி கழுதையின் மீது பொதிகளை ஏற்றி வருவார். காலையில் ஏற்றி வரும் போதும் மாலையில் திரும்பும் போதும் கழுதையை கவனிக்கும் படியும் கூறினார்.

மறுதினம் பொழுது விடிந்ததும் அந்த குடும்பஸ்தர் திண்ணையில் அமர்ந்தார். சலவைத் தொழிலாளி அழுக்கு பொதிகளை கழுதை மேல் ஏற்றி வந்தார். மீண்டும் மாலையில் சலவை செய்த துணிகளையும் ஏற்றி சென்றார்.

மறுநாள் ஞானியிடம் சென்றான், நீங்கள் சொன்னது போல் கலையிலும் மாலையிலும் கழுதைகள் சென்றதையும் திரும்பியதையும் கவனித்தேன். ஆனால் அதில் ஞானம் தொடர்பான செய்தி இருப்பது போல் ஒன்றும் தெரியவில்லையே எனக் கூறினான்.

அப்பொழுது ஞானி “அன்பனே குடும்பஸ்தானே!….
காலையில் கழுதைகள் அழுக்கு துணிகளை சுமந்து சென்றன. அப்போது “அழுக்கு துணிகளை சுமக்கிறோம் என்ற வருத்தம் அதற்கு இல்லை.”
அதேப் போல் மாலையில் “சலவை செய்த துணியை சுமக்கிறோம் என்ற மகிழ்ச்சியும் அதற்கு இல்லை” அது போல துன்பம் வரும் போது அதிக துன்பம்மின்மையும் இன்பம் வரும்போது அதிக சந்தோசம் இல்லாமலும், இன்பம் துன்பம் இரண்டையும் நடுநிலையான மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதுவே சிறந்த ஞானம். இந்த செய்தியையே அந்த கழுதைகள் மூலம் நாம் பெற்றுக் கொள்ளும் ஞானம் என்றார்.

வேதத்தில் பார்ப்போம்,

இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது.
1 கொரிந்தியர் :3:19.

தன் வழியைச் சிந்தித்துக் கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
நீதிமொழிகள்: 14 :8.

ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்
ரோமர்: 11 :33.

பிரியமானவர்களே,

தேவனிடத்தில் ஞானம் வேண்டும் என கேட்டு பெற்றுக் கொண்ட சாலொமோன் ஞானி கூறுகிறார் “ மூடனுக்குச் சம்பவிக்கிறது போல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.

மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப் போம்; மூடன் எப்படிச் சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்.

உலக ஞானம் பிரயோஜனமற்றது”
[பிரசங்கி :2:15,16]. இன்றைக்கு உலக ஞானத்தை நாம் அடையவும் நம் பிள்ளைகளுக்கு அதை புகட்டவும் எவ்வளவோ பிரயாசப்படுகிறோம்.

நம்மை ஞானி என்று காட்டிக் கொள்ளுவதில் பெருமைப்படுகிறோம். ஆனால் வேதம் கூறுகிறது “ஒருவனும் தன்னைத் தானே வஞ்சியாதிருப்பானாக, இவ்வுலகத்திலே உங்களிலொருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும் படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.

இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாக பைத்தியமாய் இருக்கிறது
[1கொரிந்தியர்:3:18,19]

யோபு கூறுகிறார்
“ஆண்டவருக்கு பயப்படுவதே ஞானம்”
[யோபு:28:28].

கர்த்தருடைய சொல்லை வெறுத்து போட்டவர்களுக்கு ஞானமேது? என தேவன் எரேமியா தீர்க்கரிடம் இஸ்ரவேலரைக் குறித்து கூறுகிறார்
[எரேமியா:8:9]. கர்த்தருக்கு பயந்து அவர் வார்த்தைகளுக்கு செவிகொடுத்து தேவன் நமக்கு கொடுக்கும் பணிகளை நாம் திறம்பட செய்வதே தேவ ஞானம்.

அப்படி பணி செய்கிறவர்களுக்கு பரலோகத்தில் பலனுண்டு. நம் சுயஞானத்தினால் இன்றைக்கு பல காரியங்களை நாம் தேவனுக்கு செய்கிறோம். அவை அனைத்தும் மாயையே.

உலக ஞானமானது நமக்கு அவசியமான இரட்சிப்பை நித்திய வாழ்வை நமக்குத் தரமுடியாது. அதற்கு நமக்குத் தேவனுடைய வார்த்தை மட்டுமே தேவை.

ஆகவே நாம் உலக ஞானத்தில் மட்டுமல்ல. தேவ ஞானத்திலும் வளர வேண்டும். ஞானத்தை அருளும் ஆவியானவர் தாமே நமக்கு ஒவ்வொரு நாளும் ஞானத்தை போதித்து , ஆலோசனை தந்து நம்மை ஒவ்வொரு நாளும் காத்து வழிநடத்துவாராக.
ஆமென்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *