அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். கொலோசேயர்: 3:11.
அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை,
கிறிஸ்துவே எல்லாரிலும்
எல்லாமுமாயிருக்கிறார்.
கொலோசேயர்: 3:11.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு முறை நம் தேச தந்தை மகாத்மா காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் போது பைபிளை வாசித்ததில் இயேசு கிறிஸ்துவின் மலைப்பொழிவு அவரை மிகவும் கவர்ந்துள்ளது.
இயேசு கிறிஸ்துவின் கொள்கையால் கவரப்பட்ட காந்தி ஒருநாள் வெள்ளையர்களுக் கென்று நியமிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் நுழைய முற்பட்டபோது, வெள்ளையர்கள் தங்கள் இனவெறியால் காந்தியை ஈவு இரக்கமின்றி ஆலயத்திலிருந்து வெளியே துரத்தி விட்டார்கள்.
அதே நாட்டில் ஒருமுறை இரயிலில் பயணம் செய்ய காந்தி முயற்சி செய்த போது, அந்த பெட்டி வெள்ளையர்களுக் கென்று நியமிக்கப் பட்டிருந்ததால், வெள்ளையர்கள் தங்கள் இனவெறியால் காந்தியின் உடைமைகளையும், காந்தியையும் வெளியே வீசி எறியப்பட்டார்கள்.
இது தான் இயேசு பெருமான் கிறிஸ்தவர்களுக்கு கற்றுக் கொடுத்த பண்பாடா என்று காந்தி மனம் நொந்திருப்பார் அல்லவா!
ஒருமுறை இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு ஆன்மீகப் பணியாளர் ஸ்டேன்லி ஜோன்ஸ் என்பவர் காந்தியிடம், “காந்தியாரே, நீங்கள் உங்கள் பேச்சில் அடிக்கடி இயேசு கிறிஸ்துவின் போதனைகளை மேற்கோள் காட்டுகிறீர்கள்;
ஆனால், ஏன் நீங்கள் இன்னும் கிறிஸ்தவராக மாறவில்லை?” என்று கேட்டார்.
அதற்கு காந்தி, _”நான் கிறிஸ்துவை விரும்புகிறேன்; ஆனால், கிறிஸ்தவர்களை விரும்ப முடியவில்லை;
ஏனெனில், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைப் போல இல்லை”_ என்றாராம்.
இப்படி கிறிஸ்தவர்கள் வரலாறு நெடுக தங்கள் இனவெறியை வெளிப்படுத்தி கடவுளை கேவலப்படுத்தியிருக்கிறார்கள்.
“பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் அன்பு, பாசம், தயவு, இரக்கம், சகோதரத்துவம், சமத்துவம் என்பவற்றைப் பற்றி மேடையில் உருக, உருக பேசுவார்களே தவிர, தங்கள் நிஜவாழ்வில் அவைகளை காண முடிவதில்லை .
வேதத்தில் பார்ப்போம்,
அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லா முமாயிருக்கிறார்.
கொலோசேயர்: 3:11
யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்
கலாத்தியர் :3 :28.
தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.
கொலோசேயர்: 3:15
பிரியமானவர்களே,
நம்மில் அனேகர் பைபிள் தான் எங்கள் புனித நூல்’ என்று மார்தட்டிக் கொள்ளும் பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் நான் மேல்ஜாதி, அவன் கீழ்ஜாதி என்னும் அசிங்கமான பாகுபாட்டைத் தான் அடிப்படை பண்பாடாக வைத்திருக்கிறார்கள்
இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு வாழும் எந்த கிறிஸ்தவர்களும் ஜாதி பாகுபாடு கட்டாயம் பார்க்க கூடாது . இயேசு கிறிஸ்து ஜாதி பாகுபாடை ஒரு போதும் பார்க்க மாட்டார்.
வேதம் சொல்லுகிறது” அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.”
கொலோ 3:11 என்று பார்க்கிறோம்.
” அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.” என்று, அப்போஸ்தலர் 10: 28 டில் வாசிக்கிறோம்.
” உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?”
1 கொரிந்தியர் 1: 12,13 என்று பவுல் கேள்வி எழுப்புகிறார்.
கர்த்தருக்கு பிரியமான பிள்ளைகளே,
நீங்கள் ஜாதி பார்ப்பவர் என்றால் மேலே கூறப்பட்ட வசனத்தைப் போல் நான் இன்னாரை சார்ந்தவன் என்ற ஜாதி எண்ணம் உங்களுக்குள் இருந்தால் இன்று முதல் ஜாதி வேறுபாடு எண்ணத்தை விட்டு விடுங்கள்.
கர்த்தர் இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பார். தேவன் படைத்த முதல் மனித தம்பதி ஆதாம் , ஏவாள் மட்டுமே, அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளின் தலைமுறையினர் தான் நாம் அனைவரும் ஆக நாம் அனைவரும் ஒரு குடும்பத்தினர் தான் .
இயேசு கிறிஸ்துவின் இரத்ததால் மீட்கப்பட்டு கிறிஸ்தவர்கள் என்ற ஒரு குடையின் கீழ் இருக்கும் நமக்கு ஜாதி பாகுபாட்டு எண்ணம் கட்டாயமாக வேண்டாம் . ஜாதி பாகுபாடு கொள்கை இயேசு கிறிஸ்து கொண்டு வந்ததில்லை.
ஆகையால் இயேசுவின் ராஜ்ஜியத்தில் உள்ளவர்கள் ஜாதி பாகுபாடு பார்க்க மாட்டார்கள் . ஜாதி பாகுபாடு கொள்கையை கொண்டு வந்து ஜனங்களை பிரித்து கலகம் செய்பவன் சாத்தானே , ஆகையால் சாத்தனின் ராஜ்ஜியத்தில் உள்ளவன் மட்டுமே ஜாதி பாகுபாடு பார்ப்பான்.
“மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப் பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.” என்று, அப்போஸ்தலர் 17: 26 பார்க்கிறோம்.
ஆகவே பிறப்பாலோ, மதத்தாலோ, இனத்தாலோ பாகுபாடு காட்டாமல் கர்த்தருக்கு பிரியமுள்ளவர்களாய் வாழுவோம்.
நாம் யாவரும் இறைவனின் படைப்பில் ஒன்றே என்ற நோக்கில் பிறரை நேசித்து கர்த்தருக்கு சாட்சியுள்ள வாழ்வை வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
ஆமென்.