நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். மத்தேயு: 21:22
நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
மத்தேயு: 21:22
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எனக்கு அன்பானவர்களே,
நம் ஜெபத்திற்கு பதில் தருபவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு ஆலயத்திற்கு எதிராக மதுபானம் ஒன்றை விற்பனை செய்ய ஒரு கடை திறக்க, ஒரு பிரமுகர் ஏற்பாடு செய்து பணியைத் துவக்கினார். சபை அங்கத்தினர்கள் எதிர்த்தனர். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.
சபையார் ஒன்றுகூடி, அங்கே அந்தக் கடை வராமல் இருக்க உபவாசமிருந்து ஊக்கமாய் தேவனிடம் ஜெபித்ததுடன் , நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்த பாடில்லை.
இதற்குள் கட்டட வேலை முடிந்து விட்டது. திறப்புவிழா அறிவிப்பு வெளியிடப்பட்டது. அங்கத்தினர்கள் திகைத்து நின்றார்கள். எனினும், “”இதை தடுத்து நிறுத்த உமக்கு வல்லமையுண்டு. நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று மேலும் ஊக்கமாக ஜெபித்தார்கள்.
திறப்பு விழாவுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக பெரும் மின்னலுடன் காற்றும் மழையும் ஏற்பட்டது. அந்த புதிய கட்டடத்தை இடி தாக்கி சரிந்தது. சபையாருக்கு மிகவும் சந்தோஷம். தங்களது ஜெபத்திற்கு இரங்கி, தேவனே நேரடியாகத் தலையிட்டு பெரிய காரியங்களைச் செய்தார் என மகிழ்ந்தனர்.
உடனே கடை உரிமையாளர், “”இவர்களது ஜெபமே எனது கடை பாழ்பட காரணமாக இருந்தது. இதற்கு இவர்கள் இழப்பீடு தர வேண்டும்,” என சபையார் மீது வழக்கு தொடர்ந்தார். சபையாரோ இவரது கட்டடம் நாசமாக எங்களது ஜெபம் எந்த வகையிலும் பொறுப்பல்ல” என பதில் அறிக்கை கொடுத்தனர்.
உடனே நீதிபதி சபையாரிடம், “”அப்படியானால், அந்தக் கடை உரிமையாளருக்கு உங்கள் ஜெபத்தின் மீதிருக்கும் நம்பிக்கை, உங்களுக்கு இல்லை… அப்படித் தானே,” என்று சபையாரைக் கேட்டார்.
“எங்களது ஜெபத்தின் வல்லமையால் தேவன் இப்படி செய்தார் என்று சொல்ல முடியாதது கோழைத்தனம் இல்லையா?
இது வேலைக்காரப் பெண் முன்பாக பேதுரு இயேசுவை மறுதலித்தது போல் இருக்கிறது.
மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்,” என்கிறார் இயேசுநாதர்.
வேதத்தில் பார்ப்போம்,
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
எரேமியா 33:3
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
சங்கீதம் 145:18
கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள், அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
ஏசாயா 55:6
பிரியமானவர்களே,
ஜெபவாழ்வு தரும் இன்பத்தை நாம் வேறெதிலுமே பெற்றுக்கொள்ள முடியாது.
ஜெபம் என்பது இயல்பாகவே மனிதனுடன் இரண்டறக் கலந்துள்ள ஒரு உன்னதமான உறவு. தேவசாயலில் படைக்கப்பட்ட மனிதன் ஆண்டவரிடமுள்ள உன்னதமான ஈவாக கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறான். ஆகையால் தான் நாம் எல்லோரும் பிரார்த்தனை பண்ணுகிறோம்.
பாருங்கள், நீங்கள் ஆண்டவருக்காக வல்ல பெரிய செயல்களை செய்கிறவர்களாய் கூட இருக்கலாம். இரவும் பகலும் ஜெபஆவியில் நிறைந்து இருக்கலாம். ஆனால், விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.
உண்மையான ஜெபம் ஒரு ஆவிக்குரிய யுத்தத்தையே கிளப்பிவிடுமளவுக்கு வல்லமையுள்ளது என்பதை தானியேலின் அனுபவத்தில் காண்கிறோம்.
இன்று அநேகருடைய ஜெபங்கள் கேட்கப்படாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம்.
விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்.
ஆகவே நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போம் இவ்வுலகத்தில் வளமாய் வாழ்வோம்.
கர்த்தரின் கிருபையும் சமாதானமும் உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக.
ஆமென்.