உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார். சங்கீதம்: 37:5
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்.
சங்கீதம்: 37:5
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
எனக்கு அன்பானவர்களே!
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் .ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய் தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை.
ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானம் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கிறது.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கையின் ஆதாரமே
தைரியமும் தன்னம்பிக்கையும் தான். ஆகையால் அவைகளை ஒரு போதும் இழந்து விடாமல் வாழுங்கள்.
எனினும் நம்முடைய நம்பிக்கையை கர்த்தர் மேல் வைக்கும் போது சற்றும் கூட இடர மாட்டோம்.
வேதத்தில் பார்ப்போம்,
அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.
2 இராஜா 18:5
கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு: அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
நீதிமொழிகள்:14:26
அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம். வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
எபிரேயர்: 10:23
எனக்கு அருமையானவர்களே
தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனை வாழ்க்கையில் சாதிக்க உதவுகிறது.
தன்னம்பிக்கை தான் நமக்கு தைரியம், விடா முயற்சி, சகிப்புத்தன்மை, பொறுமை, திறமை எல்லாவற்றையும் கற்றுத் தருகிறது.
நம் இரு கைகளையே இழந்தாலும் தன்னம்பிக்கை நமக்கு உதவும்.
நாம் எல்லோரும் நம் மனதில் ஏதோ ஒரு விதமான நம்பிக்கையுடன் தான் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்பிக்கை இல்லாவிட்டால் நாம் வாழவே முடியாது என்பது தானே நிஜம்? இரவில் நிம்மதியாக தூங்கப் போகின்றோம், நாளை கண்டிப்பாக தூக்கத்திலிருந்து விழிப்போம் என்கின்ற நம்பிக்கையில் தான்.
எந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும்
நாம் ஒரு போதும் நம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது.
நாளை நிச்சயம் நல்லது நடக்கும் என்று மனதார விசுவாசிக்க வேண்டும் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும் இரவுக்குப் பின் விடிந்து தானே ஆக வேண்டும்?
இன்று பணக் கஷ்டம், அவமானம், உறவுகளில் விரிசல், அமைதி இல்லாத மனம் என்று பலவிதமான துயரங்களில் நீங்கள் அவதியுறலாம். நம்பிக்கையுடன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் கூடிய சீக்கிரம் வசந்தம் வந்தே தீரும்.
ஆண்டவரை நோக்கிப் பார்க்கிற முகங்கள் பிரகாசம் அடைந்தன.ஆம், அவரை நோக்கிப் பார்த்த நமது வாழ்க்கையும் பிரகாசம் அடையும்.
இந்த மெய்யான ஆசீர்வாதங்களை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.