ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். நீதிமொழிகள்:15:2
“ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்”
நீதிமொழிகள்:15:2
எனக்கு
அன்பானவர்களே!
வார்த்தையினாலே வியாபித்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒருமுறை சாது சுந்தர் சிங் ஒரு மௌன சாமியாரைச் சந்தித்தார். சாது சுந்தர் சிங் அவரிடத்தில் பேசிய போது, அவர் பதில் ஒன்றும் பேசாமல், “தான் ஆறு வருடங்களாய் யாரிடத்திலும் பேசுவதில்லை” என்று எழுதிக் காண்பித்தார்.
சாது சுந்தர் சிங் அவரைப் பார்த்து, “ஐயா, பேசும் திறமை கர்த்தர் கொடுத்த கிருபை அல்லவா?
அதை நீங்கள் ஏன் வீணாக்க வேண்டும்?
தேவனைத் துதிக்கவும், பாடவும், புகழவும் உங்கள் நாவை பயன்படுத்தக் கூடாதா? நன்மையான காரியங்களைப் பேசி மற்றவர்களை ஆறுதல்படுத்தக் கூடாதா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த மௌன சாமியார் பேப்பரிலே, “என்னால் நன்மையானவைகளைப் பேச இயலவில்லை. என்னால் அனேகர் காயப்பட்டு விட்டார்கள்.
என் நாவுனால் அனேகருடைய வாழ்வு திசைமாறி போனது. நன்மையானதை பேச எனக்கு பொறுமையில்லை. இப்படி தீமைகளை பேசுவதைப் பார்க்கிலும் பேசாமல் இருப்பதே நலம் என்று எண்ணி, இந்த மௌன விரதத்தை மேற்கொண்டேன்.
ஆனாலும் எனக்கு மன அமைதியையும், சந்தோஷத்தையும் சமாதானமும் அடைய முடியவில்லை” என்று எழுதினார்.
இன்றும் நம்மில் பலர் இப்படித் தான் இருக்கிறோம்.நாவு மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். அதிலே எலும்புகளில்லை. அது எல்லா பக்கமும் சுழலக் கூடியது. நாவு நல்ல காரியத்திற்கும், அதே நேரத்தில் அழிவு காரியத்திற்கும் பயன்படும்.
ஒருவருடைய சிந்தையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதும் இந்த நாக்கு தான்.
உலகை ஆழுவதும் இந்த நாவு தான்.
உற்சாகமான வார்த்தைகள் நம்மை மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் உணர வைக்கிறது. தவறான வார்த்தைகள் மனவேதனையை உருவாக்குகிறது.
ஆனால், தேவனுடைய வார்த்தைகளோ எப்பொழுதும் நமக்கு ஜீவனைக் கொண்டு வருகிறதாயிருக்கிறது. “மனிதன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல; கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்”
(உபாகமம் 8:3) என்று தேவன் நமக்கு கூறியிருக்கிறார். இன்று நம் வார்த்தையால் மற்றவர்களுக்கு வாழ்வுண்டா???
வேதத்தில் பார்ப்போம்,
நாவும் நெருப்புத் தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச் சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்தி விடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
யாக்கோபு: 3:6.
அவனவன் தன் தன் அயலானோடே தன் தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப் பதிவிடை வைக்கிறான்.
எரேமியா:9:8.
துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக் கேட்கிறான்: பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
நீதிமொழிகள்:17:4.
பிரியமானவர்களே,
நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.
அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்;
தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.
யாக்கோபு 3:8-10 என்று வேதம் நமக்கு ஆலோசனை கூறுகின்றது.
நீதிமொழி புஸ்தகத்தில், நாவின் வல்லமையையும், நாவினால் வரும் அறிவையும் குறித்து வாசிக்கலாம். நாவின் முக்கியத்துவத்தைக் குறித்து அதில் அதிகமாய் சொல்லப்படுகிறது.
சாதாரணமாக ஒரு காரை திருப்ப வேண்டுமென்றால், ஸ்டீயரிங்கைப் பிடித்து திருப்புகிறார்கள். கப்பலை சுக்கானைப் பிடித்து திருப்புகிறார்கள். குதிரையைக் கடிவாளத்தைப் போட்டு திருப்புகிறார்கள்.
ஆனால், மனிதனின் நாவை எதினால் திருப்புவது?
யாக்கோபு சொல்லுகிறார். “கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவை களாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி இடம் எதுவோ அதை யோசித்து அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்.
அப்படியே, நாவானதும்” ஒரு மனிதனின் சிந்தனையின் வழியிலேயே திருப்பப்படுகிறது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு மனுஷனை தனக்கென்று தெரிந்து கொள்ளும் போது முதலாவது அவனுடைய நாவை தொடுகிறார். அப்போது அவனுடைய முழு வாழ்க்கையையும் திருப்பி விடலாம் என்பது அவருக்குத் தெரியும்.
அதனால் தான் ஏசாயாவை தீர்க்கதரிசியாக கர்த்தர் அபிஷேகம் பண்ணும் போது
நான் அசுத்த உதடுள்ளவன் என்று நினைவு கூருகிறார்.
அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, அதினால் என் வாயைத் தொட்டு:இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது என்றான்
(ஏசாயா :6:6,7).
இன்றைக்கும் இயேசுவின் இரத்தம் நம் நாவை பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் நம்மை சுத்திகரிக்கிறது.
அனேகருடைய வாழ்க்கையை கட்டி எழுப்ப ஆசீர்வாதமான வார்த்தைகளை நாம் பயன்படுத்துவோம்.