உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன். சங்கீதம்: 119:92
உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்.
சங்கீதம்: 119:92
எனக்கு அன்பானவர்களே!
மனமகிழ்வை தருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ராபர்ட் யங் என்ற மிகப்பெரிய கோடீஸ்வரர் தான் பெரிய அதிகாரியாக வர வேண்டும் என ரொம்ப நாள் ஆசை.
அவரது விடாமுயற்சியால் பெரும் போராட்டத்திற்குப் பின் நியூயார்க் மாநகரின் ரயில்வே அதிகாரியானார்.
எல்லா செல்வங்களும் பெற்றுக் கொண்டார் எல்லா உறவுகளும் அவருக்குத் துணையாக இருந்தன. ஆனாலும் அவருக்கு மன மகிழ்ச்சி இல்லாமல் எப்போதும் இருந்தார்.
அவருக்கு மன மகிழ்ச்சியின்மையின் காரணமாக தான் போராடி பெற்ற செல்வம்,அதிகாரம் எல்லாவற்றையும் விட்டு விட்டு தனது அரண்மனை போன்ற “ப்ளோரிடா”என்ற மாளிகையில் 1958- ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் நாள் தற்கொலை செய்து கொண்டார்.
வேதம் சொல்லுகிறது. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார் என்று
சங்கீதம்: 37:4 -ல் பார்க்கிறோம்.
தான் போராடிப் பெற்ற மிகப் பெரிய பதவியின் மூலம் கிடைத்த செல்வத்திலும் அவருக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கவே இல்லையாம்.
இவரைப் போன்று எண்ணிலடங்கா மக்கள் மகிழ்ச்சியின் நிறைவு இல்லாததால் தன்னைத் தானே அழித்துக் கொள்கின்றனர்.
உண்மையான மகிழ்ச்சியின் மிகப் பெரிய ஆதாரமே பிறரை நேசிப்பது தான் என்று ஒரு அறிஞர் கூறுகிறார். நாம் பிறரின் நலன் மற்றும் மகிழ்ச்சியில் உண்மையான அக்கறை காட்டினால், நமது மனம் இலகுவாகி விடுகின்றன.
மன மகிழ்ச்சி என்பது நீண்ட நாள் நல் வாழ்க்கைக்கான உணர்வு, அமைதி மற்றும் நமது வாழ்வோடு சேர்ந்த திருப்தி.அதைத் தான் நாம் எல்லோரும், எல்லா நேரமும் தேடிக் கொண்டிருக்கிறோம்.
வேதத்தில் பார்ப்போம்,
மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது.
1 நாளாகமம்: 16:27.
கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக் களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள், நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேலிருக்கும், சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள், சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
ஏசாயா :35:10.
சாந்த குணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மன மகிழ்ச்சியாயிருப்பார்கள்.
சங்கீதம்: 37:11.
பிரியமானவர்களே,
என்ன வாழ்க்கை! ஒரே வெறுப்பாக இருக்கிறது. எனக்கென்று என்ன சந்தோஷம் இருக்கிறது என கேட்பவரா நீங்கள்?
அல்லது பாவம் நிறைந்த இவ்வுலகிலே கட்டுப்பாடுகள் இல்லாமல் வாழ்வை அதன் போக்கில் அனுபவித்தால் என்ன? என்ற கேள்வி கேட்பவரா நீங்கள்?
‘எப்படியாவது சந்தோஷமாக இருக்க வேண்டும்’ என்பது தானே உங்கள் எண்ணம்! முதலில் எது சந்தோஷம் என தெளிவுபடுத்தி விட்டால் இரு கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடும்…
இப்போது நீங்கள் இரு காட்சியினை கற்பனை செய்து கொள்ளுங்கள். உலக இன்பத்தையும், இயேசுவையும் நான் ஏன்? ஒரே நேரத்தில் ஏற்றுக்கொள்ள கூடாது? என கேட்கலாம்.
பிரச்சனை என்னவென்றால் இயேசுவுக்கு இன்பமாக தெரிபவை சாத்தானுக்கு அருவருப்பானவைகள்.
ஆதாம் ஏவாளின் உள்ளத்தில் பரிசுத்தம் தான் இன்பம் என்ற எண்ணத்தை தேவன் வைத்திருந்தார். ஆனால் சாத்தானோ பாவம் தான் பரவசம் என்று அவர்களுக்கு போதித்தான்.
பரிசுத்தம் எப்படி இன்பமாகும், அது ஒரு கட்டுபாடு தானே! என சிலருக்கு சந்தேகம் வரலாம். ஒரு நெல்லிக்காயை எடுங்கள், அதை பொறுமையாக சாப்பிடுங்கள்.
பின் நீர் அருந்தி பாருங்கள். தித்திப்பை உணருவீர்களல்லவா? புளிப்பான நெல்லிக்காயில் இனிப்பு எங்கிருந்தது? ஒரு ஸ்பூன் சீனியை விட நெல்லிக்காயில் இனிப்பு மட்டுமல்ல உடலுக்கு ஆரோக்கியமும் அதிகம்!
அது போல சகிப்பு தன்மையும், இச்சை அடக்கத்தையும் கொண்ட பரிசுத்தம் ஆரோக்கியமான உத்திரவாதமுள்ள இன்பம்.
நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது’ .
மகிழ்ச்சிக்கு முன்பாக வெளிச்சம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகிழ்ச்சிக்கு முன்பாக வெளிச்சம் இருப்பதை கவனியுங்கள்.
ஆகவே மகிழ்ச்சி நமக்கு வேண்டுமென்றால், வெளிச்சம் முதலாவது நமக்கு வேண்டும். ‘இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்.
உலகத்திற்கு ஒளியாயிருக்கிற, வெளிச்சமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை நம் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டால், மகிழ்ச்சி தானாய் நம் இருதயத்தை நிரப்பும்.
இயேசு கிறிஸ்து இல்லாத வாழ்வு, இருளும், சஞ்சலமும் நிறைந்தது. நிம்மதியும் மகிழ்ச்சியும் அங்கு ஒரு போதும் காணவே முடியாது.
எனவே ஆண்டவரை இன்றே தேடுவோம் மன மகிழ்ச்சியாய் வாழ்வோம்.
கர்த்தர் தாமே இத்தகைய மனமகிழ்வுடன் கூடிய நல்வாழ்க்கை வாழ நம் யாவருக்கும் அருள் புரிவாராக.
ஆமென்