ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். நீதிமொழிகள்: 19: 17
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
நீதிமொழிகள்: 19: 17.
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. நான்காம் வகுப்பு ஆசிரியருக்கு ஒரு பழக்கம்.தினமும் ஒரு மாணவனை பள்ளியை விட்டு வெளியே எங்காவது அழைத்து செல்லுவது.
அந்த மாணவனுடன் பல விஷயங்களைப் பேசுவார்.அவன் குடும்பத்தை, அவன் படிப்பைப் பற்றி விசாரிப்பார். அது உரையாடல் மூலமாக அவன் குணம், திறன்கள், எல்லாவற்றையும் அறிந்து கொள்வார்.
ஒரு நாள் ஆசிரியர் ஒரு மாணவனை அழைத்துக் கொண்டு வெளியே போனார் இருவரும் நடந்து நடந்து ஊரைத் தாண்டி வயல்வெளி பக்கமாக வந்து விட்டார்கள்.
அங்கு ஒரு விவசாயி வேலையை முடித்துக் கொண்டு அருகில் இருந்த வாய்க்காலில் முகம், கை, கால்களை கழுவிக் கொண்டு இருந்தார். அவருடைய செருப்புகள் பழசாகி தேய்ந்து போன நிலையில் தரையில் கிடந்தன. மாணவன், விவசாயியையும் செருப்புகளையும் பார்த்தான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
சார், இந்த செருப்பை எடுத்து அந்த புதருக்குள் ஒளிச்சு வச்சுருவோமா? அந்த விவசாயி கரைக்கு வந்து செருப்பைத் தேடுவாரு… அதை காணாம அவர் முகம் படுற பாட்டை நாம் ஒளிஞ்சிருந்து பார்க்க ஜாலியா இருக்கும் என்றான்.
இதைக் கேட்ட அந்த ஆசிரியர் முகம் வேதனையால் வாடியது. இல்லையப்பா… இப்படி எல்லாம் யோசிக்காதே. தப்பு. அதிலேயும் ஏழைகளோட வாழ்க்கையில் விளையாடுறது ரொம்ப, ரொம்ப தப்பு என்றவர்.
நான் ஒன்று சொல்கிறேன். இது மாதிரி செய்வோமா? என்றார். சொல்லுங்க சார்.அந்த விவாசாயோட செருப்புகளில் என்கிட்ட இருக்கிற கொஞ்சம் பணத்தையும் உன்கிட்ட இருக்கிற காசையும், தேய்ந்து போன இரு செருப்புகளிலும் சரி பாதியாக வைத்து விட்டு நாம் போய் புதருக்குள் ஒளிஞ்சிக்குவோம் அதை பார்த்து அவர் முகத்துல என்ன ரியாக்ஷன் தெரியுது கவனிப்போமா? என்றார். சரி சார்.
விவசாயி தண்ணீரில் இருந்து கரை ஏறி தன்னுடைய ஒரு செருப்பில் காலை நுழைத்தார் வித்தியாசமாக ஏதோ இருப்பதை உணர்ந்தார். செருப்பை கவனித்தார். அதற்குள் சில கரன்ஸிகளும் நாணயங்களும் இருப்பதை கண்டார்.
இது யாருடையதாக இருக்கும் என்று அக்கம் பக்கம் பார்த்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை. அந்த ஏழை விவசாயி அவற்றை எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். இன்னொரு செருப்பை காலில் நுழைத்தார். அதிலும் கரன்ஸிகளும் நாணயங்களும்! இருப்பதைக் கண்டு அசந்து போனார்.
அப்படியே மண்டியிட்டு தரையில் அமர்ந்தார். ஆகாயத்தை பார்த்து தன் இரு கைகளையும் விரித்து கடவுளே… உன் கருணையே கருணை வீட்டில் நோயினால் படுத்த படுக்கையாக கிடக்கிற என் மனைவிக்கு மருந்து வாங்க நான் என்ன செய்றது. என் குழந்தைகளுடைய பசியை போக்க தானியம் வாங்க என்ன செய்றதுனு மனம் கலங்கி இருந்தேன்.
காலையில கடவுளே உன்னிடம் வேண்டவும் கெஞ்சவும் செஞ்சேன், என் சத்தத்தை கேட்டு கொடுத்துட்டா சாமி…” என்று கண்ணீர் விட்டு சத்தமாக அழுதார். பிறகு தன் வீட்டை நோக்கி புன்னகையாய் எழும்பிப் போனார்.
அவர் போனதும் ஆசிரியரும் மாணவரும் வெளியே வந்தார்கள். ஆசிரியர் கேட்டார்… இப்பொழுது சொல்லு உனக்கு எது மகிழ்ச்சியாக இருந்திருக்கும்?
சார் எனக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்தீங்க, இதை என்றுமே நான் மறக்க மாட்டேன் சார். ஏழைக்கும், தேவையிலிருப்போருக்கும் கொடுப்பது எவ்வளவு பெருசுங்கிற அர்த்தம் புரிஞ்சிடுச்சு நன்றி சார் என்று கண்ணீர் மல்க கூறினான்.
வேதத்தில் பார்ப்போம்,
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக் கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்’
நீதிமொழிகள்:19:17.
ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக் கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான். நீதிமொழிகள்: 21 :13.
மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
மத்தேயு 25:40
பிரியமானவர்களே,
வானத்தையும் பூமியையும், சகலத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள கர்த்தர் யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் நாம் ஏழைக்குக் கொடுக்கும் பொருளைக் கடனாகக் கொண்டு நமக்கு இரு மடங்கு திருப்பித் தருவார். ஏழையின் கூக்குரலுக்கு நாம் செவியை அடைத்துக் கொண்டால், நாம் சத்தமிட்டுக் கூப்பிடும் போது இறைவன் கேட்க மாட்டார்.
ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடக் கூடாது. சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் பொய்சாட்சி சொல்லி உபத்திரவப்படுத்தக்கூடாது. தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ தேவ தயவு கிடைப்பது இல்லை.
தரித்திரருக்குக் கொடுத்து தரித்திரமும் அடைவதில்லை . ஏழையைப் பரிகாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான். அவனுடைய நிந்தை அவனை விட்டு ஒரு போதும் நீங்குவது இல்லை.
ஏழைக்கு இரங்குகிறவன் செழிப்பான். அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கிறார். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். அவனை தேவ கிருபை சூழ்ந்துகொள்ளும். தேவ சமாதானத்தை பெறுவான்.
ஏழைக்குக் கொடுத்ததை ஆண்டவர் அவனுக்கு இரட்டிப்பாக திரும்பக் கொடுக்கிறார். அவன் தலைமுறை ஆசீர்வாதமாக இருக்கும்.
ஆம் பிரியமானவர்களே,
நாமும் இறைவனுக்கு செய்யும் தொண்டு என்று எண்ணி ஏழைகளுக்கு உதவி செய்யத் தொடங்குவோம்.
சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்.தீங்கு நாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்
சங்கீதம்:41:1 என்று வேதம் கூறுகிறது.
சிறுமையானவர்கள் மேல் சிந்தை வைத்து இருந்தாலே கர்த்தர் தீங்கிலிருந்து நம்மை விடுவிப்பார் என்று வேதம் தெளிவுபடுத்துகிறது.
ஆகவே நாம் ஏழைகளின் சத்தத்திற்கு செவிகொடுப்போம். சிறுமையானவர்கள் மீது சிந்தை வைத்து கர்த்தருக்காய் வாழுவோம்.
கர்த்தர் தாமே இத்தகைய நல்ல எண்ணங்களை தந்து நம்மை ஆசீர்வதித்து காப்பாராக.
ஆமென்.