தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான். நீதிமொழிகள்: 28:27
தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான். நீதிமொழிகள்: 28:27
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு ஆலயத்தின் மண்டபத்தின் வாசலில் இரண்டு
வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர்.
இரவு நேரம்…, பெருத்த மழை வேறு…,
அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.
வந்தவர் “நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார்.
அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.
இருவரில் முன்னவர் சொன்னார்,
என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார்.
இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர்,
ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இருக்கின்றன,
இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்.
மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், என்றார்.
நீங்கள் உங்கள் ரொட்டிகளை,
ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள்.
இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்!
நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார்.
இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்…
ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டு விட்டு உறங்கினார்கள்…
பொழுது விடிந்தது, மழையும் நின்றது.
மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும் போது, உங்கள் உதவிக்கு மிக்க நன்றி,
என்று சொல்லி எட்டு தங்க நாணயங்களை கொடுத்து,
நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள், என்று சொல்லி விட்டு விடை பெற்றார்.
மூன்று ரொட்டிகளை கொடுத்தவர்,
அந்த காசுகளை சமமாகப் பிரித்து,
ஆளுக்கு நான்காய் எடுத்துக் கொள்ளலாம் என்றார்.
மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை.
மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.
ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.
மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை.
என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்த போதும், நான் பங்கிட சம்மதித்தேன்…
நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.
அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது, என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார்.
சுமுகமான முடிவு எட்டாததால், விஷயம் அரச சபைக்கு சென்றது.
அரசனுக்கு யார் சொல்வது சரி, என்று புரியவில்லை.
நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து, அரண்மனைக்கு சென்றான்.
மன்னருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை.
வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது…
மன்னருக்கு, கனவில் கடவுள் காட்சி அளித்து,
தீர்ப்பும்,விளக்கமும் தந்தார். கடவுள் சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அடுத்த நாள் சபை கூடியது.
மன்னர் இருவரையும் அழைத்தார்.
மூன்று ரொட்டிகளை கொடுத்தவருக்கு ஒரு காசும், ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.
ஒரு காசு வழங்கப்பட்டவர், “மன்னா…! இது அநியாயம்.
அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக் கொண்டார்” என்றான்.
அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள்.அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது.
அவன் தந்தது பதினைந்து துண்டுகள்.
அவனுக்கும் எட்டுத் துண்டுகள் தான் கிடைத்தது.
ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி.
அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள்.
ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன் என்றார்…
ஆம் ! கடவுளின் கணக்கு இப்படித் தான் துல்லியமாக இருக்கும்…
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஆண்டவர் இருக்கிறார் என்பதை ஒரு போதும் மறவாதீர்கள்.
வேதத்தில் பார்ப்போம்
தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்: தன் கண்களை ஏழைக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.
நீதிமொழிகள்:28:27.
ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக் கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும் போது கேட்கப்பட மாட்டான்.
நீதிமொழிகள்: 21:13.
கருணைக் கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்: அவன் தன் ஆகாரத்தில் தரித்திரருக்குக் கொடுக்கிறான்.
நீதிமொழிகள்: 22:9.
பிரியமானவர்களே,
நாம் செய்கிற ஒவ்வொரு கிரியைகளையும் ஆண்டவர் காண்கிறார். சிலர் நற்கிரியைகளையும், சிலரோ துர்க் கிரியைகளையும் செய்கிறார்கள்.
அத்தனைக்கும் அவர் பலன் கொடுக்கிறவராகவே இருக்கிறார். விசேஷமாக, கர்த்தருடைய நாமத்திற்காக நாம் காண்பிக்கிற பிரயாசங்கள், பரிசுத்தவான்களுக்கு நாம் செய்கிற ஊழியம், ஏழைகளுக்கு காண்பிக்கிற இரக்கம், இவற்றை எல்லாம் நம் அருமை ஆண்டவர் காண்கிறார்.
வறுமையில் வாடுகிறவர்களுக்கும் தேவையிலுள்ளவர்களுக்கும்
இரங்குகிறவன் செழிப்படைவான். ஆண்டவர் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கிறார்.
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்படி செய்கிறார். ஆண்டவருக்கு கடன் கொடுப்பவனை தேவ கிருபை சூழ்ந்து கொள்ளும். தேவ சமாதானத்தை பெறுவார்கள்.
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் [ஆண்டவர்] திரும்பக் கொடுப்பார்.”
நூறு மடங்கு திரும்பக் கொடுப்பார்.
அவர்கள் சந்ததிகள் ஆசீர்வாதமாயிருக்கும்
பாருங்கள், சிறிய ரொட்டித் துண்டு கொடுத்தான், ஆனால் அவன் பெற்றுக் கொண்டதோ தங்க காசு.
“உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்கு நிச்சயமாய் தண்ணீர் பாய்ச்சப்படும்.
தேவையில் இருப்போருக்கு கொடுக்கிற கரங்களை கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நிச்சயமாகவே ஆசீர்வதிப்பார்.
நாமும் தேவையில் இருப்போருக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து கர்த்தருடைய ஆசீர்வாதங்களை பெற்று வளமாய் வாழ கர்த்தர் தாமே நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.