கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம் பண்ணும். யோபு 5 :2.
எனக்கு அன்பானவர்களே!
பொறுமையின் பாதையில் நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஞானி ஒருவரை சந்தித்த சீடன் ஒருவன்,” சுவாமி! நான் ஞானம் பெற தாங்கள் எனக்கு உபதேசியுங்கள்” என்றான்.
ஞானி அவனை வேறொரு குருவிடம் செல்லுமாறு கூறி அவனை அனுப்பி வைத்தார். அவனும் அப்படியே சென்றான்.
ஏற்கனவே தான் சந்தித்த குரு கூறியதை அப்படியே கூறினார். உடனே அந்த குரு இன்னொரு குருவை சந்திக்குமாறு கூறி அனுப்பினார்.
அப்படியே பல குருமார்களை சந்தித்ததால் அவன் பொறுமை இழந்து, யார் தான் எனக்கு ஞான உபதேசம் செய்வார்கள்? என்பதை கேட்டு விட , முதலில் சந்தித்த குருவிடமே வந்தான்.
கண்கள் சிவக்க கோபத்துடனேயே குருவிடம் பேசினான், அப்பொழுது குரு, ஒருவனுக்கு ஞானம் ஏற்பட வேண்டுமானால் முதலில் பொறுமை தேவை.
பலவிதமாக பேசுவதை பொறுமையாக கேள், இறுதியில் உனக்கு எது எது சரியானது என்பதை அறிந்து நடந்து கொள். அது தான் ஞானம்.
குருவாகிய நாங்கள் எல்லாருமே ஞானம் பெறுவதற்காக தவமும், ஜெபமும் செய்து கொண்டு தான் இருக்கிறோம். பிறரிடம் உபதேசம் பெற்று விடுவதால் மட்டுமே ஞானம் கிடைத்து விடாது.
ஆதலால் முதலில் பொறுமையைப் பெற்று, அதன் பின் ஞானத்தை பெற முயற்சி செய் என்றார்.
பிரியமானவர்களே,
ஆவியின் நான்காம் கனி “நீடிய பொறுமை”. நாம் சாந்தத்துடனும், சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் மற்றவர்களிடத்தில் அன்பாகவும் இருக்க வேண்டுமென்றால், முதலாவது பொறுமையாக இருப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்.
தேவன் நம்மிடத்தில் இதை முக்கியமாக எதிர்பார்க்கிறார் அதுவும் நீடிய பொறுமையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். என்பதையே எதிர்பார்க்கிறார்.
வேதத்தில் பார்ப்போம்,
ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.
பிரசங்கி :7:8.
நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
1 தீமோத்தேயு: 6:11.
கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப் பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக.
2 தெசலோனிக்: 3 :5.
பிரியமானவர்களே,
ஆவியின் கனிகளில் ஒன்று நீடிய பொறுமையாகும். கர்த்தருடைய பிள்ளைகள் கிறிஸ்துவின் சாயலில் பூரணப்படுவதற்கு பொறுமை மிகவும் அவசியம்.
பொறுமையுள்ளவர்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருப்பார்கள்.
ஒரு சிறந்த ஆபரணம் செய்ய விரும்பும் தட்டான் அதிக பொறுமையாயிருக்க வேண்டும். அவன் இரும்பு, வெண்கலம் முதலியவற்றைத் தேடாமல், நல்ல பொன்னைத் தேடுகிறான்.
அதை பல முறைப் புடமிடுகிறான். அதிலுள்ள அழுக்கு, கழிவு முதலியவற்றை பொறுமையாய் நீக்குகிறான். மாத்திரமல்ல, சிறந்த வேலைப்பாட்டை, மிக நுணுக்கமாய் அந்த பொன்னில் அவன் செய்கிறான்.
ஒரு ஆபரணத்தை செய்யும் போது, இரவும் பகலும் உழைத்து மிகக் கருத்தோடு, மிக ஜாக்கிரதையோடு செய்து முடிக்கிறான்.
கர்த்தர் உங்களை விலையேறப் பெற்ற ஆபரணமாக மாற்றுவதற்காகவே, உங்களைப் பாடுகளின் பாதையிலும், உபத்திரவத்தின் குகைகளிலும் நடத்துகிறார்.
நீங்கள் பொறுமையை இழந்து விடுவீர்களென்றால், அவருக்கு உகந்த ஆபரணமாய் உங்களால் விளங்க முடியாமல் போய் விடும்.
பொறுமை உங்களை அலங்காரமுள்ளவர்களாய் மாற்றும் என்று யாக்கோபு எழுதுகிறார், “இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபுவின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்;கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்”
(யாக்கோபு:5:11).
யோபுவின் பொறுமை பரீட்சிக்கப்பட்ட போது, அவர் சொன்னார், “நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்”
யோபு 23:10. அப்படியே அவர் சுத்த பசும் பொன்னாக விளங்கினார்.
தன்னுடைய சிறையிருப்பின் காலங்களிலே யோபு மிகவும் பொறுமையாய் இருந்தார். சிறையிருப்பு மாறியதும் அவர் இரண்டத்தனையாய் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.
வேதத்திலும் நீங்காத இடம் அவருக்குக் கிடைத்தது. பொறுமையைக் குறித்து அருமையாக போதிக்கக் கூடிய சிறந்த பக்தன் ஒருவர் உண்டென்றால் அது யோபு தான் அல்லவா?
தேவபிள்ளைகளே, எல்லா சூழ்நிலையிலும் பொறுமையாயிருங்கள். வேதம் சொல்லுகிறது, “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப் பண்ணும். விரும்பினது வரும்போதோ ஜீவ விருட்சம் போல இருக்கும்”
(நீதிமொழிகள்: 13:12).
நீங்கள் பொறுமையோடு காத்திருக்கும் போது, கர்த்தர் நிச்சயமாகவே பதில் தந்தருளுவார்.
நாமும் இந்த நீடிய பொறுமையை பின்பற்றவும், தேவனுக்கு ஏற்ற ஆவியின் கனிகளை பெற்றுக் கொள்ளவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.