Daily Manna 223

தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன். நீதிமொழிகள்: 8:13.

எனக்கு அன்பானவர்களே!

புதியவைகளை வாழ்வில் நடப்பிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம்
சிலர் சென்று,
நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!
நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்…!

ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு,
அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து,
”எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா?”
என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ”என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள்”என்றனர். “ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் ,
இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு
வந்து இதை சேர்த்து விடுங்கள்” என்றார்.
அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.
அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி,
எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..!
புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..!
இப்போ சாப்பிட்டுப் பாருங்கள் தித்திக்கும் என்றார்…!

ஆர்வமுடன் வாங்கி வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது….. !
தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே…!என்று .
ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!
“பார்த்தார்கள்…?

பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்,
அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
அதைப் போலவே ,
நாம் நமது தவறான செயல்களையும்,
தீய பழக்கங்களையும் ,
துர்குணங்களையும் மாற்றிக் கொள்ளாமல்,

நாம் எத்தனை புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் ,எந்த, எந்த கோயிலுக்கோ , சர்ச்சுக்கோ, மசூதிக்கோ,
புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும்…
எந்த பயனும் வந்து விடப் போவதில்லை….

மாற்றங்கள்…!!மனங்களிலும், குணங்களிலும், வந்தால் தான்
வாழ்க்கை இனிமையாகும் என்றார் அந்த ஞானி….!!

வேதத்தில் பார்ப்போம்,

கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கிறது.
நீதிமொழிகள்: 15 :3.

துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.
நீதிமொழிகள்: 4 :14.

தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.
நீதிமொழிகள்: 8 :13.

பிரியமானவர்களே,

தேவன் மாத்திரமே சகலத்தையும் புதிதாக்குகிறவர். மனிதன் பல காரியங்களை புதுப்பிக்கும் படியாக முயற்சிக்கிறான். புதுப்பித்தாலும் அது நிலைத்து நிற்பதில்லை.

ஆனால் தேவனுடைய புதுப்பித்தல் நிலையானதும், நித்தியமானதுமாகும். ஆண்டவர் சொல்லுகிறார் “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா?

நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தர வெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்”
(ஏசாயா 43:19) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்யும் காரியங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக விதமாய் இருக்கும். வனாந்தரத்திலே வழியையும், அவாந்தர வெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவது எத்தனை ஆச்சரியமோ அந்த விதமாக இருக்கும்.

நம்முடைய வாழ்க்கையைக் கூட கர்த்தர் புதுப்பிக்கிறவராக இருக்கிறார். நமது கெட்டப் பழக்க வழக்கங்களிலிருந்தும், பாவ செயல்களிலிருந்தும் பாவத்தின் ஆளுகையின் பிடியிலிருந்து நம்மை மீட்டெடுத்து, புதிய வாழ்க்கைக்குள் நம்மை வழி நடத்தி வாழ செய்ய அவர் வல்லவர்.

பவுல் கொரிந்தியருக்கு எழுதும் பொழுது, “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின”
(2கொரிந்தி:5:17) என்று சொல்லுகிறார்.

தேவன் ஒரு மனிதனுடைய இருதயத்தை மாற்றும் பொழுது அவனுடைய முழு சரீரத்திலும் மாற்றம் காண முடியும்.

எல்லாமே புதிதாகிறது. மாற்றப்படாத இருதயத்தோடு வாழுகிற வாழ்க்கை, அது கிறிஸ்துவின் பெயரால் காணப்பட்டாலும், அது மெய்யான புதுப்பிக்கப்பட்ட வாழ்க்கையல்ல.

அருமையான சகோதரனே சகோதரியே, நீ ஒரு புதுப்பிக்கப்பட்ட நபரா? பரிசுத்த ஆவியானவரின் மூலமாக புதுப்பிக்கப்பட்ட, மறு பிறப்படைந்த வாழ்க்கையை நீ கொண்டிருக்கிறாயா?

கர்த்தரிடத்தில் உன்னை ஒப்புக்கொடு. உன்னுடைய பழைய வாழ்க்கையை புதுப்பிக்கிறவர் கர்த்தர் மாத்திரமே.

நீங்கள் எவ்வளவு நேரம் ஜெபம் செய்தாலும், அல்லது பல மணிநேரம் வேதம் வாசித்தாலும் உள்ளான ஒரு மாற்றம் நம்மில் வராமல் நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் ஆண்டவருக்கும் எந்த விதமான பயனும் இல்லை.

அர்த்தமற்ற நம்முடைய வாழ்க்கையை, பிரயோஜனமுள்ள ஒரு வாழ்க்கையாக மாற்ற ஆண்டவரால் மட்டுமே முடியும்.

ஆகவே நமது பழைய தீமையான வாழ்க்கையை விட்டு மனந்திரும்பி நல்வாழ்வை அமைத்து கொள்வோம்.

கர்த்தர் தாமே இத்தகைய புதிய வாழ்வை, புதுசிருஷ்டியாகிய நமக்கு தந்து வழிநடத்தி காப்பாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *