Daily Manna 224

பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும் படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப் போகிற சோதனைக் காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். வெளி:3 :10.

எனக்கு அன்பானவர்களே!

நம்மை பொன்னாக விளங்கச் செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு நாள் மூன்று வயது மகன் தன் பெற்றோருக்கு தெரியாமல் பீரோவை திறந்து ஏதோ ஒரு பொருளை எடுத்துத் தின்று விழுங்கி விட்டான்.

அதற்கு அந்த தாயும், தகப்பனும், அந்த சிறுவனை கன்னத்தில் அறைந்தார்கள். தொடர்ந்து நான்கு மணி நேரங்கள் அடித்துக் கொண்டே இருந்தார்கள்.

அந்த சிறு குழந்தை அழுது அழுது தூங்கக் கண்களை மூடினாலும் விடவில்லை. முகத்தில் தண்ணீரை தெளித்து, தோளைப் பிடித்து, குலுக்கி, காதை திருகி தொடர்ந்து நான்கு மணி நேரம் அந்த தண்டனை நிறைவேறினார்கள்.

அந்த சிறுவன் செய்த தவறுக்கு அவ்வளவு கடினமான தண்டனையா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆனால் அந்த தண்டனை அன்பினால் வெளிப்பட்டது என்பதை பின்னர் தான் அறிய முடிந்தது.

நடந்தது என்னவென்றால், அச்சிறு குழந்தை பீரோவை திறந்து கைக்கு கிடைத்த தூக்க மாத்திரைகளில் சிலதை எடுத்து விழுங்கி விட்டது. டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள்.

அவர் சுமார் நான்கு மணி நேரம் குழந்தையை தூங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது குழந்தை சரியாகி விடும்.
ஒரு வேளை தூங்கி விட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று கூறியிருந்தார்.

ஆகவே தான் அந்த பெற்றோர், குழந்தையை அடித்து, கிள்ளி, காதை திருகி தூங்க விடாமல் செய்து, அந்த உயிரை காப்பாற்றி விட்டனர்.

ஆம், பெற்றோர் அவனை தண்டிக்கவில்லை. தன் அன்பு அருமை மகனை காப்பாற்றவே இந்த அன்பினிமித்தம் சிட்சித்தனர்.

நீதி 3:12. -ல் தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறது போல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார் என்று பார்க்கிறோம்.

நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாத படிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். 1 கொரி:11:32. என்று வேதம் நமக்கு தெளிவாக கூறுகின்றது.

நம்முடைய வாழ்விலும் நாம்
கர்த்தருடைய சிட்சையை அனுபவிக்கும் அந்த நேரத்தில் நாம் புலம்பித் தவிக்கின்றோம்.

ஆனால் அந்த சோதனையின் வழியாக ஆண்டவர் நமக்கு செய்த நன்மைகளை நினைக்கும் போது நம் இருதயம் பூரிப்படையும்.

வேதத்தில் பார்ப்போம்,

என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்து கொள்ளப்படும் போது சோர்ந்து போகாதே.
எபிரெயர் :12:5.

நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிப்பறி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
சங்கீதம்:119:67

எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
எபிரேயர்:12:11

பிரியமானவர்களே,

ஆபிரகாம் ஈசாக்கை பலியிட சோதிக்கப்படுதல், யோபுவின் சோதனை போல நாமும் அநேக நேரங்களில் நாம் தனிமையில் கஷ்டப்படுவதை போலவும், கைவிடப்பட்டதைப் போலவும் உணரலாம்.

‘இதோ நான் முன்னாகப் போனாலும் அவர் இல்லை, இடது புறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன், வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.

ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னை சோதித்தப் பின்பு நான் பொன்னாக விளங்குவேன்’
யோபு 23: 8-10 என்று யோபு கூறுகிறார்.

சோதனையை நாம் பொறுமையோடு சகித்தால் அதன் பின் பொன்னாக விளங்குவோம் என்று வேதம் நமக்கு தெளிவாக கூறுகின்றது.

இதிலிருந்து நாம் ஒன்றை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும். நமக்கு வருகிற சோதனைகள் நம்மை வீழ்த்த அல்ல. அது நம்முடைய மேன்மைக்காகவே, நம்மை பரிசுத்தப்படுத்தவே வருகிறது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஆம் பிரியமானவர்களே,
நமக்கு வரும் சோதனைகளை கண்டு நாம் மனம் வருந்தாத படி,
அச்சோதனையிலிருந்து நம்மை வெற்றி பெற செய்து நம்மை பொன்னாக விளங்க செய்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே சார்ந்து கொள்ளுவோம்.

கர்த்தர் தாமே இத்தகைய வெற்றியுள்ள வாழ்வை வாழ கிருபை செய்வாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *