அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள். ஆதியாகமம்: 19 :26
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
குஜராத்தில் பூஜ் என்ற இடத்தில் சில வருடங்களுக்கு முன் பூகம்பம் ஏற்பட்டு வீடுகளெல்லாம் அழிந்து போயின.விழுந்து நொறுங்கிப் போயிருந்தன.
அதன் வீடுகளருகே குடிசைப் போட்டு கொண்டு, புழுதியாய் கிடக்கும் வீட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த மக்களின் அவல நிலையை பார்த்த ஒருவர் கூறுகின்றார். அதை பார்க்க அத்தனை வேதனை நிறைந்ததாக இருந்தது.
அதைப் போன்று “சுனாமி” என்கிற மாபெரும் கடலைலைக்கு தங்கள் வீடுகளைப் பலி கொடுத்து விட்டு அடுத்து செய்வதறியாது தவித்து நின்ற பெண்களின் நிலையைப் பார்த்து பல இரவுகள் நான் தூக்கமின்றி இருந்திருந்தேன் என்றார்.
ஒரு ஊரில் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒருநாள் யாரோ ஒருவர் வந்து இந்த ஊர் அழியப் போகிறது எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப் போங்கள் என்றால் எப்படி ஒட முடியும்?
லோத்தின் மனைவி ஒரு தாய், தன் குடும்பத்தையும் , தன் வீட்டையும் அதிகமாய் நேசித்தவள்.தன் வீட்டையும், சொத்துகளையும் விட்டு மாத்திரம் அல்ல,அவளோடு இத்தனை வருடங்கள் அன்பாக வாழ்ந்த, பழகின அத்தனை மக்களையும் ஊரையும் விட்டு வெளியேற வேண்டும்.
அடுத்து அவர்களுக்கு துரிதமாய் வர இருக்கும் அழிவை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்ல!
“Fevi Kwik” என்ற பசை கொஞ்சம் தவறினால் நம் கை விரலை கூட இணைத்து விடும். லோத்தின் மனைவியை சோதோமின் ஆடம்பர வாழ்க்கை “Fevi Kwik” போட்டு ஒட்டியதை போல பிணைத்திருந்தது.
சோதோமில் அவள் வாழ்ந்த வீடு இருந்தது, அவர்கள் சம்பாதித்த சொத்து இருந்தது.அதனால்தான் தேவ தூதர்கள் அவள் கையை பிடித்து அவளை சோதோமுக்கு வெளியே கொண்டு வந்த போது அவள் சரீரம் வந்ததே தவிர அவள் மனது அங்கேயே இருந்தது.
அவள் உலகத்தையும் உலகத்தில் உள்ளவைகளையும் அதிகமாய் நேசித்தாள்.
ஆனால் ஆண்டவரின் சத்தத்திற்கு உண்மையாய் கீழ்ப்படியாத காரணத்தினால், உப்பு தூண் ஆனாள் என்று பார்க்கிறோம்.
வேதத்தில் பார்ப்போம்,
அவன் தாமதித்துக் கொண்டிருக்கும் போது கர்த்தர் அவன் மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.
ஆதியாகமம்: 19:16.
அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.
ஆதியாகமம்: 19:26.
லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.
லூக்கா :17 :32.
பிரியமானவர்களே,
டி.எல்.மூடி அவர்கள் மிக அழகாக இந்த சத்தியத்தை ஒரு உதாரணத்தின் மூலம் கூறியுள்ளார்.
படகு தண்ணீரில் காணப்பட்டால் அது நல்லது. ஆனால் படகில் தண்ணீர் காணப்பட்டால் அது அழிவுக்கேதுவானது. லோத்து தாமதித்ததன் காரணம். படகில் தண்ணீர் இருந்ததினால், அதாவது அவன் சோதோமை நேசித்தப்படியால் அவனும் அழிந்து போகத்தக்கதாக அழிவின் விளிம்பில் காணப்பட்டான்.
லோத்துவிடம் காணப்பட்ட குழப்பத்தைக் குறித்து டான் கோல் என்பவர் இவ்விதம் எழுதுகிறார். லோத்துவின் ஆத்துமா மிகவும் சாதுரியமானது. ஆனால் அதுவே அவனை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றது.
அவன் வெறுப்பும், கோபமாய் இருந்திருக்க வேண்டிய வேளையில் அமைதியாய் இருந்தான். பாவத்தைக் கண்டு சாதுரியமாய் இருப்பதை விட கூர்மையற்ற கத்தியாய் இருப்பதே மேல்.
லோத்து பிரச்சனைகளின் மத்தியில் சமரசம் பேசுவதில் வல்லவன். அவன் நாவு மிக மென்மையானது. அதனால் தான். அவன் பிழைக்கச் சென்ற இடத்திலும் பாவம் நிறைந்த அம்மக்கள் மத்தியில் தலைவனாக உயர முடிந்தது.
எனவே சோதோமின் சூழலோடு அவன் இணக்கமாக இருந்தான். அப்படி இல்லாதிருந்தால் அவன் என்றைக்கோ சோதோமை விட்டு வெளியேறி இருந்திருப்பான்.
போதுமான மனசாட்சி இல்லாததே அவனை அங்கு தங்கச் செய்தது.
நீங்கள் ஒன்று உலகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அல்லது தேவனைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நிச்சயமாக இரண்டையும் ஒருசேர கொண்டிருக்க முடியாது.
இரண்டு எஜமான்களுக்கு ஒருவன் ஊழியம் செய்ய முடியாது. ஒருவேளை அப்படி வாழ நினைத்தால், லோத்துவைப் போல் அனைத்தையும் இழந்து விட வேண்டிய சூழல் ஏற்படும்.
ஆகவே உலகத்தில் உள்ளவைகளில் அன்பு கூறாத படிக்கு நம் இருதயத்தை காத்து, கர்த்தரின் வருகைக்கு ஆயத்தமாவோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு ஆசீர்வாதமான வாழ்வை அருளிச் செய்து, நம்மை செம்மையான வழியில் நடத்தி காப்பாராக.
ஆமென்.